Sunday, September 13, 2020

ஏழை ராணி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏழை ராணி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ
அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்……

இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி
உருவாகிவரும் சொற்திரள்கள்
அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும்.
உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை
பீறிட்டெழும் நாள் வரின்
இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும்
அதை எப்படி எதிர்கொள்ளும்.......

சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள்.
சிலர் ஐந்து ரூபாய்.
அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய்.

இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு
ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க வழியிருக்கிறதா,
தெரியவில்லை.

உரிமையோடு அதட்டுவதாய் அருகழைத்து
புரிபடா உச்சரிப்பில் எதையோ சொல்லி
ஒரு குழந்தைபோல் அந்த மனிதர் கையேந்தும்போது
அந்த நாளின் முடிவில் வீடுதிரும்பும் ஏழை ராணி
அவருக்கென ஒரு ஐந்து ரூபாயாவது
தன் நடுத்தரவர்க்கக் கைப்பையில் எங்கேனும்
மீதமிருக்கவேண்டுமே என்ற பிரார்த்தனையோடு
வெறும் தொப்பிக்குள் கைநுழைத்து
வெளியே முயல்குட்டியை எடுத்து
அதைப் புறாவாக்கிப் பறக்கவிடும் மந்திரவாதியாய்
மாறிவிடுவாள்!

அப்படி ஒருமுறை அவளுடைய கை உண்மையாகவே
ஒரு மாயாஜாலக்காரியின் கையாக மாறி
அவளே அறியாமல் அவளது கைப்பைக்குள் என்றோ புதையுண்டிருந்த
நூறு ரூபாய்த் தாளொன்றை
அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்பாய்க் கையிலெடுத்தபோது
அரைக்கணமும் யோசிக்காமல் அதை
அந்த மனிதர் கையில் கொடுத்துவிட்டு
அன்றிரவு முழுவதும் அந்த நூறு ரூபாய் நோட்டு அவரைச் சிலரிடம் திருடனாகக் காட்டி
பேசமுடியாத அவரை நிறையபேர் நையப்புடைப்பதாக
விழித்தநிலையிலேயே கொடுங்கனவு வந்து
நெடுநேரம் கலவரத்திலாழ்ந்திருந்தாள்
பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக் கும்
ஏழை ராணி.

இன்று
பிளிறலா, வீறிடலா, உறுமலா பொருமலா
விசும்பலா விசன முணுமுணுப்பா
என்று பிரித்துச்சொல்லவியலாதபடிக்கு
எல்லாம் கலந்தொலிக்கும் தனதேயான பாதிக் குரலும்
தன் சைகைகளின் வழியாக ஒலிக்கும் மீதிக்குரலுமாய்
தான் அங்கிருந்துபோய்விடப்போவதை அந்த மனிதர்
பிரியாவிடையாய்த் தெரிவித்தபோது
வருத்தத்தை மீறி மனதில் பரவிய நிம்மதிக்காக
தன்னைத்தானே கசையாலடித்துக்கொண்டு
வீடுதிரும்பும்
நியாயந்தவறா ஏழை ராணியின் கண்களில் திரளும் நீர்த்துளிகளை
எங்காவது சில கோடிகளுக்கு விற்க இயலுமானால்
அவள் விரும்பும் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடியலாம்….

No comments:

Post a Comment