Tuesday, May 26, 2020

எனக்குப் பசிக்கிறது - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

எனக்குப் பசிக்கிறது
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நான் தினமும் காலையில் என்ன சாப்பிடுகிறேன் என்று
உங்களுக்குத் தெரியுமா?
ஏதாவது சாப்பிடுகிறேனா என்றாவது தெரியுமா?
என்றாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?
நான் வாக்குவங்கி இல்லை என்பதாலேயே
என் பள்ளிக்கு வந்து
எனக்கிருக்கும் வசதிக்குறைவைப் பார்க்க
நீங்கள் நேரம் ஒதுக்குவதேயில்லை
என்று நிறையவே எனக்கு வருத்தமுண்டு.
எனக்குப் பசிக்கிறது.
எனக்கு உங்களிடம் எந்த பேதமுமில்லை.
அன்போடு யார் தந்தாலும் என் வயிறு நிறையும்.
வயிறு நிறைந்தால்தான் படிக்க முடியும்.
கைகால்கள் வலுவோடிருந்தால்தானே
நான் விளையாட முடியும்?
உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்
அரைகுறையாகவாவது என் வயிறு நிறைவதை அனுமதியுங்கள்.
என்னை வளரவிடுங்கள்.
உங்கள் வெறுப்புக்கு என் வயிறை
இரையாக்கிவிடாதீர்கள்.

No comments:

Post a Comment