Sunday, May 30, 2021

கண்ணிரண்டும் விற்று…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணிரண்டும் விற்று……..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அந்த மெகாத்தொடரில் அண்ணி மாமியாருக்குக் காப்பியில் விஷம் கலந்துகொண்டிருந்தாள்.
அனிச்சைச்செயலாய் சேனலை மாற்றிய கை நின்ற அடுத்த சேனலில்
அக்கா தங்கையின் ஜூஸில் எலிமருந்தைக் கலந்துகொண்டிருந்தாள்
அய்யோ என்று அலறாமல் அலறியபடி இன்னொரு சேனலைச் சென்றடைய அங்கே யொரு தோழி இன்னொரு தோழியைப் பின்பக்கமாக நின்று பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தாள்
அடுத்த நாள் அந்தத் தோழி ஆவியாய் வருவதற்குத் தோதாக.
பதறி பத்து சேனல்கள் தள்ளி திருப்பினால் அங்கே
கதாநாயகி பச்சைக்கிளியாக மாறி பார்ப்பவர்மீதெல்லாம் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தாள்.
பட்டறைகளில் உருவாகும் அத்தனைத் தொடர்களிலும்
பயங்கர சதித்திட்டங்களெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தன
திருக்கோயில் பிராகாரங்களிலும் மண்டபங்களிலும்.
ஒரு கையால் கன்னத்தில் போட்டுக்கொண்டே இன்னொரு கையால்
பிச்சுவாக் கத்தி, பட்டாக்கத்தி கைத்துப்பாக்கி வெடிகுண்டு என்று விதவிதமாய் ஆயுதங்களைத் தாங்கி யாரையாவது தீர்த்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள் ஆண்கதாபாத்திரங்களெல்லாம்.
பெண் கதாபாத்திரங்களுக்கு இருக்கவே இருக்கிறது பிரசாதத்தில் பல்லியை விழச்செய்யும் திருப்பணி.
கதாநாயகிகள் தீச்சட்டி ஏந்தி காவடி ஏந்தி அடிப்பிரதட்சணம் செய்து அங்கப்பிரதட்சணம் செய்து வாரத்திற்கு ஏழு நாட்களும் ஏதாவதொரு விரதமிருந்துகொண்டிருக்கிறார்கள்.
விரைவில் உடன்கட்டை ஏறினாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.
ஆத்திகத்திற்கு ஆத்திகம் நாத்திகத்திற்கு நாத்திகம்
அதோ பாருங்கள்
சாத்திரம் படித்துக்கொண்டே வருகிறது பேய்;
அடுத்த சேனலில் ஊளையிடுகிறது நாய்;
அடுத்ததில் ஓநாயின் திறந்த வாய்
பிறாண்டும் கைக்குக் கிடைத்த பாய்
கிழிந்ததாக,
ரிமோட்டின் செயலின்மையைப் பழித்தபடி
விழிகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழையும்
பிராண்ட் நியூ மெகாஆஆஆஆஆத்தொடருக்கான ‘டீஸர்’ அழைப்பிதழ்

No comments:

Post a Comment