Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 1 - 5 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

   சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 1 - 5

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

.....................................................................................

1. பாரதி அறங்காவலர்கள்

...............................................................................
’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து
இப்படி எழுதினார்’, என்றவரும்
’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து
இப்படி எழுதினார்’ என்பவரும்
பாரதியின் வாரிசுகள் அல்லவே யல்ல
என்று சொல்லாமல் சொல்கிறது
இல்லாத அவரின் உயில்.


2. அறிவுடைமை
....................................................................................
உளறுவாய்களால் ஆனது உலகம்
உனக்கு நான் உளறுவாய்
எனக்கு நீ உளறுவாய்
உனதுளறல்களெல்லாம் உனக்குத்
திருவாய் மலர்ந்தருளலாய்.
எனதோ
பொருளற்ற வெறும்பேச்சாய்.
உனது பெருமூச்சும் வீரமுழக்கமாய்.
எனதோ
நோய்மையின் பலவீன முனகலாய்.
ஆயகலைகள் அறுபத்திநான்குக்கும்
நீயே அதிபதியாக இரு.
அதனாலென்ன?
அதற்கு மேலும் எண்களுண்டுதானே!




3. மென்வன்முறை
....................................................................................
மேடையில் முழங்கிக்கொண்டிருந்தவர்
மீண்டும் மீண்டும் மனதாரச் சொல்லிக்கொண்டிருந்தார்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் ஆணவம் பிடித்தவர்கள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அசிங்கம்பிடித்தவர்கள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அயோக்கியசிகாமணிகள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அப்பட்டமான கயவாளிகள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அவசியம் கொல்லப்படவேண்டியவர்கள்
அட அட என்னவொரு அரிய நடுநிலைப்பார்வை
என்று எண்ணியவாறே
தன்னிடமிருந்த அரிவாளை அல்லது அருவாமனையை
கூர்தீட்டத் தொடங்கினார்
உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தவர்.


4. விருந்துபசரிப்பு
.....................................................
உள்ளே மண்டிக்கிடக்கும் பகையுணர்வை
வெள்ளைவெளேரென ’விம்’ போட்டு விளக்கிய
பாத்திரத்திலிட்டு
உப்பு புளி மிளகாய் பெப்பர் கொஞ்சம் சர்க்கரை
வெல்லம் தேன் சேர்த்து
உகந்த வெப்பத்தில் கொதிக்கவைத்து
சிறிதே நெய்யூற்றி லவங்கப்பட்டையிட்டு
நறுமணமேற்றி
அலங்காரத்தட்டுகளில் பரப்பி
அழகிய கரண்டியோடு
ஆளுக்கொன்று தந்தால்
அதையும் சப்புக்கொட்டிச் சாப்பிட
ஆளிருக்க மாட்டார்களா என்ன?

5. செய்தித்தாள்
..........................................
இருவருமே செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்.
”நான் செய்தித்தாளைப் படிப்பவள்” என்றாள் ஒருத்தி.
”நானும்தான்” என்றாள் மற்றவள்.
”இல்லை, நீ செய்தித்தாளில் படம் பார்ப்பவள்;
செய்தித்தாளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்துபவள்;
செய்தித்தாளைத் தரையில் பரப்பி அதன்மீது
படுத்து உறங்குபவள்;
செய்தித்தாளை உருண்டையாகச் சுருட்டிப் பந்து செய்து
பக்கத்துவீட்டுக் குழந்தையோடு விளையாடுபவள்;
செய்தித்தாளை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து
அடுப்பங்கரையில் கையைத் துடைத்துக்கொள்பவள்….
என்று முதலாமவள் அடுக்கிக்கொண்டே போக
”இவற்றை விட்டுவிட்டாயே -
”விளம்பரங்களை மட்டுமே எழுத்துக்கூட்டிப் படிப்பவள்;
பழைய பேப்பர் கடையில் போடுவதற்கென்றே செய்தித்தாளை வாங்குபவள்;
மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் செய்தித்தாளால் விசிறிக்கொள்பவள்;
என்று புன்னகையோடு இன்னும் சில
தன்முனைப்பான எள்ளல்களை எடுத்துக்கொடுத்த மற்றவள்
செய்தித்தாள் வாசிப்பைத் தொடர்ந்தாள்.


No comments:

Post a Comment