Monday, August 2, 2021

7.வன் கதை - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 7.வன் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை.

ஒன்றுக்கிரண்டு இருக்கிறதே கண் உனக்கு

என்று கொஞ்சினாள் தாய்

‘கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

‘ன்’ அல்ல ’ண்’ சொல்லு பார்க்கலாம்

என்று திருத்தினாள் குட்டி அக்கா

கன் வேண்டும் கன் வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

இன்னும் நன்றாகப் பழகவேண்டும் தமிழ்

என்றார் தாத்தா

சின்னப்பையன் தானே போகப்போகப் பழகும்

என்றார் தந்தை

கண்ணையுருட்டி புண்ணாகிப்போன மனதுடன்

தொலைக்காட்சிப்பெட்டிக்குள் பாய்ந்த குழந்தை

அங்கு சுட்டுக்கொண்டிருந்த நாற்பது

கதாநாயகர்களின்

இரண்டு துப்பாக்கிகளைப் பறித்து

கைக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு

வாயால்

சரமாரியாகச் சுட ஆரம்பித்தது.

 

 

No comments:

Post a Comment