Thursday, July 7, 2022

நிகழ்த்துகலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிகழ்த்துகலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இன்னொருவர் தலைமீது காகம்
எச்சமிட்டுச் சென்றால்
அருகிருப்பவருக்கு அப்படியொரு சிரிப்பு.
தன் தலையில் விழவில்லையே என்ற இறுமாப்பு.
மனிதத் தலைகள் காகங்களின் இலவசக் கழிப்பறைகள்
என்று கோணவாய்ச் சிரிப்போடு
தத்துப்பித்தென்று சில முத்திரை வாசகங்களை
உரிய ஏற்ற இறக்கங்களைக் குரலில் வரவழைத்து
உரத்துச் சொல்வது அவர்தம் தனிச்சிறப்பு.
விட்டால்
காக்காய்க்கு நல்லவரை அடையாளங்காணத் தெரியும்
என்று கதைக்கவும் தயங்கமாட்டார்கள்.
புறம்பேசி முடித்த பிறகு மறவாமல் சொல்லிக்கொள் வார்கள்
‘நமக்கெதற்கு பொல்லாப்பு’
சரி தப்பு என்பதெல்லாம்
அவரவருக்குக் காப்பாகவும் அடுத்தவருக்கு ஆப்பாகவும்
உருமாறும் திறமெழுத வேறொரு (Half-Boiled) KAFKAவால்தான் முடியும்
குப்புற விழுந்தாலும் ஒட்ட வழியில்லாதபடி மீசையை
மழித்துக்கொண்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்
கழுகு மூக்கில் நாம் சுண்டெலியாகும்வரை
பழகாது வலி;
தத்துவம், ஆன்மிகம், அபத்த நாடகம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சந்தர்ப்ப சூழல், குறிப்புரை பொழிப்புரை பரப்புரையெனத் தேவையான பழமொழி புதுமொழிகளோடு ஆங்காங்கே பீடமமைத்துப்
பிப்பிப்பீ டும்டும்டும் கொக்கரக்கோ பெப்பரப்பே யென
கலந்துகட்டிக் கூட்டாஞ்சோறிடுவதாய் ஆகப் பெருமுழக்கமிடுவது
அடடாவோ பழக எளிதான பழியறு வாழ்நெறி
அடி தெறி
என வாழ்ந்துகொண்டிருப்பார் சிலபலர்
இங்கே ஒப்பாரும் மிக்காரும் இலராக….

No comments:

Post a Comment