Thursday, June 9, 2022

நாமெல்லோரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 

நாமெல்லோரும்


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நாமெல்லோரு மிதைப் பேசலாம்

இதைப் பேசலாகாதென இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நம்மெல்லோரையும்

ஒன்று திரட்டி

மாவுருண்டையாய் உருட்டி

குலோப் ஜாமுன் குடமிளகாய் பஜ்ஜி

கொத்துபரோட்டா பிரியாணி குருமா

சாதா தோசை மசாலா தோசையென

வகைவகையாய் நமக்கே

பரிமாறிக்கொண்டிருக்கப்போகிறார்கள் நாமெல்லோருமானவர்கள்

நம்மைக் கேட்காது நம்மைச் சேர்க்கும்

நாமின்

நெரிசலான ஜன்னலற்ற சிறைக்கொட்டடிகள்

நம்மை நாமாக்குவதுமொரு தண்டனையாய்.

நம்மை நாமாக்கவும் நாமை நம்மாக்கவும்

அழையா விருந்தாளியாய்

அறவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்கிக்கொண்டிருப்பவர்கள்

அவற்றின் மூலமே தம்மையொரு

ஆளாய்காணவும் காட்டவும்

ஆலாய்ப் பறப்பதை யறியமாட்டோமா நாம்?

நமது நாமெல்லோரில் நாமெல்லோருமில்லாததுபோலவே

அவரவர் நாமெல்லோரிலும்

நம்மெல்லோருடைய நாமெல்லோரிலும்.

நமக்கான நாமை

அவருக்கான நாமாய் வனையும்

அவருடைய நாமின் நாம்

தலையாட்டிபொம்மைகளாம்

எனச் சொன்ன கணத்தில் நாம்

அந்நியமாகிவிடுவோம்

என்றறிவோம்.

No comments:

Post a Comment