Saturday, September 12, 2020

ஓருடல் ஈருயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓருடல் ஈருயிர்

‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)

அத்தனை அன்பாகக் 

கரைந்துருகுகிறார்கள்

அத்தனை வலிக்க 

வலிக்க 

அழுதரற்றுகிறார்கள்

அத்தனை 

இன்முகத்தோடு

தத்துவம் 

பேசுகிறார்கள், தர்க்கம் 

செய்கிறார்கள்

மனிதநேயம் 

பேசுகிறார்கள்

வாழ்வின் மகத்துவம் 

பேசுகிறார்கள்

இனிய உளவாக என்ற வள்ளுவரை

முடிந்தபோதெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்கள்....


அத்தனைக்கத்தனை வெறுப்புமிழ்கிறார்கள்

அவதூறு செய்கிறார்கள்

அச்சமில்லாமல் உச்சஸ்தாயியில்

கத்தித்தீர்க்கிறார்கள்

கலப்பற்ற அப்பட்டப் பொய்களை

பொறுப்புத்துறந்தபடி கண்ணில்படுபவரை

யெல்லாம் கொள்ளைக்காரர்களாக்கிக்

கழுமேடைக்கு இழுத்துச்செல்கிறார்கள்.

வேண்டியவரின் பெருந்தவறைக் கண்டுங் 

காணாமலும்

அல்லது மென்சிரிப்போடு செல்லமாய்க்

கண்டித்தும்

பிடிக்காதவரென்றால் அவரைக்

கொச்சையாய் மதிப்பழித்தும்

அடுக்கடுக்காய் அவர் மீது பழிபோடும்

வழி தேடியும்

சாமான்ய மக்களிடமிருக்கும் சொல் நேர்மை

செயல் நேர்மை

சிறிதுமின்றி சாய்கிறார்கள் சிலர் பக்கம்

சுய ஆதாயத்திற்காய்

சாய்க்கிறார்கள் நியாயத்தராசை.

சத்தியமாய்ச் சொல்கிறேன் - அத்தனை 

அருமையான

வாழ்க்கைத் தத்துவங்களை உதிர்க்கிறார்கள்

வாழ்வின் தரிசனங்களைப் பதிவுசெய்கிறார்கள் _


அதே கையால் அத்தனை தடித்தனமாய்

பயன்படுத்துகிறார்கள் எழுதுகோலை

அடியாளாய்.

Dr Jekyll and Mr Hyde என்றுமாய்

புத்தக விளிம்புகளைக் கடந்தவாறு

பாலினங் கடந்தவாறு………..


Dr Jekyll and Mr Hyde : 1886இல் பிரசுரமான, ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் எழுதிய குறுநாவல். கதைநாயகன் Dr. ஜெக்கிள் இயல்பாக இருக்கும் போது நல்லவராகவும், பரிசோதனைக்காக ஒரு மருந்தை உட்கொள்ளும் போது குரூரமானவராகவும் நடந்துகொள்வார்.

No comments:

Post a Comment