Saturday, December 17, 2022

’காவல் சுவடுகள்’ கல்லுக்குள் ஈரத்தை தொட்டுக் காட்டும் கவிதைகள்! காவல்துறையில் பணிபுரியும்கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு

 காவல் சுவடுகள்கல்லுக்குள் ஈரத்தை தொட்டுக் காட்டும் கவிதைகள்! காவல்துறையில் பணிபுரியும் கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில!

 - லதா ராமகிருஷ்ணன் -

  (07 டிசம்பர் 2022 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)


  //காவல்துறையில் பணியாற்றும் கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு காவல் சுவடுகள். அது குறித்து நான் எழுதிய சிறு அறிமுகக் கட்டுரை பதிவுகள். காம் இல் வெளியாகியுள்ளது. பதிவுகள் ஆசிரியர் திரு வ.ந.கிரிதரன் அவர்களுக்கு நன்றி. கட்டுரையை முழுமையாக வாசிக்க www.pathivukal.com//

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான காவல் சுவடுகளைப் படித்த போது மேற்காணும் எண்ணங்கள் மனதில் எழுந்தன. தான் பணியாற்றும் காவல் துறையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு இது. இத்தகைய கவிதைகள் வெறும் புலம்பலாகவும், பிரச்சார முழக்கங் களாகவும், சுய விளம்பரமாகவும் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி யாகவில்லை என்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனை சமகாலத் தமிழ்க்கவிதை வெளியில் நிறுவுகிறது எனலாம்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பொதுப்புரிதல் அவர்கள் கடுமையானவர்கள், அதிகாரத்தை மக்கள் மீது தவறாகப் பிரயோகிப்பவர்கள்இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆசாபாசங்கள் மிக்க, சமூகப்பிரக்ஞையும் மனிதநேயமும் நிறைந்த மனிதர்களாகத் தனது கவிதைகளில் எளிய, அதேசமயம் கவித்துவம் குறையாத மொழிநடையில் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர் வசந்தன்.

பணிசெய்யும் காலம்என்ற தலைப்பிட்ட கவிதை இது.

அப்பாவிற்கு எடுத்து வைத்து இருப்போம்
சாப்பாடும் தண்ணீரும்
பெரும் பசியோடு வருபவர் உண்பதில்லை
உறங்கும் எங்கள் விழிகளில் இளைப்பாறிவிட்டு
உறங்காமலேயே சென்றுவிடுவார்
நிலவும் சூரியனும் பணி செய்யும் காலம் அது.

இந்தச் சிறு கவிதைஉறங்கும் எங்கள் விழிகளில் இளைப்பாறிவிட்டு’, - ‘நிலவும் சூரியனும் பணிசெய்யும் காலம் அதுஎன்ற இரண்டு வரிகளின் கவித்துவத்தில் தன்னைக் கவிதையாக்கிக்கொண்டுவிடுகிறது! ’உறங்கும் எங்கள் விழிகளில் இளைப்பாறிவிட்டுஎன்ற வரி காக்கிச்சட்டைக்குள் ஒரு கடமைதவறாத, அன்புமிக்க தகப்பனைக் காணச்செய்கிறது என்றால்நிலவும் சூரியனும் பணிசெய்யும் காலம் அதுஎன்ற இறுதி வரி காவலரை பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக, இயற்கைச் சக்தி களின் தன்னலமற்ற இடையறாத பணியைப் போலவேகருமமே கண்ணாகச் செயலாற்றுபவர்களாகளாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிலவும் சூரியனும் பணிசெய்யும் காலம் அது என்ற இணைவின் மூலம் ஒய்வில்லாத தொடர்ச்சியான தங்கள் பணியின் தன்மையை நுட்பமாகப் புலப்படுத்திவிடுகிறார் கவிஞர்!

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஆரவாரமில்லை; அலங்காரமில்லை. அழுத்த மும் அடர்செறிவும் இந்தக் கவிதைகளைக் கவிதையாக்குகின்றன. எடுத்துக்காட்டாகபொறுப்புகள்என்ற தலைப்பிட்ட கவிதையைக் குறிப்பிடலாம். அதில் இடம்பெறும் _

நிச்சயிக்கப்பட்ட நேரங்கள் மிகப் பொறுப்பாக
எவ்வளவு உயர் அதிகாரியெனினும்
கழிவறைகளில் உறங்குவதை
நீங்கள் அறியமாட்டீர்கள்

_
என்ற வரிகள் வாசிப்பவர் மனங்களில் நிச்சயம் அதிர்வுண்டாக்கும். அதேபோல்

காதல் பாடலை, தெருச் சந்தடிகளை யூனிபார்மில் / வைத்தே தைக்கிறார்கள் டெய்லர்கள்/ என்ற வரிகள் எத்தனை அடர்செறிவானவை!

