Tuesday, January 25, 2022

வாய்ச்சொல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்”
_ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம்
அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில்
சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க
முக்கியஸ்தர்களுக்கெல்லாம்
மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில்
சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது அறுசுவை விருந்து
_ முழுவதுமாய் புரிந்ததென்று சொல்லமுடியாவிட்டாலும்
வெள்ளித்திரையில் விசுவரூபமெடுத்திருக்கும்
வீரநாயகன் குரல் முழக்கத்தில்
ஏற்றத்தாழ்வுகளற்று அகிலமே
அதியழகானதான பிரமையினூடே
பேருந்து நிறுத்தம் நோக்கி ரசிகர் நடந்துகொண்டிருக்க
அதே வழியாக வழுக்கியோடிச்சென்றது
அவர் வணங்கித் துதிக்கும் நடிகரின்
அந்நியநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
பிரம்மாண்ட ‘ப்ளஷர்’ கார்.
‘எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை யாவும்
நம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகள்’
என்று இரண்டரை மணிநேரம் வேகாத வெயிலில்
கால்கடுக்கக் குரலெழுப்பி முடித்த பின்
தலைவரிடம் சங்க நடைமுறை சார்ந்த ஒரு எதிர்க்கருத்தைச் சொன்னவனுக்கு
துரோகி என்ற பட்டம் தரப்பட்டு
அவனை அடித்துத் துரத்திவிட்டு
அடிப்படை உரிமைகளுக்கான கருத்தரங்கம்
தடையற்றுத் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தது
அடிமனக் கசடுகளையெல்லாம் வெகு சுலபமாகப்
பொறுப்புத்துறப்பு செய்ய
இருக்குமொரு துருப்புச்சீட்டா யிருந்துகொண்டே
யிருக்கும்
ஒரு சில பெயர்கள்
குறியீடுகள்
பிறவேறும் _
கொக்கரிக்கவும்
குத்திக்குதறவும்.

No comments:

Post a Comment