Sunday, May 1, 2022

கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து சொல்லத்தோன்றும் சில…. 4

 கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல்

குறித்து
சொல்லத்தோன்றும் சில…. 4

_ லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் சாகிிப்கிரான் தக்கையின் கீழ்க்காணும் கவிதையை மொழிபெயர்த்து பதிவேற்றியிருக்கிறேன்.
கவிதை முழுமையாகப் புரிந்தாலே அதை மொழிபெயர்ப் பில் அதேயளவாய்க் கொண்டுவருவது கடினம். ஒரு கவிதை என்னால் முழுமையாக உள்வாங்கப்படாத போது?
ஒரு வாசகராக எனக்கு முழுமையாகப் புரிந்துவிடாத கவிதையை நான் ஏன் மொழிபெயர்க்கவேண்டும்?
ஒரு வாசகராக ஒரு கவிதை எனக்கு முழுமையாகப் புரி யாத போதும் அதில் ஒரளவு புரிந்துவிடும் சில மனதை ஈர்க்க, மனதை அலைக்கழிக்க அதை மொழிபெயர்க்கத் தோன்றுகிறது.
இதுவும் ஒருவிதத்தில் ‘நீலக்குழல் விளக்கின்’ Predator பொறி, தூண்டில் போன்றதே!
.....................................................
கவிஞர் சாகிப்கிரானின் வரிகள் இவை:
கருவி
............................
அது ஒரு பொறி.
எனக்கான விருப்பம்
ஒரு தூண்டிலாகிவிட்டது.
அந்த நீல குழல் விளக்கை
எனது விருப்பமாக மாற்றும்
அதை ஒரு கையிலும்
பிரிடேட்டர் உரித்த
கபால தண்டுவடம் மற்றொரு
கையிலும் வீசி நடக்கும்
அந்த விசித்திர ஜந்துவை
யாரும் அடையாளம் காண முடியாது.
புத்தனை பின்னுக்குத் தள்ளும்
சூறைக் காற்றில்
போதிமரம்தான் அந்த
குழல் விளக்கு.
அவன் ஒற்றைக் கொம்புடன்
தஞ்சமடைந்த பள்ளத்தின்
முட்டு...
மற்றொரு தியானம்.
- சாகிப்கிரான்
(மீள். மூன்று வருடங்களுக்கு முன்னால்.)
A POEM BY SHAHIBKIRAN THAKKAI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
DEVICE
That was a trap
My desire became a lure
None can recognize that
bizarre species which
walks on swinging both its hands
holding in one
that which makes the blue florescent
as my wish precise
and in the other
cervical spine peeled off by the
predator.
In the storm that pushes Buddha backward
the tube light is the Tree of Enlightenment.
The shove and butting of the pit
where he had sought refuge with a lone horn….
Meditation of another kind.
Shahibkiran Thakkai
இந்தக் கவிதையில் வரும் பிரிடேட்டர் ஐ அர்த்த அளவிலும், படத்தில் காணும் அளவிலும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இரண்டினூடாகவும் கவிதை எதையோ சொல்ல முற்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், என்ன சொல்கிறது என்று திட்ட வட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
சமயங்களில் குறிப்பான ஒரு விஷயம் – படம், பாட்டு, நிகழ்வு, பழமொழி என்பதாய் ஒரு கவிதைக்கான கருப் பொருளாகிவிடுவதுண்டு. அந்த விஷயம் பிடிபட்டுவிட் டால் பின் கவிதைக்குள் நுழைந்துவிட முடியும்.
அப்படி ஒரு குறிப்பிட்ட பிரிடேட்டர் படத்தை, பட நிகழ்வை இக்கவிதை குறியீடாகப் பயன்படுத்தி யிருக்கிறதா? (நான் எந்த predator படமும் பார்த்ததில்லை; இணைய விளையாட்டு ஏதும் இருப்பின் அதை அறிந்த தில்லை. பிரிடேட்டர் உருவம் கணினியில் பார்த்திருக் கிறேன். ‘ஏலியன்’ என்று ஓரளவு புரிகிறது. குரூரமா னதாய் தெரிகிறது. ஆனால், அதன் முதன்மைத் தன்மை, செயல்பாடு என்ன என்பதெல்லாம் தெரியாது. உண்மை யில் யாருக்குத்தான் தெரியும் என்றும் கேட்கமுடியும் தான்.