இந்தக் கவிதையின் இறுதிவரிகள் சமூக சீர்கேடுகளின் மீதான சாட்டையடிகள்!

பூட்ஸ் காலணிகளை கழற்றும்போது குழந்தைகள்
நாற்றம் தாங்கவில்லை என்கிறார்கள்
சமூகம் நாறுவதை விடவா தேவனே

கடவுள் மறுப்பு, கடவுளின் இருப்பு குறித்த குழப்பம், கடவுள் வெறுப்பு, கடவுளிடம் கோபம், கடவுள் நம்பிக்கையுடையவர்களை மதிப்பழிக்க கடவுளைப் பழித்தல், குறிப்பாக ஒரு மதத்தைச் சார்ந்தவர்களின் கடவுளர்களைப் பழித்தல், மதிப்பழித்தல் என மனிதர்கள் கடவுள் என்ற கருத்தாக்கத்தோடும், நம்பிக்கையோடும் ஒட்டியும் வெட்டியும் பலவகையாகத் தொடர்புறவாடுகிறார்கள். கவிஞருடைய ஒரு கவிதை யில் கடவுளுக்குக் கைவிலங்கு பூட்டுகிறார் காவலர்! அவருடைய கோபம்தனி யொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை யழித்திடுவோம்என்றவிதமான கோபம்!

நகரத்தின் மைய வீதிகளில்
பகல் முழுக்க சுற்றி வருகிறாள்
சிலநேரம் வலி தாளாது
நடை பாதை ஓரம் உள்ள இருக்கையில்
அமர்கிறாள்

உக்கிரத்தில் சொட்டுகிறது
நீங்கள் நினைப்பதுபோல் வியர்வையோ
கண்ணீரோ அல்ல
அங்கே யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
நான் விசாரிக்கிறேன்
கடவுள் எனது பெயர் என்கிறான்
எனது கைவிலங்கை பூட்டுகிறேன்

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்துமுடிக்கும்போதுகாவல்துறையினர் மனிதாபிமானம் அற்ற அரக்ககுணம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் என்பதாய் காலங் காலமாக நம்மிடம் உருவேற்றப்பட்டிருக்கும் மொண்ணைத்தனமான, மொந்தைத் தனமான புரிதல் விலகிவிட்ம். காவல் துறையினரும் சகமனிதர்களே என்ற புரிதல் நமக்கு ஏற்பட்டுவிடும் என்பது உறுதி. இந்ப் புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதில் எத்தனை இயல்பாக, ஆத்மார்த்தமாக இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் கவிமனம் இயங்குகிறதுஎந்தவொரு வலிந்தேற்றலோ. வானளவாவியப் பிரகடங் களோ, பீடத்திலிருந்து தரப்படும் அறிவுரைகளோ, மக்களைப் பழித்துரைக்கும் மனப் போக்கோ, இலக்கிய பீடங்களின் தனிக் கவனத்தைக் கோரிப் பெறுவதற்கான முனைப்போ, எத்தனமோ எதுவும் இல்லாமல் ஒரு காவலராக, மனிதராக தன்னு டைய கவிதைகளில் வெகு இயல்பாக, எளிமையாக, அதே சமயம் ஆழமாக, அந்தரங்கசுத்தியோடு வெளிப்பட்டிருப்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனுக்கும் அவர் பேச எடுத்துக்கொண்டுள்ள கருப்பொருளுக்கும் வலிமை சேர்க்கிறது; நியாயம் செய்கிறது.

நீர்மை பதிப்பகம் மூலம் வெளியாகியிள்ள இந்தக் கவிதைத்தொகுப்பின் நூலாக்கமும் மிக நேர்த்தியாக உள்ளது. பக்கங்களில் ஆங்காங்கே தரப்பட்டுள்ள காவர்களின் கோட்டுச்சித்திரங்களும் புகைப்படங்களும் துருத்திக்கொண்டு நிற்காமல் கவிதை களோடு பொருந்தியமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘பயணங்களில் ஜன்னலோர இருக்கையினைத் தவிர்த்துவிடுவேன். அங்கே நானறிந்த வலியினை ஆனந்தன் உணர்ந்தும், உணர்ந்ததைக் கேட்டுமிப்படி எழுதியிருக்கிறார்’ என்று ஒரு தேர்ந்த வாசிப்பாளராக, மனிதம் நிறை மனிதராக கவிஞரைப் பற்றி அணிந்துரை தந்திருக்கிறார் ‘சார்-ஆட்சியர் இரா.ரவிக்குமார்,

‘மக்களின் எதிரிகள் போல் சித்தரிக்கப்படும் இவர்களிடமிருந்து ஒரு கவிஞன் தன் கவிதைகளை காவல்துறையின் துன்பங்களுக்கு மத்தியில் இருந்து சிவில் சமூகத்திற்கு முன்வைக்கிறான்’ என்று இந்தக் கவிதைத்தொகுப்பின் அடிநாதத்தைத் தன் கட்டுரையில் கச்சிதமாகச் சுட்டிக்காட்டும் கவிஞர் யவனிகா ‘மொத்த காவல் துறைக்கும் நிம்மதியாக உறங்கும் ஒரு கவிஞனின் இரவுநேர வந்தனங்கள். அன்பும், நன்றியும் மக்களே!’ என்று மனதார நன்றி தெரிவித்துத் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.

