Sunday, January 1, 2023

பூனைமனம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பூனைமனம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

(* 1.1.2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில்
நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம்.
நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point
வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன?
அது ஆணா பெண்ணா தெரியாது.
அதற்கு எத்தனை வயது - தெரியாது.
அது எங்கிருந்து வருகிறது – தெரியாது.
அதற்கான நீள்வட்டப்பாதையின் ஆரம், விட்டம் –
சுற்றளவு
- எதுவுமே தெரியாது.
விளங்கவியலாச் சீட்டுக்குலுக்கலனைய வாழ்வியக்கத்தில்
குறைகாலம் கூட்டுச்சேர்ந்தது போலவே
கையாட்டி விடைபெறாமல் காணாமல் போனது.
தாறுமாறாய்ச் சீறிப்பாயும் இரண்டு, மூன்று,
நான்கு சக்கர வாகனங்களில் அறைபட்டிருக்குமோ
என்ற நினைப்பில்
அடிவயிறு கலங்குகிறது.
நான் தரும் தண்ணீர் பால்சோறைவிட மேலான
அறுசுவை சைவ அசைவப் பதார்த்தங்கள்
அதற்கென்றே ஓர் அழகிய தட்டில் வைத்துத்
தரப்படும்
புதிதாய்த் திறக்கப்பட்டிருக்கும் உணவு விடுதியின் பக்கமாய்
நிழலடர்ந்த மரத்தடியில் குடிபெயர்ந்திருக்கிறது
என்று எனக்கு நானே தெரிவித்துக்கொள்கிறேன்.
'மனதின் பாரத்தை இறக்கிவைக்க
கண்ணில் படும் மதில்மேல் ஏறிக்கொள்ளப் பழகவேண்டும்
கற்பனையில் கிடைத்த பூனைக்கால்களோடு'
என்று
என்றேனும் நாங்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால்
என்னிடம் சொல்லக்கூடும்
என்னருமை black commando.
*** ***

No comments:

Post a Comment