Monday, May 2, 2022

கவித்துவம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவித்துவம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)






குருவியின் மூக்கும்
புறாவின் கண்ணும் பச்சைக்கிளியின் நிறமும்
மயிலின் தோகை மினியேச்சர் அளவிலும்
கழுகின் கால்வளைநகங்களும்
நாரையின் நீளக்கால்களும்
பொருத்தப்பட்டு
வானவில்லின் வர்ணங்களை
எழுநூறாகப் பெருக்கிக்காட்டும்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
அண்டார்ட்டிக்காவில் உருவாக்கிய
பின்னணியிசையோடு
நின்றுகொண்டிருந்த பறவையின் விஸ்வரூபம் கண்டு
வியந்து பிரமித்து வீதிநிறைத்துப்
பெருகி வந்திறங்கியவர்கள்
தனித்தனியாய் நின்று அந்தப் பறவையோடு
புகைப்படமெடுத்துக்கொண்டார்கள்
செல்ஃபியிலும் அ-செல்ஃபியிலுமாக.
கா-கா-காவிலுள்ள மெய்யுயிர் மனதிற்குப் பிடிபட
அந்தச் சிறுவன் மட்டும் எப்போதும்போல்
அதன்பாட்டுக்கு மரத்தில் உட்கார்ந்து
கரைந்துகொண்டிருந்த காகத்தையே
ஆசையாசையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment