Sunday, May 30, 2021

வானம் வசப்படும் தருணங்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வானம் வசப்படும் தருணங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வழக்கம்போல் ஒரு நூல்வெளியீட்டுவிழா
படித்ததில் பாதிக்குமேல் நல்ல கதைகள்.
விமர்சிக்கத் தோதாய் ஏற்கெனவே
தபாலில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது
பிரதியொன்று.
விழாமேடையில் பேசிமுடித்ததும் கையில் தரப்பட்டது
வழுவழுத்தாளில் பொதியப்பட்டிருந்த இன்னொரு பிரதி.
தரமான கெட்டி அட்டையில்.
விலை நானூறுக்கு மேல்.
விழாமுடிந்து விடைபெற்றுக்கொண்டு வீடுதிரும்ப
கூப்பிடுதூரத்திலிருந்த பேருந்துநிறுத்தத்திற்கு நடக்கலானேன்.
ஆர்வமாய் பேசிக்கொண்டே கூடவந்த வளரிளைஞன்
என் கையிலுள்ள புத்தகத்தை அடிக்கொருதரம் பார்ப்பதைப் பார்த்து
”படித்திருக்கிறீர்களா?” என்று வினவினேன்.
”நண்பனிடம் ஒரு பழைய பிரதியிருக்கிறது. இரவல்
வாங்கிப் படித்தேன்” என்றான்.
”இதை வைத்துக்கொள்ளுங்கள் இன்னொன்று
இருக்கிறது என்னிடம்” எனத்
தந்தேன் வழுவழுத்தாளில் பொதியப்பட்டிருந்த
பிரதியை.
நம்பமுடியாமல் அதைப் பார்த்து அதிசயித்து
நெகிழ்வில் அழுகுரலில் நன்றிபகர்ந்தவனுக்குத் தெரியாது
அவன் தயவால் நான் தாற்காலிக தேவதையாகி யிருப்பது!





No comments:

Post a Comment