Thursday, June 9, 2022

கவிமன வேதியியல் மாற்றங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிமன வேதியியல் மாற்றங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும்
மாறிக்கொண்டேயிருப்பவர்கள்
முன்னவராக இருக்கும்போது
அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்....
பின்னவராக மாறி காது கூசுவதாய்
தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட
ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கொன்றழிக்கத்தோதாய்
சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து
அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி
வெடிகுண்டு வகையறாக்கள்
வேகமாய் துடிக்கவைக்கின்றன
ஏற்கெனவே எதனாலெல்லாமோ
எந்நேரமும் படபடப்பாக உணரும்
பாழ் இதயத்தை.
முன்னவராக எண்ணி நட்புபாராட்டிக்
கொண்டிருந் தவர்கள்
காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து
மூர்ச்சையாகிவிழும் தருணம்
மீண்டும் Dr. Jekyll முன்னால் வந்து
காசுவாங்காமல் மருந்துமாத்திரைகளை
அத்தனை அன்போடு
ஒரு கவிதையில் பொதிந்து
கையில் தந்துவிடுகி றார்கள்.
நம்பிக்கையிழப்பின் கொடும் அசதியிலிருந்து
மெல்ல எழ முயலும் மனதில்
பேயறை அறைகிறது நாராசக் கெக்கலிப்
பொலியும்
நாக்கூசா அவதூறுகளும்.
அத்தனை மனிதநேயத்தோடு கவியெழுதும் மனம்
இத்தனை மூர்க்கமாய் வெறுப்பைக்
கக்கவே கக்காது என்ற நம்பிக்கையை
சுக்குநூறாக்குவதாய்
அதே மனதிலிருந்து அந்த அளவே
வெறுப்பைக் கக்கும்
அதே வார்த்தைகள்
அதைவிட மோசமாகவும்
எதிரொலித்தவண்ணம்.
ஒரே செயல் ஒருவரின் அளவில்
வெறுப்பைக் கக்கவைப்பதும்
இன்னொருவரின் அளவில்
விருப்புக்குரியதாகவும் மாறும்
மருத்துவத்திற்கப்பாலான விந்தை புரியாமல்
Dr. Jekyll தன் மருத்துவப்பட்டத்தைத் துறக்க
முடிவுசெய்யும் நாளில்
Mr.Hyde தன்னையோ அவரையோ அல்லது
தங்களிருவரையும் கவிதையில் இனங்கண்டு
கொள்பவரையோ
எதுவும் செய்துவிடாமலிருக்க வேண்டும்
Dr. Jekyll Mr.Hyde ஆக மாற உதவும்
வேதியியல் சாறு தரும் அருவக்கைகளால்
_ அவர்களுடையதோ அடுத்தவரு
டையதோ....
அதைவிட முக்கியம்
Mr.Hyde களை Dr. Jekyll களாக மாற்றும் சாறு
கண்டுபிடிக்கப்படவேண்டியது.

No comments:

Post a Comment