Monday, May 31, 2021

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 5 கவிதைகள் - (2)

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 

5 கவிதைகள் - (2)


1.. நல்ல கவிதை

தன் கவிதையைக் காட்டிலும்

அதற்குக் கிடைத்த விருதையே அதிகம் நம்புபவராய்
தன் கவிதையின் கவிதையே அதில்தான் அடங்கியிருப்பதாய்
ஆள்காட்டிவிரலையும் மோதிரவிரலையும் நீட்டி
வெற்றி சமிக்ஞையைக் காட்டியவாறு
விருதின் பெயரைத் தன் அடைமொழியாகப்
பெயருக்கு முன்னாலும்
பெற்ற கல்விப்பட்டமாகப்
பெயருக்குப் பின்னாலும்
மறவாமல் சேர்த்து
நேர்சாட்சியாய் சில விழாப்படங்களையும்
செல்ஃபிகளையும்
ஊர்முழுக்கப் பறக்கவிட்டுக்கொண்டிருப்பவரை
விட்டு விலகிக்கொண்டிருக்கிறது கவிதை.


2. உறைந்த புன்னகைகளும்
மறைந்த முகக்கவசங்களும்
அவர்கள் ஆறேழு பேரிருப்பார்கள்
கூட்டலும் பெருக்கலுமாக.
அத்தனை பேர் முகங்களிலும் ஒரு சிரிப்பின்
அல்லது சிறு புன்னகையின் பிரதிகள்
கச்சிதமான அளவுகளில் பொருந்தியிருந்தன.
சொல்லிவைத்தாற்போல் அவர்களனைவரும்
ஆளுக்கொரு புத்தகத்தை
ஏந்திக்கொண்டிருந்தார்கள்.
நூல் முகம் துல்லியமாய்த் தெரிந்து
ஆள் முகம் மங்கலாகிவிடுமோ
என்று அவர்களுக்கும்
ஆள் முகம் தெரிந்து
நூல் முகம் மறைந்துவிடுமோ
என்று புத்தகங்களுக்கும் இருக்கும்
மன அவசம்
கவனமாகப் பார்த்தால் புலப்படக்கூடும் புகைப்படங்களில்.
புகைப்படங்களில் காணக்கிடைக்காத
முகக்கவசங்கள்
கொரோனா பரவினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று
முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றன.


3.யார் நீ?
ஓர் அதி அழகிய பசும் இலை
அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _
அத்தனை இனிமையான பாடல்
அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே
அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _
பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து
பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _
கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில்
கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _
சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே
நேர்மேலே நிமிர்ந்திருக்கும் மரமொன்று இரண்டாகப் பிளந்து உச்சிமண்டையில் விழுவதைப்போல் _
இன்னும் என்னென்னவோபோல்
உன் கவிதைவரிகளின் நுட்பத்தோடு கூடவே வரும்
வன்மம் நிறை உரைநடையில்
கொச்சைப் பேச்சில்
கோணல்வாய்ச் சிரிப்பில்
அரசியல் சார்ந்த பொய்ப்பித்தலாட்ட வரிகள்
பேசப்படுவதும் எழுதப்படுவதுமாய் _
அய்யோ.....


4.காரணகாரியம்

’கருத்துக் கந்தசாமி’ என்று எதற்குச் சொல்லவேண்டும்?
கந்தசாமிகள் மட்டுமா கருத்துச் சொல்கிறார்கள்?
அப்படிச் சொல்வது கந்தசாமி என்ற பெயருடையவர்க ளைப் பரிகசிப்பதாகாதா?
பழிப்பதாகாதா?
பொதுவாக சாமியையும் குறிப்பாக கந்த சாமியையும்
என்றுகூடச் சொல்ல முடியும்….
சீக்கியர்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்து
சகட்டுமேனிக்கு பகடிசெய்து திரித்து
குலுங்கி வலிக்கும் வயிறுகளில் இன்னமும்
நகைச்சுவையுணர்வு செரிமானமாகாமலேயே……
கந்தசாமி என்ற பெயர்
அந்தப் பெயருடையவரை மட்டும் குறிப்பதில்லை
என்று புரிந்துகொள்ளவியலாத அளவு
அறிவீலியில்லை நான்.
இருந்தாலும்,
நானும் கருத்துச் சொல்ல
ஒரு காரணம் வேண்டாமா?
அதனால்தான்.......


5. அலைபேசி
ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அலைபேசிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட
சில ‘மிஸ்டு கால்கள்’ முணுமுணுக்கத் தொடங்கின.
“என் விளம்பர வாசகங்களுக்கு வழிவிடலாகாதென்றே அலைபேசியை இந்த நேரமாய்ப் பார்த்து அணைத்துவைத்திருப்பாள்” என்று
001 2 000 என்று நீளும் எண்ணிட்ட அழைப்பு குறைப்பட்டுக்கொள்ள _
“சமத்துவம் பற்றிய எனது கொள்கை முழக்கத்தைக் கேட்கப்பிடிக்காமல்தான்
சட்டென்று அணைத்திருப்பாள்” என்று
ஆயிரம் ஏக்கராக்களுக்குக் குறையாமல் அந்த குடிசைவாழ்ப்பகுதிக்கு அருகில் மாளிகைகளும் பிரம்மாண்ட மளிகைக்கடைகளுமாக கொழித்திருக்கும் கட்சியின் தலைவருடைய பதிவுசெய்யப்பட்ட குரலில் புகார் கூறியது _
0003 என்று முடியும் எண்.
“சாப்பிட்டுமுடித்த பின் இன்னும் மெல்ல ஏதேனும் கிடைக்குமா என்று நான் நம்பிக்கையோடு சுழற்றும் சில பல அலைபேசி எண்களில் இவளுடையதும் ஒன்று.என்பதைக் கண்டுகொண்டவளல்லவா?” என்று
கோபத்தோடு கூறியது இன்னொரு எண்.
மஸாஜ் செய்யவேண்டுமா என்று கேட்கும் எண் 9453--------------32;
ஆண் நண்பர்களைப் பெற ஆசையாயிருக்கிறதா என்று
ஆசையாசையாகக் கேட்கும் 78456------0 எண் ;
ஆண்டுகள் இருபதுக்குப் பின் திடீரென்று
மீண்டும் தொடர்புகொண்டு
என் அரிய நேரத்தை வீணடிக்க
நெருங்கிய நட்பினர் பாவனையை தாங்கிவரும்
999555----எண்ணின் அழைப்புகள் குறைந்தபட்சம் இரண்டு….
'ஆன்' செய்யும்வரை அலைபேசிக்குள்ளேயே குந்திக்கொண்டிருப்பவர்கள்
ஆன் செய்தவுடன் தொப் தொப்பென்று வேகமாய் குதிப்பார்கள்.
அவர்களிடமிருந்து தப்பிக்கும் வழியறியாமல்
ஆஃப் பொத்தானை அழுத்தியும் அழுத்தாமலும் அலைக்கழிந்துகொண்டிருக்கும் மனம்…..




No comments:

Post a Comment