Sunday, May 1, 2022

லதா மங்கேஷ்கருக்கு என் மனமார்ந்த வணக்கமும் நன்றியும்.

 லதா மங்கேஷ்கருக்கு என் மனமார்ந்த வணக்கமும் நன்றியும்.

லதா ராமகிருஷ்ணன்


https://www.youtube.com/watch?v=KsIR3v6hCy4

நிகழ்வுகளால் ஆனது வாழ்க்கை. நிகழ்வுகள் ஒவ்வொன் றுக்கும் காரணம் உண்டு என்பார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. எனக்குத் தெரியாததெல்லாம் இல்லையென்று என்னால் சொல்லவியலாது. பக்தர் பகுத்தறிவாளராகலாம், பகுத்தறிவாளர் பக்தராகலாம் - இருவரும் ஒருவரேயாகலாம். ......

இரண்டு நாட்கள் முன்பு க்விக்ஃபிக்ஸ் போட்டு ஒட்டிய ஸ்டிக்கர் ஹூக்கில் மாட்டிய ராமபிரான் காலண்டர் சற்று முன் அறுந்து விழுந்தது. கனம் தாங்காமல் எப்படி யும் ஒரு நாள் விழும் என்று எதிர்பார்த்ததுதான். மனதிற்குள் ஏதோ நெருடியது.
நாய் ஊளையிட்டால் அபசகுனமென்று பயந்தவர்களைப் பற்றிய கதை படித்திருக்கிறேன். இறுதியில் ஊளையிட்ட நாய் உடல்நிலை சரியில்லாததால் இறந்துபோகும்.
ஆனாலும், இன்று நாள்காட்டி விழுந்ததும் நேற்று உடல் நிலை கவலைக் கிடமாக இருந்த பாடகி லதா மங்கேஷ் கரின் நினைவு வர, தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்தால் அவர் காலமான செய்தியும் அவருடைய பாட லும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ராமனைப் பற்றி அவர் பாடியுள்ள எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
ராமன் இருந்தானா, இல்லையா ,
நல்லவனா, கெட்டவனா -
அதற்கு முன் _
நாம் இருக்கிறோமா இல்லையா
நாம் நல்லவர்களா கெட்டவர்களா....

ராமன் போன்ற ஒரு அரிய நபரைக் கணவனாகப் பெற்ற சீதை தன்னைக் கடத்திச்சென்று நைச்சியமாய் அடைய முயலும் இராவணனுக்காக ஏங்கினாள் என்று எண்ணும், வால்மீகியின் கைபிடித்து எழுதக் கற்றுத்தந்தவராகத் தன்னை முன்னிலைப் படுத்துவதாய் எழுதித்தள்ளும் மனவக்கிரம் பிடித்தவர்கள் அறிவுஜீவிகளாக அறியப்படும் அவலம் தொடர்கிறது.
(என் அப்பா எனக்கு வைத்த பெயர் லதா. லதா மங்கேஷ் கரின் மீதான அபிமானத்தில். அம்மாவைப் பெண் பார்க்க வந்தபோது பம்பாய்க்காரி என்பதால் லதா மங்கேஷ்கர் பாடலைப் பாடச் சொன்னாராம்.
இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் அப்பா இறந்து அரை நூற்றாண்டாகி விடும். )
இசையின் மொழி எல்லோரும் அறிந்ததுதானே.
லதா மங்கேஷ்கர் பாடல்கள் இந்தியறியாத எனக்கு தமிழ் அறிந்தும் பகுதியளவே புரியும், எனில் புரிந்தது மனதை அப்படி நெகிழ்த்தும் கவிதைகளாய்.
அவருடைய குரலின் உயிர் மொழிகளுக்கப்பாலானது. அது எனக்கு நிறையவே வாசகப்பிரதிகளை வழங்கியி ருக்கிறது.
வாசகராக இருப்பவர்க்கே வாசகப்பிரதிகள் வாய்க்கும்.....
திறந்தமுனைக் கவிதைகளுக்கான திறவுகோல்களைத் தேடவும் அர்த்தார்த்தங்களை உள்வாங்கிக்கொள்ளவும் மனதைத் திறந்துவைத்தபடி....
அதுவேயாகட்டும் வாழ்க்கைக்கும்.
அத்தனை அற்புதத் தருணங்களை, ஆத்மசுத்தியுணர்வு களை அள்ளிவழங்கிய பாடல்களைப் பாடிச்சென்ற லதா மங்கேஷ்கருக்கு என் மனமார்ந்த வணக்கமும் நன்றியும்.

No comments:

Post a Comment