Monday, May 31, 2021

என் அடையாள அட்டைகளைக் காணவில்லை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என் அடையாள அட்டைகளைக் காணவில்லை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இரண்டு மூன்று வீடுகள்
இரண்டு மூன்று அலுவலகங்கள்
இரண்டு மூன்று ஆட்டோக்கள்
இரண்டு கிலோமீட்டர் பொடிநடை
இரண்டு மூன்று கடைகள்
இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள்
இரண்டு மூன்று மணிநேரங்கள்
இவற்றிலெங்கோ எதிலோ
என் அடையாள அட்டைகள் பறிபோயிருந்தன.
நான் இப்போது நானே நானா
யாரோ தானா....
விடுதலையுணர்வும் ஏதிலி உணர்வும்
பாதிப்பாதியாய்.....
இன்னும் சில நாட்கள் அலையவேண்டும்
இன்னும் சில வரிசைகளில் நகர வேண்டும்
இன்னும் சில விளக்கங்களைப் பகரவேண்டும்
இன்னுமின்னும் முகக்கவசங்களுக்குள்
என்னை நானே முகர்ந்தாக வேண்டும்.
இன்னும் சில வேண்டாச் சிகரங்களைத் தாண்டியாகவேண்டும்
அடையாளமிழப்பைப் போலவே
அடையாள மீட்பும் ஆன்ற புத்துயிர்ப்பும்
ஆகக் கடினமாகவே.

No comments:

Post a Comment