Monday, May 31, 2021

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும் _லதா ராமகிருஷ்ணன்

 

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்


_லதா ராமகிருஷ்ணன்

(31.05.2021 _திண்ணை இணையதளம் இதழில் வெளியாகியுள்ளது)



பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம்.

 

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரி யர்(கள்?) விவகாரம்,

 

கவிஞர் வைரமுத்துவின் ‘மீ-டூ’ விவகாரம்(அது ஒரு பெண் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. ஒரு பெண் மட்டும் தானே மதிப்பழிக்கப்பட்டி ருக்கிறார், என்று விட்டுவிடுவதும் சரியல்ல),

 

இப்பொழுது தமிழில் இருக்கும் தரமான தமிழ்க் கவிஞர்களையெல்லாம் விட்டுவிட்டு அவருக்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவிக்க இருப்பது (இப்பொழுது அந்த முடிவு கைவிடப்பட்டிருப்ப தாகவோ, பரிசீலனையில் இருப்பதாகவோ படிக்கக் கிடைத்தது),

 

பெண் மதிக்கப்பழிக்கப்படுதல் தொடர்பாய் சிலர் சில இடங்களில் கண்டுங் காணாமல் இருப்பது, சில இடங்களில் சீறிப் பாய்வது,

 

சிலர் இதுதான் சாக்கென்று சகலரோகக் காரணி யாய் குறிப்பிட்ட இனத்தை எதற்கெடுத்தாலும் குத்திக் குதறுவது,

 

உலகத்தில் வேறெங்குமே பெண்ணை மதிப்பழித் தல் நடப்பதேயில்லை என்பது போல் இந்தி யாவை மட்டந் தட்டுவது,

 

ஒரு குற்றத்தைப் பற்றிப் பேசும்போது ‘வரலாறு போதிப்பதாய் (பாரபட்சமாக எழுதப்படாத வரலாறு எது?) விலாவரியாய் பேச ஆரம்பித்து என்ன பேச ஆரம்பித் தோம், எதற்குப் பேச ஆரம்பித்தோம் என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது பேச வந்ததை தான் பேச விரும்பு வதற்கு உகந்ததாய் பயன்படுத்திக்கொள்ளும் அதீதப் பிரக்ஞையோடு பலப்பல பேசி மற்றவர்கள் எல்லோருமே அறிவிலிகள் என்ற பாவத்தில் வகுப்பெடுப்பது,

 

ஓர் அநியாயத்தை தான் மட்டுமே சுட்ட முடியும் என்றும், தான் சுட்டினால் மட்டுமே அது அநியாய மாக முடியும் என்றும் பெரிய மனிதத் தோர ணையை பாவித்துக் கொண்டு அந்த அடிப்படை யில் எந்தவொரு சமூக அநீதி யையும் அணுகு வது, ஆராய்வது –

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

தவிர, ஒரு பிரச்சினையைப் பேசுகிறேன் பேர்வழி என்று ஒரு PACKAGE ஆக பல பிரச்சினைகளைத் தொகுத்து அதில் ஒன்றை எதிர்ப்பவர் அதனோடு சேர்ந்து தரப் பட்டுள்ள அனைத்தையும் எதிர்த்தாக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவது இங்கே பெரும்பாலான சமூகநலக் குழுக்களிடையே கடைப் பிடிக்கப்பட்டுவரும் அடிப்படை நியதியாக இருக்கிறது.

 

அதிகாரம் இல்லாமலேயே நம்மிடையேதான் எத்தனை யெத்தனை அதிகார மையங்கள்….

 

இதில் ஏதேனும் ஒரு செல்வாக்குள்ள குழுவில் இடம் பெறாமல், அரசியல் கட்சியின் சார்பில் லாமல் தனி மனிதர் ஒருவர் மாற்றுக்கருத்துரைத் தால் அவர் எப்படியெல்லாம் கொச்சையாக மதிப்பழிக்கப்படுவார் என்பதை நம்மால் முகநூலிலேயே பார்க்க முடிகிறது.

