Sunday, September 13, 2020

நனவோடை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நனவோடை

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கட்டத்தை விட்டு நீங்கி வெகுதூரம் வந்துவிட்ட பிறகு
அந்தக் கட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்பவரிடம்:
அந்தக் கட்டம் இப்போது வட்டமாய் முக்கோணமாய்
கட்டத்துள் கட்டமாய்
கட்டத்தின் நான்கு கோடுகளில் ஒரு கோடு மட்டுமாய்
ஒரு கோட்டினுள்ளிருக்கும் ஓராயிரம் புள்ளிகளாய்
வளைந்த வானவில்லாய் வானுயர்ந்த மலையாய்
கண்களுக்கும் கண்ணாடிகளுக்கும் அப்பாலான வடிவமாய்
உருப்பெருக்கியால் துல்லியமாய் காண்பிக்கவியலாத துகளாய்
நெற்றியைச் சுருக்கி புருவங்களைச் சுருக்கி
விழிகளை இடுக்கிக்கொண்டு
எப்படிப் பார்த்தாலும் முழு உருவம் எதுவும்
தெரியாத நிலையில்
நனவோடையில் நடக்க முற்படும் கால்கள்
முன்னால் நீளும் காலம் விலகிச்செல்வதைப் பார்த்து
ஓடோடி வந்து அதன் கையைப் பிடித்துக்கொண்டு
மேற்கொண்டு நடந்தபடியே
திரும்பிப்பார்க்க
தொலைதூரத்தில் தெளிவற்று நீரில் நலுங்கியபடித்
தெரிகிறது _
நினைவுகளின் நிழல்களின் நகல்களின்
நாற்பத்தியாராவது பிரதி.

 

No comments:

Post a Comment