Sunday, May 1, 2022

மெய்த்தோற்றங்கள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்த்தோற்றங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பிறவி நடிகர் திலகங்களும்
நடிகையர் திலகங்களும்
தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள்
புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே.
அழும்போதும் ஆத்திரப்படும்போதும்
அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள்
இயல்பாக நடப்பதாய்
இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே
ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள்
இணையப்பக்கங்களில்.
அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை
யெல்லாம்
அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை
வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள்
இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இருக்கையை விட்டு இம்மியும் நகராமல்
வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்
இந்தத் திரைப்படம் ‘ஆர்ட்’ படமா ‘மசாலா’ப் படமா
என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளும் நாள்
தொலைவிலோ அருகிலோ
இருக்கிறதோ இல்லையோ….

No comments:

Post a Comment