Saturday, July 24, 2021

இன்றைய பள்ளிப்பிள்ளைகளும் இன் தமிழும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்றைய பள்ளிப்பிள்ளைகளும் இன் தமிழும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

படம் பட்டமாக பட்டம் படமாகப் படித்துப்
பிரம்படி வாங்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்
இருநூறு முறை அந்தச் சொற்களை எழுதும்

தண்டனைக்காளாகிறான்.
அதே சொற்களை வீட்டுப்பாடமாக
நானூறு தடவை எழுதிவிட்டு
ஆசிரியையிடமும் அம்மாவிடமும் சுளீரென அடிவாங்கித் துடித்து
அழுதுவீங்கிய கண்களோடும் எழுதி வீங்கிய விரல்களோடும்
மறுநாள் பள்ளிக்கு வரும் பிள்ளை
படத்தைப் படமாகவும் பட்டத்தைப் பட்டமாகவும் படித்துக்காட்டியதில்
பெருமை பிடிபடவில்லை ஆசிரியைக்கு.
தடியாலடித்தால்தான் தமிழ் வருமென்றால்
அடிமுதல் முடிவரை அடிக்கவேண்டியதுதான்
என்று திரும்பத்திரும்பக் கூறிச்
சிறப்பு செய்துகொள்கிறாள் தனக்குத்தானே.
அடுத்த பாடத்தில் அதே பிள்ளை
காலை கல்லென்றும் கல்லை காலென்றும்
படிக்கக் கேட்டு பிள்ளையின் தளிர்த்தலையில் பளீரென்றொரு குட்டு குட்டுமாறு
‘பக்கத்திலிருந்த இன்னொரு பிள்ளையை நெட்டித்தள்ள
தன் குட்டிக்கை முட்டி வலிக்க அந்த
சக குழந்தை
வன்முறையாளனாகிக் குட்டுவதை
அகமகிழ்ந்து பார்த்தபடி
பணிமுடித்த நிறைவில் வகுப்பறையை விட்டு வெளியேறுகிறாள் மணியடிக்குமுன்பே
’அன்பே சிவம்’ என்ற திரைப்படப்பாடலை
‘ஹம்’ செய்தவாறே.
எட்டுத்திக்கும் பரவச்செய்வோம் இன் தமிழை
என்ற முழக்கம்
வழக்கம்போல் விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது
வெளியே.’

No comments:

Post a Comment