Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 11-15 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 11-15

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


11. சந்தைப் பொருளாதாரம்
……………………………………………………………

பெருவியாபாரிகளும் சிறுவியாபாரிகளும்
பெருகிக்கொண்டிருக்கும் வாங்குவோரும்
நிறைந்ததே சந்தையாக
அன்றாடம்
அரைப்படியை ஒரு படியாக
அளந்துகொண்டிருக்கும்
அரசியல் குத்தகையாளர்களின் வியாபாரம்
அமோகமாய் நடந்துகொண்டிருக்கிறது.


12. பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா….
………………………………………………………………………................................

”பச்சை என்றுதான் சொன்னார் அவர்”
இல்லை அவர் நீலம் என்று சொன்னார்"
”இல்லை பச்சையை பச்சை என்றுதான் சொன்னார் அவர்”
”இல்லவேயில்லை - அவர் பச்சை பச்சையாகப் பேச மாட்டார்”
பச்சை என்பதற்கும் பச்சை பச்சை என்பதற்கும்
பாரிய வித்தியாசம் உண்டென்பதை அறியாமல்
அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல்
இறந்துவிட்டவரின் பச்சையை
நீலமாக விரிப்பவர்
நிச்சயம் மனிதநேயவாதி தான் என்பதை நம்பித்தானாகவேண்டும்!
கொச்சைவசைக்குத் தப்ப
இச்சமயம் இஃதொன்றே கச்சிதமான வழி!


13. பிறழ்மரம்
............................................................................................................
பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும்
கூர்முள் கிளைகளெங்கும்
கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும்
பசிய இலைகளெங்கும்
பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும்
இளைப்பாற இடம் வேண்டுமா
முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி
மெல்லச் சிரித்தவாறு கூறியது சிட்டுக்குருவி:
’முதலில் நீ மரத்தின் தன்மையை அறியப் பழகு.
நிழல் பூ காய் கனி யென்றாயிரம் மரங்கள்
இங்குண்டாமென அறிதலே அழகு’.

14. மறுவாசிப்பு
........................................
முதல் வாசிப்பில் ‘அ’ ’அ’வாகவே கண்டது.
அஃ, அஃகாக.
எஃகை பித்தளையாக்குவது எப்படி என்று புரியாமல்
சற்றே தத்தளித்த பின்
திடமனதுக்காரனை மடாக்குடியனாக்கி
’பாவம் தலைக்கேறிய போதையில் அவன்
கதைத்ததைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டாம்’.
என்பவரின் கருணைமனதை
அடிக்கோடிட்டுக் காட்டிப் பாராட்ட
ஆட்களை ’செட்டப்’ செய்வதும்
ஆய்வலசலின் திட்டப்படியான தொரு
நாட்பட்ட அம்சமாக…


15. கட்டுடைப்பு
.............................................................................
முண்டாசுக்கவியை முட்டி மோதி மிதித்த யானை
தானே யப்படி செய்யவில்லை
அதன் சின்ன வாலை முறுக்கிக் கோபமூட்ட
ஏவப்பட்டவர்கள்
ஆனான எட்டுபேர் என
மானே தேனேவை இடையிடையே கொண்டுவந்து
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாகச்
சொல்லப்பட்டதைக் கேட்டு
ஆட்டங்கண்ட
காட்டு யானைகளெல்லாம்
கதிகலங்கித்
தறிகெட்டோடத் தொடங்கின!





முதல் வாசிப்பில் ‘அ’ ’அ’வாகவே கண்டது.
அஃ, அஃகாக.
எஃகை பித்தளையாக்குவது எப்படி என்று புரியாமல்

சற்றே தத்தளித்த பின்
திடமனதுக்காரனை மடாக்குடியனாக்கி
’பாவம் தலைக்கேறிய போதையில் அவன்
கதைத்ததைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டாம்’.
என்பவரின் கருணைமனதை
அடிக்கோடிட்டுக் காட்டிப் பாராட்ட
ஆட்களை ’செட்டப்’ செய்வதும்
ஆய்வலசலின் திட்டப்படியான தொரு
நாட்பட்ட அம்சமாக….




No comments:

Post a Comment