Friday, October 22, 2021

திறனாய்வைக் கட்டுடைத்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 திறனாய்வைக் கட்டுடைத்தல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பிரதிகளில் பாரபட்சம் பார்க்கப்படவேண்டும் என்பதே
திறனாய்வுக் கட்டுடைத்தலின் பாலபாடம்.
வேண்டப்பட்டவர் எழுதும் அபத்தங்களைச்
செல்லக் குழந்தையின் கிறுக்கலாக
சின்னதாக ஓரிரு குட்டோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.
மோதிரக்கையராக மாறிவிடவும் முடியும்.
ஆகாதவர் ஓகோவென்றெழுதினாலும்
போகாத ஊருக்கு வழிசொல்லும் போக்கத்த எழுத்து
என்று அந்தப் படைப்பையே உடைத்தெறிவதாய்
மடைமீறிய ஆவேசத்தோடு பழிக்கவேண்டும்.
இடையிடையே சில பெயர்கள் வருடங்கள் தேதிகள்
எழுதப்பட்ட படாத வரலாறுகள்
தனக்குத் தெரிந்த அரசியல்
சினிமா தர்க்கவியல் தத்துவம்
பழமொழிகள்
Quotable quote கள் என சரியான விகிதத்தில்
கலந்துவைக்கத் தெரியவேண்டும்.
தன்னை முன்னிலைப்படுத்தத் தெரியாத,
தனிநபர்த் தாக்குதலில் ஈடுபடாத
திறனாய்வெல்லாம் திறனாய்வாயென்ன?
அதிசிறந்த படைப்பானாலும்
அதைப்பற்றி யொரு வரியும் எழுதாமல்
கடந்துபோகத் தெரிந்தவரே
ஆகச்சிறந்த திறனாய்வாளர்.

No comments:

Post a Comment