பொறி என்றால் சிக்கவைப்பது; உத்தி, கருவி – இவை யெல்லாவற்றுக்குமாக ஒற்றை ஆங்கில வார்த்தை இருக்கிறதா?
இதில் வரும் பிரிடேட்டர் (Predator) வேட்டையாடலை, வேட்டைப்பிராணியை முன்னிறுத்துகிறதா? வாழ்வில் வேட்டையாடப்படலை, மனிதனுக்குள்ளிருக்கும் விலங்கைக் குறிப்புணர்த்துகிறதா? ஒரு குறிப்பிட்ட படத் தில் வருவதா? எல்லா பிரிடேட்டருக்கும் குறியீடாகி நிற்பதா?
குழல் விளக்கின் நீல ஒளி இரவு நேரம், உறக்க சமயம், கனவுநிலையைக் குறிக்கிறதா? அல்லது, வேறு ஏதா வதா?
நீலக் குழல் விளக்கை கவிதைசொல்லியின் விருப்பமாக மாற்றும் பொறிக்கும் புத்தனை பின்னுக்குத் தள்ளும் / சூறைக் காற்றில் /போதிமரம்தான் /அந்த குழல் விளக்கு என்று உணர்தலுக்கும் இடையில் நிகழும் மோதலும் அலைக்கழிப்பும்தான் கவிதையாகியிருக்கிறதா?
யாரும் அடையாளம் காணமுடியாத அந்த விசித்திர ஜந்து நம் எல்லோருள்ளும் இருக்கிறதோ? அதை அடையாளங்காண்பதுதான் போதிமர ஞானமோ?
அவன் ஒற்றைக் கொம்புடன்
தஞ்சமடைந்த பள்ளத்தின்
முட்டு...
மற்றொரு தியானம்.
கவிதைசொல்லி பள்ளத்தில் விழவில்லை; தஞ்சமடைந் திருக்கிறான். பள்ளத்தின் முட்டு – மீட்சியற்ற நிலையா? அல்லது ஒற்றைக்கொம்பை மீறி பள்ளத்தால் முட்டப் பட்ட நிலையா?
என் புரியாமையையும் மீறி என்னால் ஏன் இந்தக் கவி தையைப் புறமொதுக்க முடியவில்லை? இந்தக் கவிதை ஒரு அலைக்கழிப்பை நவீனமாகச் சொல்ல வேண்டும் என்று மேம்போக்காக அல்லாமல் மனமார விரும்புகிறது என்றும் சொல்லவந்த விஷயத்தை மிகத் திருத்தமாகச் சொல்லநினைப்பதையும் உணரமுடிகிறது.
இந்தக் கவிஞர் கவிதைக்கப்பால் தன்னை கவிஞராக வேறுவிதங்களில் முன்னிலைப்படுத்தியதில்லை; பறையறிவித்துக்கொண்டதில்லை என்பதும் அவர் இந்தக் கவிதையை வெறுமே தன்னை ‘பெரிய நவீனக் கவிஞராகக் ‘காட்டி’க் கொள்வதற்காக எழுதியிருக்க மாட்டார் என்ற தெளிவைத் தருகிறது.
கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதைகளில் மேற்குறிப் பிட்ட தன்மையை உணரமுடியும் என்பதாலேயே அவரு டைய கவிதைகளைத் திரும்பத்திரும்பப் படித்து கவிதை முழு அளவில் ஒற்றை அர்த்தமொன்றைத் தருவதாகப் புரியாத நிலையிலும் அதன் புதிர்வழிப்பாதைகளில் அலைந்துதிரிவதிலேயே நிறைவுணர முடிகிறது.
கவிதையில் தேவைக்கு அதிகமாய் சொற்களேதும் இல் லாததும் கவிதை அதனளவில் அடர்வானது என்று உணர வைக்கிறது.
எனவே, இந்தக் கவிதைக்குள் நுழைவதற்கான திறவு கோலை (திறவுகோல்களை) கவிதைக்கு உள்ளாகவும், வெளியாகவும் இருக்கும் பிரிடேட்டரின் (பிரிடேட்டர்க ளின்) _ சொல், சினிமா, ஒருவேளை ஏதேனும் இணைய விளையாட்டு இவற்றின் அடிப்படையில் கவிதைக்குள் ளும் வெளியுமாகத் தேட ஆரம்பிக்கிறேன்.
வாசகப் பிரதி எழுத்தாளர் பிரதியிலிருந்து மாறுபடக் கூடும், அதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் என்ற தெளிவு இருபது வருடங்களுக்கும் மேலாக நவீன தமிழ்க்கவிதை வெளியில் புழங்குவதன் காரணமாக வரவாகியிருக்கிறது.
என்றாலும் கிடைக்கும் வாசகப்பிரதியும் முழுநிறை வானதாக இல்லாதபோது?
கவிதைசொல்லி தனது மன அவசத்தை, அலைக்க ழிப்பை, அ-பூரண வாழ்வைப் பேசும்போது அந்த அலைக் கழிப்பை வாசகப் பிரதியும் தருவது இயல்பு தானே? அல்லது இப்படியில்லையா? இதற்கு வாசிப்பு சார் போதாமை காரணமா?
திக்குத் தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தல் வரமா? சாபமா? தேடலே கவிதை எழுதுதலின் வாசித்த லின் சாரமா? தேடிக்கண்டடைதல் தத்துவத்திற்கானதா? கண்டடைதல் என்றால் என்ன? கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கவிதைக்கும் பொருந்துமா?
இந்தத் தேடலின் முடிவில் தெளிவு கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ’இங்கிருந்து வெளியே’ என்பதுதானே பயணத்தின் இலக்கே
இத்தகைய அடர்செறிவான கவிதைகளை எழுதுகிற வர்கள் தங்களுடைய ஒரு கவிதை உருவாகும் போக்கை யாவது வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண் டும் என்று ஒரு வாசகராக என் வேண்டு கோளை இங்கே முன்வைக்கிறேன். அப்படி சில பகிர்வு களைத் தொகுத்து ஒரு சிறு நூலாக்கினால் அது நவீன கவிதை சார்ந்த சில புரிதல்களை மேம்படுத்த உதவும் என்று தோன்றுகிறது.
கவிதை புரியவில்லை என்று சொல்லும் வாசகர்கள் இருவகைப்பட்டவர்கள். ஒரு தரப்பினர் புரியும்படி கவிதை எழுதச்சொல்லி கவிஞர்களை மிரட்டுபவர்கள். உரித்த வாழைப்பழத்தை வாயில் போடும் அளவில் கவிதை அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். அவர்களை விட்டுவிடுவோம். இன்னொரு தரப்பினர் ஒரு அடர்செறிவான கவிதையை இழைபிரித்தறிய வேண்டும் என்ற மெய்யான ஆர்வமுடையவர்கள். அவர்களிடம் கவிஞர்கள் தமது ஒரு கவிதையை அல் லது சில கவிதைகளை இழை பிரித்துக் காட்டினால் அதில் கிடைக்கும் நிறைவு சம்பந்தப்பட்ட இருவருக்கும் பொதுவானது!
......................................................................................................................
பி.கு: இங்கே பேச எடுத்துக்கொண்டுள்ள கவிஞர் சாகிப் கிரானின் கவிதை குறித்து நான் எழுதியுள்ளவற்றைப் பொருட்படுத்தி கவிஞர் அளித்திருக்கும் மறுமொழி கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகிறது.
உண்மையாலுமே, மிக சிரத்தை எடுத்துக் கொண்ட, ஒரு வாசிப்பிற்கான பிரயத்தனங்கள் கூடியப்பதிவு. பொது வாக பிரிடேட்டர் என்பதை வேட்டை விலங்குகளைக் குறித்து பயன்படுத்துவார்கள். அது தனக் கான உணவுக்கு மட்டுமே ஒரு விலங்கை வேட்டையா டும். ஆனால் திரைப்படத்தில் வரும் அந்த ஏலியன் பிரி டேட்டர், குறிப்பாக வேட்டையாடும் மனிதர்களின் கபா லத்தை தண்டுவடத்துடன் உருவி எடுக்கும். இது உணவுக்கானது அல்ல. ஆனால் கவிதை ஒரு உணர்வு நிலை சார்ந்தது என்பதால் அதை விளக்குவது என்பது பெரும் அபத்தமாகிப் போய், சொற்கூடாகிவிடும். தங்க ளின் புரிதலுக்கான முனைப்பே கவிதையைப் பல தளங் களில் நிகழ்த்தும்.

1 Comment

  • Shahibkiran Thakkai
    உண்மையாலுமே, மிக சிரத்தை எடுத்துக் கொண்ட, ஒரு வாசிப்பிற்கான பிரயத்தனங்கள் கூடியப்பதிவு. பொதுவாக பிரிடேட்டர் என்பதை வேட்டை விலங்குகளைக் குறித்து பயன்படுத்துவார்கள். அது தனக்கான உணவுக்கு மட்டுமே ஒரு விலங்கை வேட்டையாடும். ஆனால் திரைப்படத்தில் வரும் அந்த ஏலியன் பிரிடேட்டர், குறிப்பாக வேட்டையாடும் மனிதர்களின் கபாலத்தை தண்டுவடத்துடன் உருவி எடுக்கும். இது உணவுக்கானது அல்ல. ஆனால் கவிதை ஒரு உணர்வு நிலை சார்ந்தது என்பதால் அதை விளக்குவது என்பது பெரும் அபத்தமாகிப் போய், சொற்கூடாகிவிடும். தங்களின் புரிதலுக்கான முனைப்பே கவிதையைப் பல தளங்களில் நிகழ்த்தும். மிக்க மகிழ்ச்சி, மேடம்.
    5
    • Like

No comments:

Post a Comment