Monday, July 5, 2021

காணெல்லைக்கப்பால்..... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

                     காணெல்லைக்கப்பால்.....

‘ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

(*தனிமொழியின் உரையாடல் தொகுப்பிலிருந்து)

                  
தன் உருப்பெருக்கிக் கண்களை யுருட்டியுருட்டி
யென்னைத் தீவிரமாய்க் 
கண்காணித்துக்கொண்டிருந்தாள்
மொத்தமா யென்னை ஒரு பொட்டலத்தில் மடித்துக் கட்டும் விருப்பத்தில்.

என் ஒவ்வொரு அசைவையும் ஆனமட்டும் அலசியலசி
அவளுடைய தொலைக்காட்சிப்பெட்டி தந்துகொண்டிருந்த இலவச சோப்புகளெல்லாம் கரைந்துபோய்க்கொண்டிருந்தன.

அத்தனை அகலமாய் விழிகளை விரித்தால் எதுவும் தப்பாது என்று
என்னவொரு அபத்தமான நம்பிக்கை.

ஊடுகதிர்களுக்குத் தப்பியதொரு ரத்தக்கட்டி
யுள்ளே எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்....

அங்கங்கே சில நரம்புகள் 
வெட்டுப்பட்டுக் கிடக்கலாம்...

என் கடந்தகாலத்தின் துண்டுதுணுக்குகள்
மூளையின் எப்பக்கக் கிடங்கில் குவிந்திருக்கின்றன தெரியுமா?

என் உடலெங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் குருதியின்
எத்தனை விகிதம் என் வருங்காலம் என்று
பிரித்துக்காட்ட இயலுமா?

என் மூச்சுக்காற்றில் மண்டிக்கிடக்கும்
மொழியா வார்த்தைகளைக் 
கணக்கிட்டுக் கூற முடியுமா...?

மனிதர்களைப் பண்டங்களாய் நிறுத்துப்பார்ப்பதை நிறுத்தினால்
எத்தனை நன்றாயிருக்கும் என்றால், 
இவர்களுக்கு என்றாவது புரியுமா....?

No comments:

Post a Comment