Thursday, July 7, 2022

ஒட்டுத்தையல்களும் கந்தலான வாழ்வுரிமையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒட்டுத்தையல்களும் 

கந்தலான வாழ்வுரிமையும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 


வாயைத் தைத்துவைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

சாமான்யர்கள்

வார்த்தைகள் சாமான்யர்களை மட்டுமே வழிமறிக்கின்றன

சாமான்யர்களுக்கு மட்டுமே குழிபறிக்கின்றன

சாமான்யர்களின் இறப்புக்குக் கிடைப்பதெல்லாம்

செலக்டிவ்மௌனங்கள்; மறதிகள்

சாலை விபத்தை வெறுமே செல்ஃபி எடுத்து ஷேர் செய்து

தலையை சிலுப்பிக்கொள்ளுதலே

சமூகப் பிரக்ஞையாக.

சின்னதா யொரு ரொட்டித்துண்டு கொடுத்துவிட்டாலோ

சட்டென்று தன்னை யொரு அன்னை தெரசாவாக்கிக்கொண்டுவிட

சொல்லியா தரவேண்டும்?

சாமான்யர்களுக்காக சதா உழைப்பதாக சொல்லிக்கொள்ளும்

சிலபலருக்கு சென்னை சீர்காழி ராஜஸ்தான்

ஸ்விட்ஜர்லாந்தில் சொந்தமாய்

அடுக்குமாடிக் கட்டடங்களும்

கிடுகிடுவென வளர்ந்தோங்கிய

பெருநிறுவன வியாபாரங்களும்.

சாமான்யர்களுக்கில்லை சுதந்திரங்கள்

பேச்சுரிமை கருத்துரிமை யாவும்

எட்டாக்கனியாக

சாமான்யர்களுக்கானதே தினந்தினம் செத்துமடியும் வாழ்க்கை

யென்றாக

வரும்போகும் அற்பப்பதர்களுக்கெல்லாம்

வயிற்றுப்பிழைப்புக்காக வணக்கம் சொல்லி

மடங்கி வளைந்து முழந்தாளிட்டு

மனம் நொறுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு

மரத்துப் போய்விட்ட உணர்வுடன்

மடைதிறந்த வெள்ளமாய் பீறிடத்துடிக்கும்

சொற்களால் பிதுங்கும் இதழ்களை

இறுக்கித் தைத்துவைப்பதே

இயல்பாகிய

இகவுலக வாழ்வில்

இங்கே இன்று…..

இருந்திரந்து

இரந்திருந்து

இருந்திறந்து

இறந்திருந்து

இருந்திருந்திருந்திருந்து…..

No comments:

Post a Comment