 

ஆக, அதிகாரம் என்பது எங்கேயும் ஒரேமாதிரியாகவே செயல்படுகிறது. அடுத்தவரைத் தன் காலைப் பிடிக்குமாறு நேரடியாகச் சொல்லாவிட்டாலும் தன் கருத்துக்கு அடுத்தவர் அடிமையாக இருக்கவேண்டு மென்றே எதிர்பார்க்கிறது.

 

சமபந்திபோஜனம் போன்ற பொதுநிகழ்வைத் தாண்டி தனிவாழ்வில், பிறர் கண்களுக்குத் தட்டுப்படாத சமயங்களில் அந்தந்த சாதிக் காரர்கள் அவரவர் சாதிக்காரர்களை சமமாகத் தான் பாவிக்கிறார்களா? சமமாகத்தான் நடத்து கிறார்களா?

 

அரசியல் கட்சிகளிலெல்லாம் ஒரு சாதாரணத் தொண்ட ருக்குக்கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா? குறிப்பாக, மாற்றுக்கருத்தை முன்வைக்கும் சுதந்திரம் இருக்கிறதா? முன்வைக்கப்பட்டால் அது பொருட்படுத்தப்படுகிறதா?

 

அரசியல்கட்சிகள் வேண்டாம். எந்தவொரு நிறுவனத்திலும், பொதுக் கூட்டங்களிலும் படிநிலைகள் பராமரிக்கப்படுவதில்லையா?

 

சாதியற்ற மேலைய சமூகங்களில் சமத்துவம் மனிதர்களிடையே எல்லா நிலைகளிலும் பேணப்படுகிறதா?

 

எதிர்மறை பதில்களையே தரும் கேள்விகள் எத்தனை யெத்தனை மனதில்….

 

இந்த அதிகார மமதையே, அடக்கியாளும் வெறியே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு குழந்தையை மூர்க்கமாக (அன்பென்று சொல்லியவண்ணமே) அடிக்கச் சொல்கிறது;

 

தன்னிடம் பணிபுரியும் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குகிறது – அவளுக்கு வேறு வழியில்லை – பொறுத்துக்கொண்டு போவதைத் தவிர என்ற நினைப்பில்.

 

அப்படியே தெரிந்தாலும் அவமானம் அவளுக்குத்தான் அதிகம் என்ற தெளிவில்.

 

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒரு நல்ல கதாபாத்திரம் கணநேர உந்துதலில் இடறி விழுந்துவிடும்; அதை Tragic Flaw என்பார்கள். அந்த இடறலே அவன்/ அவள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடும்.

 

நான் புகுமுக வகுப்பில் படித்த ஒரு கதை IMPULSE என்பது தலைப்பு என்று நினைக்கிறேன். ஒரு கடைக்குப் போகும் கதாநாயகன் கணநேர உந்து தலில் ஒரு பொருளைக் களவாடி விடுவான். பிடிபட்டுவிடுவான். அது எப்படியெல்லாம் அவன் வாழ்க்கையைத் தலைகீழாக்கிவிடுகிறது என்பது தான் கதை.

 

ஆனால், தன்னிடம் படிக்கும், பணிபுரியும், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களிடம் கேவல மாக தொடர்ச்சி யாக நடந்துகொள்பவர்கள் கயவர்கள்.

 

அப்படியே ஒரு உந்துதலில் தவறிழைத்துவிட்டா லும் அதன் மறுமுனையி லிருக்கும் பெண்ணுக்கு அதன் விளைவாய் ஏற்படும் அக, புற பாதிப்புகள் எத்தனை யெத்தனை.

 

ஒரு கொலைதானே செய்திருக்கிறார் என்று ஒரு கொலையாளியை விட்டுவிடுமா சட்டம்?

 

படைப்பாளிகளாவது சில அநியாயங்களைக் கண்டும் சில அநியாயங்களைக் காணாமலும் இருப்பவர்களாக இருக்கலாகாது, இருக்க மாட்டார்கள் என்ற என் எண்ணமும் நம்பிக்கையும் அதீதமோ? அநாவசியமோ?

 

இப்போதெல்லாம் கோபத்தைவிட வருத்தமே அதிகமாக மனதை ஆக்கிரமிக்கிறது.



No comments:

Post a Comment