Wednesday, October 6, 2021

உலக மொழிபெயர்ப்பு தினம் _ நினைவுகூரலும் நன்றி நவிலலும் லதா ராமகிருஷ்ணன்

 30 செப்டெம்பர் _ உலக மொழிபெயர்ப்பு தினம்

 நினைவுகூரலும் நன்றி நவிலலும்

லதா ராமகிருஷ்ணன்

                      

”ஆங்கிலத்தில் திறம்பட எழுதத் தெரிந்தவர். அதிலேயே எழுதி வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம். ஆனால், ஆர்வத் தோடு மனதார தமிழில் எழுதுவதைத் தேர்ந்தெடுத்தார்’, என்று எழுத்தாளர் க.நா.சுவைப் பற்றி பிறர் கருத்துரைக்கக் கேட்டிருக்கிறேன்.

கவிஞர் பிரம்மராஜனும் அப்படியே. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அயராத வாசிப்புப்பழக்கம் கொண்டவர். மியூஸ் இண்டியா என்ற இணைய இதழில் அவருடைய ஆங்கில மொழி பெயர்ப்பில் இடம்பெற்றிருக்கும் தமிழ்க் கவிதைகள் அவருடைய ஆங்கில மொழித் திறனுக்குக் கட்டியங்கூறுபவை.


சமகால உலக இலக்கியம் பற்றி ஏராளமாக வாசித்தறிந்தவர். வரு மானத்தில் முக்கால்வாசி புத்தகங்கள் வாங்குவதற்கே செலவழிப் பவர்.

அவருடைய மீட்சி இலக்கிய இதழில் அவர் தமிழில் அறிமுகப் படுத்திய அயல்மொழி ஆக்கங்கள் ஏராளம். படைப்பாளிகளும் அனேகர்.
அவருடைய வாசிப்பின் அடிப்படையில் அவரே தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்த உலகத்தரமான கவிஞர்கள், படைப்பாளிகளும் நிறைய பேர்.

    

அவர் ஒரு படைப்பாளியை தனது மீட்சி இதழ்களில் அல்லது வேறு இலக்கிய இதழில் அறிமுகப்படுத்தினால் உடனே அந்தப் படைப் பாளியின் எழுத்தாக்கங்கள் வேறு இலக்கிய இதழ்களில் மொழி பெயர்ப்பில் வெளியாவதை பலமுறை கவனித்திருக்கிறேன்.

தனது பரந்துபட்ட வாசிப்பின் பின்புலத்தில் கவிதையாக்கத்தில் பரி சோதனை முயற்சிகள் மேற்கொண்டவர். அந்த பரிசோதனை முயற்சிகளை வெகு எளிதாக ’போலி’ என்று புறந்தள்ளிவிடுவதன் மூலம் அவருடைய கவிதைகளில் இயல்பாக இரண்டறக் கலந்தி ருக்கும் அடர்செறிவான தமிழ்மொழிப் பயன்பாடு, தமிழ் மரபு, தொன்மவியல் சார்ந்த குறியீடுகள், தளும்பிக்கொண்டிருக் கும் ஆழ் மனம், வெளிப்படும் அறிவுநாணயம் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிடும் அராஜகப் போக்கு இன்றளவும் தொடர்கிறது.





ஆனால், அவரது அறிவாற்றல், கவித்துவம், மொழிபெயர்ப்புத் திறன், வாசிப்பு யாவற்றையும் உணர்ந்து மதிக்கும் வாசகமனங் களின் எண்ணிக்கை எந்நாளும் அதிகரித்தபடியே.

போலி, பம்மாத்து, என்பதான பொத்தாம்பொதுவான, கொச்சைத் தனமான தாக்குதல்களுக்கெல்லாம் அஞ்சாமல், அவற்றிற்கெல் லாம் அப்பாற்பட்டு, தமிழ் இலக்கிய வெளியில் கவி பிரம்மராஜ னின் பங்களிப்பு இன்றளவும் அதேஆர்வத்தோடும் வீரியத்தோடும் தொடர்கிறது.
உலக மொழிபெயர்ப்பாளர் தினத்தையொட்டி ஒரு வாசகராக கவி பிரம்மராஜனுக்கு நன்றி தெரிவிக்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment