Saturday, September 12, 2020

உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம்



’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


அவர்கள் ஆளுக்கொரு பட்டியல்

 வைத்திருக்கிறார்கள்.

பல நேரங்களில் ரகசியமாகவே

 வைத்திருக்கிறார்கள்

தத்தம் பட்டியலை.


ஒரு பட்டியல் பகடைக்காயாக முடியூம்.

பெரிய துருப்புச்சீட்டாக மாற முடியும்.

பிரம்பாக பிச்சுவாக் கத்தியாக

பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக -

இன்னும் பலப்பலவாக்க முடியும்….


சில நேரங்களில் சிலரை மட்டும் கறாராகத்

தேர்ந்தெடுத்துக்கொண்டு

தங்கள் பட்டியல்களை ஒருவரோடொருவர்

 ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்கிறார்கள்.


அந்த சிலர் வெகுசிலரேயானாலும்

அவர்களில் ஒருசிலர்

காலப்போக்கில் 

கடும்பகையாளியாகிவிடும்போது

சில பட்டியல் ரகசியங்கள் அம்பலமேறுகின்றன.


பட்டியலில் அடிக்கப்பட்ட பெயர்கள்

திருத்தப்பட்ட பெயர்கள்

முதலிடத்திலிருந்து முப்பதாவது இடத்திற்கும்

முன்னூறாவது இடத்திலிருந்து தொன்னூறாவது

 இடத்துக்கும்

நகர்ந்துவிட்ட பெயர்கள்

சில இடங்களில் மாய மசியால் எழுதப்பட்டதாய்

மனம் போன போகில் காணாமல்போய்விடும்

 பெயர்கள்

சில தருணங்களில் மந்திரக்கோலால்

 வரவழைக்கப்பட்டதாய்

பட்டியலில் சட்டென்று வந்து ’பச்சக்’ என்று

ஒட்டிக்கொள்ளும் பெயர்கள்

செல்லப்பெயர்கள்

புனைப்பெயர்கள்

இடுகுறிப்பெயர்கள்

ஆகுபெயர்கள்

இடவாகுபெயர்கள்

அடைமொழிகள்

வசைச்சொற்கள்…..


காலம் செல்லச்செல்ல ஒருவர் கையிலுள்ள 

பட்டியலே

அவர்கள் அடையாளமாகிவிடுகிறது.

ஒருவேளை பட்டியல் தொலைந்துவிட்டால்

அதன் ரகசிய இடத்திலிருந்து 

களவாடப்பட்டுவிட்டால்

எடுக்கப்படும் கைக்குரியவர் தன் 

தோற்றத்திற்குரியவராகிவிடுவாரோ

என்ற பெரும்பீதியும்

இறந்தபின்பும் அமரராக இருக்கும் தம்மைக்

கற்பனையில் கண்டு இறும்பூதடையும்

பேராவலுமாய்

பெருகும் குருதியும்

பொறுக்கமுடியாத வலியும்

ஒரு பொருட்டில்லையென்று

உள்வெளியெங்கும்

கூர்கல்லாலும் கத்திமுனையாலும்

செதுக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள்

தத்தமது பட்டியல்களை.

No comments:

Post a Comment