Saturday, July 24, 2021

வாக்களிப்பீர்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாக்களிப்பீர்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வாக்குச்சாவடிக்குப் போய்க்கொண்டிருந்த என்னை வழிமறித்து
யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்டார்.
எனக்குப் பிடித்த கட்சிக்கு என்றேன்.
எந்தக் கட்சி உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டார்.
நான் வாக்களிக்கவுள்ள கட்சி என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்
என்று ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சிந்திக்கத் தெரியாதவள் என்றேன்.
சமூகப்பிரக்ஞை மிக்கவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் கட்டாயம் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சமூகப்பிரக்ஞையில்லாதவள் என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
மனசாட்சிப்படி வாக்களிப்பவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் மனசாட்சியில்லாதவள் என்றேன்.
தன்மானமுள்ளவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் தன்மானமற்றவள் என்றேன்.
ஆக, இந்தக் கட்சிக்குப் போடப்போவதில்லை, அந்தக் கட்சிக்குத் தான் போடப்போகிறாய். அப்படித்தானே என்றார்.
இது ரகசிய வாக்கெடுப்பு. எந்தக் கட்சிக்கு என்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என்றேன்.
சிந்திக்கத் தெரியாது, சமூகப்பிரக்ஞை கிடையாது மனசாட்சியில்லை தன்மானமும் இல்லை பின் எதற்கு
பூமிக்கு பாரமாய் வாழவேண்டும் நீ என்றவரிடம்_
எல்லாமிருந்தும் வெறுமே ஒரு கட்சியின் விளம்பரப்பதாகையாய்
வரிந்து வரிந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் வாழும்போது
நான் வாழ்வதால் பெரிதாய் என்ன பாழாகிவிடப் போகிறது என்று
நிறுத்தி நிதானமாய்க் கேட்க _
எரித்துவிடுவதாய் என்னைப் பார்த்தவர்
பெருகும் சினத்தில் எனக்கான மனப்பாட வசைபாடலை மறந்து
தன் விளம்பரப்பதாகையோடு விறுவிறுவெனச் சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment