Saturday, July 24, 2021

சொல்லும் செயலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லும் செயலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நேற்று ஒரு நெடுஞ்சாலையோரம் நளினமாய் நடந்தபடியிருந்த
தன் படத்தைப் பதிவேற்றினாள்
(அல்லது) பெண் படத்தைப் பதிவேற்றினார்.

நூறுX10 லைக்குகளாவது விழுந்திருக்கும்.
நேற்று முன் தினம் அவளால் (அல்லது) அவரால்
பதிவேற்றப்பட்டிருந்த படத்தில்
நல்ல அரக்குவண்ண சேலையில்
அதி ஒயிலாய் தான் (அல்லது) அவள்
நின்றிருந்த விதம்
புதிய புடவைக்கடையொன்றின் விளம்பரத்தை நினைவுபடுத்தியது.

போன வாரம் அவள் (அல்லது) அவர்
பதிவேற்றியிருந்த படத்தில்
அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி
காதல்பொங்கச் சிரித்துக்கொண்டிருந்த
தன் (அல்லது) பெண் படத்தில்
பக்கவாட்டு முகம் ஒளிவட்டமொன்றில்
ஆளை மயக்கும் ஆயத்தச் சிரிப்பொன்றை
கவனமாய் அப்பிக்கொண்டிருந்தது.

’மேக்கப்
தூக்கலாகவே….

இரண்டுநாட்களுக்கொருமுறை சிகையைக்
கலைத்தும் முடிந்தும்
சிறு சிறு பிரிகளாக நெற்றிப்பொட்டுகளில்
அலைபாயவிட்டும்
தோள்களிலிருந்து ஆரமாகத்
தொங்கவிட்டுமிருக்கும்
தன்னுடைய ஏராள பிம்பங்களைத்
துல்லியமாக்கிப் பதிவேற்றத் தவறுவதில்லை அவள்
(அல்லது) பெண்ணுடைய ஏராள பிம்பங்களைத்
துல்லியமாக்கிப் பதிவேற்றத் தவறுவதில்லை அவர்.

தவறேதுமில்லைதான்……
இருந்தும்
திறந்தவெளி அரங்கத்திலோ
திரையிட்டு மூடிய கதவங்களுக்குள்ளாய்
விரிந்துபரந்திருக்கும் மேடையிலோ
’பெண் என்பவள் வெறும் அழகுப்பொருளல்ல’
என்று திரும்பத்திரும்ப
அவள்
(அல்லது)
அவர்
(அல்லது)
அவர்கள்
உரக்க முழங்குவதைக் கேட்க
ஏனோ அவமானமாய் உணர்கிறது மனது.

No comments:

Post a Comment