Thursday, June 9, 2022

நிழலரசர்களின் நீதிபரிபாலனம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிழலரசர்களின் நீதிபரிபாலனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அன்றன்றைய காலைக்கடன்கள்
மதியக்கடன்கள்
மாலைக்கடன்களை
முழுவதுமாய் முடித்தவர்கள்
அரைகுறையாய் முடித்தவர்கள்
அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான
இணையவழிக் கலந்துரையாடலுக்காய்
அவரவர் வீட்டுத்திண்ணையில்
அமர்ந்துகொண்டனர்.
திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள்
சிறிதும் பெரிதுமான மர, மூங்கில்,
ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்....
சிலர் வீட்டினுள்ளிருந்த தூணோரங்களில்
சிலர் வெளிவாயிலிலிருந்த மரத்தடிகளில்
சிலர் கட்டிலின் தலைமாட்டில்
சிலர் காம்பவுண்டை அடுத்திருந்த
ஓரளவு பெரிய கருங்கற்களில்
அடுத்திருந்த பூங்காக்களின்
சிமெண்டுபெஞ்சுகளில்....
எதிலமர்ந்திருந்தாலுமது
ஆன்றஅரியணையாய்….
செங்கோலைப் பிடித்திருப்பதாய்
கீழே கிடந்த சுள்ளியைக் கையிலெடுத்து
ஆட்டியாட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள்
அல்ல, கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
’கையில் கிடைத்தவர்களை சிரத்சேதம்
செய்வதில்தான் எத்தனை சுகம்!’
என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்
ஒரு சிற்றரசர்
சத்தமாய் சிரித்தவாறே
சலாம் போடாத பறவைகளின் சிறகுகளையும்
அறுத்தெறிய வேண்டும்
என்றார் அண்டை சமஸ்தானத்து மன்னர்.
ஆமாம், ஆனால் பறவைகளைச்
சிறைபிடிப்பது எப்படி
என்று புரியாமல் கேட்டார்
ஒரு குறுநில மன்னர்.
வலையில்லையா வில்லில்லையா
கவண் இல்லையா கல் இல்லையா
கவலையெதற்கு என்றார்
பரிவோடொரு பேரரசர்.
காலத்திற்கேற்றார்ப்போல் நம் உத்திகளை
மாற்றிக்கொண்டாகவேண்டும்
பறவைபோல் வேடம் தரித்து
பறவைகளிடம் நட்புறவாடி
பின் வெட்டிவீழ்த்தல் எளிதல்லவா
என்று புருவமுயர்த்திப் பேசிய
புத்திசாலி ராஜாவிடம்
’பறக்கமுடியாதே’ என்று நியாயமாகக் கேட்ட
சக அரசனை
அருகிலிருந்தவர்கள் அரியணையிலிருந்து
தள்ளிவிட்டு
வெளியே இழுத்துச்செல்லுமாறு
வாயிற்காவலருக்கு
உத்தரவு பிறப்பித்தனர்.
புத்தியால் தப்பிப்பிழைத்தேன் என்று
கத்திக்கொண்டே ஓடிமறைந்தா ரவர்.
அத்தனை நேரமும் பறவைகள்
பறந்துகொண்டேயிருந்தன.
அவற்றை சிறைபிடிக்கமுடியாமல்
இல்லாத நாடுகளின் சக்கரவர்த்திகள்
அழகு காட்டினார்கள்
அசிங்கமான வார்த்தைகளால்
திட்டித் தீர்த்தார்கள்
ஆங்காரமாய் கைகளை யுயர்த்திக்
காற்றில் அறைந்தார்கள்
அவலட்சணமாய் பறவையை
கேலிச்சித்திரம் வரைந்தார்கள்.
ஒரு தூதுமடலையும் எடுத்துச்
செல்லத் தோதாய்
கீழிறங்கிவராத பறவைக்கு
எத்தனை மண்டைகனம் என்று
கீழ்க்குரலில் கறுவினார்கள்.
’பாழ்வெளியில் பறந்தலையும் ஃபாஸிஸ்ட்’
என்ற பட்டத்திற்குரியது பறவையே
எனச் சொன்னவரிடம்
அவைநீக்கம் செய்யப்பட்டுவிடக்கூடிய
அபாயம் விளைவித்த
நடுக்கத்தோடு
விளக்கம் கேட்டார் அடுத்திருந்தவர்.
தன்பாட்டில் சற்றே தாழப்பறந்து
கொண்டிருந்த
ஒரு பறவையின் கீச்சுக்குரல்
அசரீரியாய் முழங்கியதில்
அரியணைகள் அரசிழந்துபோக _
எஞ்சியுள்ள இரவுக்கடன்களைக்
கழிக்க
எல்லோரும் கலைந்துசென்றனர்.

No comments:

Post a Comment