Monday, May 2, 2022

ஒரு நடிகையின் விடுதலை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு நடிகையின் விடுதலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன
குட்டைப்பாவாடை
அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு
அடிக்கடி கீழ்ப்பகுதியை
இழுத்துவிட்டுக்கொண்டாள்
அப்படிச் செய்யாதே என்று அம்மா
அடிக்காத குறையாய் கண்களால்
உருட்டி மிரட்டினாள்.
அந்தப் பிரமுகர் சிறுமியை இழுத்து
மடியில் அமர்த்திக்கொண்டு
மார்போடணைத்தது
சிறுமிக்கு அறவே பிடிக்கவில்லை
அழுகையழுகையாய் வந்தது.
அவளுக்குக் கூச்ச சுபாவம் என்று
மகளின் அழுகையை மிகப்பிழையாய்
தெரிந்தே பொருள்பெயர்த்தாள் அம்மா.
அத்தனையோரமாய் மாராப்பை ஒதுக்கிக்
கொள்ளச் சொன்னது
ஆறா அவமானமாய் மனதை அழுத்தியது
அந்த வளரிளம்பெண்ணுக்கு.
அந்த நடிகையைப் பார் என்றார் அம்மா
அவளும்தானே பாவம் என்றாள் மகள்.
”அந்த ஊரில் நடந்ததைக் கேள்விப்பட்டாயல்லவா
அம்மணமாய்க் கிடந்தாள் அந்தப் பெண்”
”அய்யோ எத்தனை அவமானப்பட்டிருப்பாள் அவள்
அய்யோ.... அய்யய்யோ...”
_ ஆற்றமாட்டாமல் அழத்தொடங்கினாள் மகள்.
அவசர அவசரமாய் அந்தக் கேவலைப்
படம்பிடித்துக்கொள்ளும்படி இயக்குனரிடம்
பணிவாய் வாய்மேல் கையைக் குவித்தபடி
ஆலோசனை வழங்கிய அம்மா
பின்னாளில் க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு உதவும்
என்றதை
அங்கிருந்த அனைவருமே சிலாகித்தார்கள்.
சாராயமல்லவா மனிதர்களை சீர்கெடுக்கிறது
என்று சுட்டிக்காட்டிய அம்மாவிடம்
சீமைச்சரக்குகளை விட்டுவிட்டாயே அம்மா
என்று மகள் வேடிக்கையாகவா சொன்னாள்?
'அத்தனை நெருக்கமாக நடிக்கமாட்டேன்' என்று
அடம்பிடித்த மகளிடம்
'படுக்கையறைக் காட்சியல்லவா, புரிந்துகொள்'
என்றாள் அம்மா.
பழகிய அழுகிய வாடை மனதில் குமட்ட,
ஒரு நாள் உண்மையான காதல் கிட்டும்போது
உடல்நெருக்கம் மரத்துப்போயிருக்குமோ என்ற
வருத்தம் முட்டியது மகள் மனதில்.
மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கச்சொல்லி
’ஆடைத்தேர்வு பெண்ணின் சுதந்திரம்’ என்ற
வழக்கமான சொற்களோடு அம்மா
ஆரம்பித்தபோது
சும்மாயிருக்கச் சொல்லி சைகை காண்பித்தவள்
“அம்மா, என் ஆடைத்தேர்வு என் சுதந்திரம்
எனப் புரிந்துகொள்ளுமளவு
வளர்ந்துவிட்டேன் நான்’ என்றாள்.
அம்மா வாயடைத்துநின்றாள்.

No comments:

Post a Comment