Saturday, September 12, 2020

ஏற்ற இறக்கங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஏற்ற இறக்கங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முனைப்பாகப் படித்துக்கொண்டிருந்தார் கேள்விகளை

மனக்கண்ணால்.

நான்கைந்து சொற்கள், சொல்வழக்குகள் தரப்பட்டிருந்தன
வினாத்தாளில்.
ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் ஐம்பது வரை மதிப்பெண்கள்.

’மலையேறிவிட்டது காலம்’ என்ற வரியை மொழிபெயர்க்க
எத்தனை முயன்றும் முடியாமல்
மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.

’வடக்கிருத்தல்’ என்ற சொல்வழக்கு நல்லவேளையாக தரப்பட்டிருக்கவில்லை.

அதற்காய் ஆறுதலடைய முடியாதபடி
‘அவன் சரியான சாம்பார்’
ஆறாவது கேள்வியாக இடம்பெற்றிருந்தது.

தலைசுற்றவைக்க அதுபோதாதென்று
’விழல்’ கண்ணில் பட்டு
அழத்தூண்டியது.

’கீழே விழலா’ ’விழலுக்கு இறைத்த நீரா’ என்று
contextஇல் வைத்துப் புரிந்துகொள்ளலாமென்றால்
இருபொருளையும் தருமொரு சொல்லாயிருந்த அது
அத்தனை வெள்ளந்தியாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது.

முதலில்,
மலையேறிவிட்ட காலத்தை இறக்கவேண்டும்.
எப்படி?
முதன்முதலில் காலம் மலையேறியது எப்போது?
எதன்பொருட்டு ஏறியது?

மலையில் வடக்கிருக்கிறதோ காலம்?

ஒருவேளை இது ஆங்கில columnமோ?

சாம்பார் ஜெமினிகணேசன் மட்டும்தானா?
வேறு யாரேனுமா?

நிஜமா நிழலா சாம்பார்?
அப்படியானால் குறியீடு நிழலா?

நிழல் shadow நிழல் shade….

ஒன்றும் இரண்டும் மூன்றென்பது
சரியும் சரியல்லவும் _
மொழிபெயர்ப்பிலும்.

மொழியேறியும் இறங்கியும்
வழிபோகியபடி
இருந்தவிடமிருந்தவாறு
காத்துக்கொண்டிருக்கிறது காலம்
ஏறவும் இறங்கவுமான மலைக்காக.

காத்துக்கொண்டிருக்கிறார்கள்
மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும்
மிகச் சரியான இணைச்சொற்களுக்காய்.

’போயும் போயும் இதற்காகவா பொழுதை வீணடிப்பார்கள்’
என்று வேறு சிலர்
கையில் கிடைத்த வார்த்தைகளைக்கொண்டு
குத்துமதிப்பா யொரு பொருளைத் தந்து
பத்தரைமாற்று இலக்கணப் பிழைகளோடு
அயர்வென்பதறியாமல்
பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருமொழிகளை.

No comments:

Post a Comment