இந்தப் புரிதலும், நன்றியுணர்வும், தோழமையுணர்வும் இந்தக் கவிதைத் தொகுப்பை வாச்க்கும் யாருக்கும் தவிர்க்கமுடியாமல் ஏற்படும். இதுவே இந்தக் கவிதைகளின் கவித்துவமான நோக்கமும் இலக்கும் என்பதை உணர முடிகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் வேதனையை இன்னொரு பெண்ணே துல்லியமாக உணரமுடியும் என்பது மேலோட்டமான பார்வை. ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனை அந்நியப் பெண்ணுக்கு பல நேரங்களில் வெறும் செய்தியே. அதுவே, அந்தப் பெண்ணின் தந்தை,சகோதரர்கள், நண்பர்களுக்கு நரக வேதனை. இதேபோல் எந்தவொரு துறை குறித்தும், நிகழ்வு குறித்து அதில் நேரடி யாக இடம்பெறுபவர்கள் அதைப் பற்றிக் கூறுவதிலும், நடந்த நிகழ்வை, அல்லது ஒரு குறிப்பிட்ட துறையை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அதைப் பற்றிக் கருத்து ரைப்பதிலும் ஓர் அடிப்படை வேறுபாடு கண்டிப்பாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஈழம் விடுதலைப்போரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். (அந்தச் சூழலில் இருந்தவர்கள், இலங்கைச் சூழலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதைப்பற்றிப் பேசுவதிலிருந்து அதை தொலைவிலிருந்து பார்த்தவர்கள், கருத்தியல்ரீதியாக அதை அணுகுபவர்கள் அதைப் பற்றிப் பேசுவது தொனியிலும், பயன்படுத்தப்படும் சொற்களி லும், நிறையவே வேறுபடுகிறது. இவ்வகையில், காவல்துறையைச் சேர்ந்தவர் அதைப் பற்றிப் பேசுகிறார் என்ற அளவிலும் இந்தக் கவிதைத்தொகுப்பு முக்கியத் துவம் வாய்ந்ததாகிறது.

தன் துறையிலுள்ள குறைகளை, கறுப்பு ஆடுகளைக் கவிஞர் சுட்டிக்காட்டவில் லையே, கட்டங்கட்டிக் காட்டவில்லையே என்று சிலர் குறை சொல்லலாம். ஆனால், ஒரு கவிஞரின் வேலை ஒரு துறை சார்ந்தவர்களும் மனிதர்களே என்று மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் அந்தத் துறையில் உள்ளவர்களுக்கும் அதை உட்குறிப்பாகச் சுட்டிக்காட்டி சக மனிதர்களிடையே – தன் துறை சார்ந்தவர்களும் சரி, வாழ்வின் மற்ற துறைகளில், மற்ற நிலைகளில் இருப்பவர்களும் சரி – எல்லாத் தரப்பினரிடமும் மனிதத்தை, சமூகப்பிரக்ஞையை, தனிமனித மேன்மையைக் கொண்டுவருதல்தானே எந்தவொரு உண்மையான இலக்கியப் படைப்பின் நோக்கமும் இலக்கும்! அப்படித்தான் இந்தத் தொகுப்பை நான் பார்க்கிறேன்.



உலக இலக்கியங்களில் கைதிகள் எழுதியுள்ளவை இடம்பெற்றிருக்கின்றன. கைதிக ளைப் பற்றி எழுதப்பட்டவை இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசியல் கைதிகள். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களின் எழுத்துகள், அதாவது காத்திரமான, இலக்கியத்தரமான படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றனவா, இடம்பெற்றிருக்கின்ற னவா, தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் இல்லை. அவ்வகையில் தோழர் வசந்தனின் இந்தக் கவிதைத் தொகுப்பு உலக அளவிலான முன்னோடிக் கவிதைத் தொகுப்பாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்குரிய கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவேண்டும் என்று விரும்புகிறேன்; பெறும் என்று நம்புகிறேன்.

Published by NEERMAI PATHIPPAGAM
Vilaripalayam (Po)
Vazhapadi (Tk)
Salem (Dt)-636 115

Rs. 100 /-
+91 6369 122 133
vasanthanm18@gmail.com


No comments:

Post a Comment