Thursday, September 2, 2021

நாத்திகாத்திகமும் நாமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  நாத்திகாத்திகமும் நாமும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 (ஆகஸ்ட் 29, 2021 தீதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)




புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய்

 வரைந்தவர்

அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.

 

வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம்

வாயாரப் பாராட்டியபோது

விகசித்துப்போனது மனம்.

 

யாரைப் பற்றியது என்று புரியுமோ புரியாதோ

என்ற பரிதவிப்பில்

குட்டிக் கண்ணனின் அகலத்திறந்த வாயில்

அகிலக்கோளம் காணும்படியாக

இன்னொரு படத்தைப் பாமரனுக்கும்

 புரியும்படியாகத் தெளிவாக வரைந்து

 எங்கெங்கோ தேடி

வெல்வெட்டாய் மின்னும் மயில்வண்ணச்

சட்டமிடும் கடையொன்றைக் கண்டுபிடித்து

காத்திருந்து கையோடு பிரேம் போட்ட படத்தை

வாங்கிக்கொண்டு வந்தவர்

வீட்டின் நுழைவாயிலின் நேர்மேலேயிருந்த

 ஆணியில் அதை மாட்ட

ரத்தக்கொதிப்பில் தலைசுற்றுவதற்கான

வாய்ப்பிருக்கும் நிலவரத்தையும் புறக்கணித்து

ஒரு உயரமான மர முக்காலியில் ஏறி

திருத்தமாக மாட்டிய பின்

சுற்றும் தலையை நிலைப்படுத்த சுவரைப் பற்றிக்

 கொண்டு

திருப்தியோடு கீழிறங்கினார்.

 

பாவம் ஓடி விளையாடவேண்டிய

 குழந்தைக்கண்ணனை

உயரத்தில் ஆணியறைந்து நிறுத்திவிட்டோமே

 என்றெல்லாம் அவர் மனம் அனத்தவில்லை.

 இவரே எத்தனையெத்தனை புகைப்படங்களில்

 ப்படியெப்படியெல்லாம் நின்றுகொண்டும்  

உட்கார்ந்துகொண்டுமிருக்கிறார்!

அப்படியப்படியேதான் பொழுதன்னைக்கும்

மறைவாகச் சென்று ஒரு சிகரெட் குடிக்கக்கூட

வழியில்லாமல் நின்றது நின்றபடியிருக்கிறாரே

என்று அவர் நண்பர் யாரேனும் ஆதங்கப்பட்டால்

ஆமாமாம் என்று ஒருவேளை

பொய்யாக உதட்டைப் பிதுக்கினாலும்

பகபகவென்று சிரிப்புவந்து கும்பி குலுங்காதோ?

 

முடிந்த முடிவான பிரிவின் இறுதிக்கணத்தில்

இடிந்துபோய் நின்ற காதலியோ காதலனோ

கவிதையில் அப்படியே நின்றுகொண்டிருக்கலாம்....

 

காலவழியில் காதலி ஐஸ்கிரீமை அனுபவித்துச்

 சாப்பிட்டுக்கொண்டிருக்க

காதலன் ஜாலியாகப் போய்க்கொண்டிருக்கலாம்

தன் எதிர்காலம் நோக்கி.

 

உறைவும் நகர்வுமே வாழ்வு.

 

கடவுளைத் திட்டித்திட்டி குட்டிக்குட்டி

கல்லெறிந்து காயப்படுத்தி

சூட்சுமமறிதல் மறந்து சொல்லெறிந்து

சோப்ளாங்கியாக்கி

அவரவர் சொப்புவிளையாட்டில் ’கப்புகளாக்கி

அவற்றில் பால் டீ காப்பி

கூல் டிரிங்க்ஸ் நிஜ டிரிங்க்ஸ் என்று கலந்துகட்டி

சிலர் ஊற்றி ஊற்றிக் கொடுத்தவண்ணமிருக்க _

 

தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்

என்று சொல்லும் கடவுளர்கள்

’Contempt of Court’க்கு உரியவர்கள் என்று

காரசாரமாய்

பிரபல தொலைக்காட்சி சேனலொன்றில்

புதிதாக இடம்பெற்றிருந்த நபரொருவர்

ஆரவாரமாய் முழங்கிக்கொண்டிருக்க _

 

A SPADE NEED NOT ALWAYS

 BE JUST A SPADE

IT CAN BE

MORE THAN A  SPADE

OR LESS THAN A SPADE

OR MORE OR LESS A SPADE _

OR EVEN A SPADE NOT SPADE

என்று குலுக்கப்படும் சீட்டுக்கட்டுக்குள்ளிருந்து

ஜோக்கர் பாட்டுப் படிக்க_

 

நடுநிலையாளராகும் அதிதீவிர விருப்பிலொருவர்

கைபோன போக்கில் ‘லைக்’ போட்டவாறிருக்க_

 

'உனக்குத் தெரியாததா என்ன வாழ்வெனும்

 முப்பரிமாணக் கலை’ என்று ஓவியனிடம் கேட்டபடி

உயிர்ப்பின் உறைவை செதுக்கத் தொடங்கினார்

 ஸ்தபதி.

 



No comments:

Post a Comment