Saturday, February 11, 2023

திருப்பங்களும் முட்டுச்சந்துகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திருப்பங்களும் முட்டுச்சந்துகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திருப்பங்களாலான உறவில்
தருணங்கள் ஒவ்வொன்றும் தேசிய நெடுஞ்சாலைகளாய்_
நகர வீதிகளாய் _
இருசக்கர வாகனங்களும்
சின்ன பெரிய குப்பைத்தொட்டிகளும்
இடம்பெற்றுள்ள
தெருக்களாய் குறுக்குத்தெருக்களாய் _
தெருக்களின் விரிவுகளாய்_
நழுவி யகன்று குறுகிச் சுருண்டு
இருமருங்கும்
சாக்கடையோரங்கள் கொண்ட,
சைக்கிள்கள் முட்டவருகின்ற
சந்துபொந்துகளாய் _
காலணிகளை மீறி நெருடும்
கட்டாந்தரை குண்டு குழியென
குறுக்கும் நெடுக்குமாய்
கால்கடுக்கத்தேடித்தேடியலைந்து
களைக்கும் நேரமெல்லாம்
அனிச்சையாய் மனதிற்குள் கிண்கிணி மணியோசை
கலந்தொலிக்குமப் பிரார்த்தனை
’அடுத்த திருப்பத்தில் நானிருப்பது
முட்டுச்சந்தாகிவிடலாகாது.
அப்படியே முட்டுச்சந்தாகிவிட்டாலும்
அதில் எனக்கான வானமும் பூமியும்
சந்திர சூரிய மண்டலங்களும் கொண்ட
பிரபஞ்சம்
அந்தரத்திலாவது அமைந்திருக்கட்டும்.

No comments:

Post a Comment