Tuesday, May 26, 2020

ஷோபாசக்தி சிறுகதைகள் குறித்து....

ஷோபாசக்தி சிறுகதைகள் குறித்து....



M.rishan Shareefபுத்தகங்களை வாசிப்பவர்கள் - Book Readers இல் இடம்பெற்றுள்ளது
தேசத்துரோகி
முதல் பதிப்பு மே 2003
(அடையாளம் பதிப்பகம்)
180 பக்கங்கள்
14 சிறுகதைகள்
(விலை: இந்தியாவில் ரூ.60. )

(சில எண்ணப்பகிர்வுகள் – லதா ராமகிருஷ்ணன்)
2003க்குப் பிறகு இந்த நூல் இன்னும் சில பதிப்புகளைக் கண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. கருப்புப்பிரதிகள் மூலமும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். அடுத்தடுத்த பதிப்புகளில் நூலின் விலை அதிகமாகியிருக்கக்கூடும்.
என்னிடமுள்ளது 2003இல் அடையாளம் வெளியீடாக வந்தது. இப்போது மீண்டும் படித்தேன்.
இந்தப் பனிரெண்டு கதைகளிலும் இலங்கையில் தமிழ் ஈழத்திற்காய் நடந்த போரும் அதன் நியாயமும், நடைமுறைகளும், ஆறாத்துயரும், பாதிப்புகளும், புலம்பெயர்வுகளும், அந்நிய மண்ணில் அகதியாக வாழ்வதில் அடைந்த ரணங்களும் ஆறா வடுக்களும் எந்தவிதமான மிகையுணர்ச்சியும் இல்லாத அதேசமயம் உயிர்ப்புமிக்க எழுத்தில் தரப்பட்டுள்ளன.
கதைகள் எல்லாவற்றிலும் புலம்பெயர்ந்தவர்கள், புலப்பெயர்வுக்காக படாதபாடுபடுகிறவர்கள் வருகிறார்கள்.

நாட்டில் சிங்களர்களிடம் அனுபவித்த அவமானங்கள் அடக்குமுறைகள் ஒருவிதம். அவை இந்தக் கதைகளில் விவரிப்பாய் தரப்பட்டாலும் அதைவிட அதிகமாய், சொந்தநாட்டிலும் சரி, அந்நிய மண்ணிலும் சரி அவர்களை அவர்களுடைய சக தமிழ் மக்களே அவர்களுடைய நெருக்கடியைப் பயன்படுத்திப் பலவகையில் சுரண்டிய அவலமே இந்தக் கதைகளில் ஆறா ரணமும் வடுவுமாய் காட்டப்படுகிறது.
வீட்டுப்பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களை ராணுவத்தினரிடமிருந்தும், இயக்கத்தினரிடமிருந்தும் காப்பாற்ற தரும் விலை ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாய். ஒரு நாள் தன் பிள்ளையைப் பாதுகாப்பாய் வைத்திருக்க ஒரு பெரிய மனிதரிடம் இறைஞ்சும் தாய் இறுதியில் அதற்கு விலையாய் தன் இளவயது மகளின் உடல் எடுத்துக்கொள்ளப்படுவதை ஒரு ஏதும் செய்யவியலாமல் பார்த்துக்கொண்டிருக் கிறாள்.
ஒரு பண்டமாற்றுப் பொருளாக பெண்ணின் உடல் எப்படியெப்படியெல்லாம் போரின் மத்தியில் புலம் பெயர்வுக்கும், புலம் பெயர்ந்த பின்னாலும் பேரம் பேசப்படுகிறது, பெற்றுக்கொள்ளப்படுகிறது என்று இந்தக் கதைகள் காட்டுகின்றன.
எங்கேயுமே கதாசிரியர் தன்னை முன்னிறுத்த மெனக்கெடுவதில்லை. இன்றும் தொடரும் ஒரு புலம்பெயர்வாழ்வுக் காலகட்டத்தின் Big Pictureஐ இந்தக் கதைகள் காட்டுகின்றன. வேற்றுமண்ணில் ஒரு மனிதன் உணரும் அந்நியமாதலை எடுத்துக் காட்டுகின்றன.
இயக்கங்களைச் சேர்ந்த மனிதர் களை, தன் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்களை, புலம்பெயர்வு வாழ்வில் தனக்குப் பரிச்சயமானவர்களை என கதைமாந்தர் களாக வரும் பலதரப்பட்டவர்களை கதாசிரியர் கேலி செய்கிறார். கோபிக்கிறார், பழிக்கிறார் – ஆனால், எல்லாவற்றிலும் அடிநாதமாய் ஒரு வாத்சல்யம் இழைந்தோடு கிறது. இவர்கள் இப்படி ஆகிவிட்டார் களே என்ற ஆறா வருத்தம் வெளிப்படுகிறது.
நூலின் முதல் சிறுகதையான தேவதை சொன்ன கதையின் நாயகன் விலைமாதாக இருக்கும் ஒரு இளம்பெண்ணிடம் இருக்கும்போது அவளை எண்ணி வருந்தி தன் நாட்டின் நிலவரம் பெண்களை எப்படி மாற்றிவிட்டது என்று எண்ணிப்பார்க்கிறான்:
// ‘அங்கே ஒவ்வொரு குண்டுகளும் இவ்விரண்டு விலங்குகளாய் உடைத்துக்கொண்டிருக்கின்றன. நுகத்திலே கொழுவியிருந்த கலைவாணிகள் ஆயிரம் கைகளும் சூலமும் வேலுமாய் தேர்களில் ஏறிவிட்டார் கள். தேர்களின் சக்கரங்கள் ஐயாக்களின் தலைகளை சுக்குநூறாய் உடைக்கின்றன. ஆனால் இங்கே ஒரு பெண் தேவதையாக்கப்பட்டு, அரை நிர்வாணியாய் விறைத்துப்போய் இருக்கிறாள். ஆண்குறிகலும் மாத்திரைகளும் தின்னும் இவளின் இருட்டு நிமிடங்களில் ஒரு சின்ன ‘கிரானைட்’ வெடித்துப் பற்றாதா? தேவதையும் ஆயிரம் கைகளும் சூலமும் வேலுமாய் தேர்களில் ஏறாளோ?’//
கதை இப்படி முடிகிறது:
(நாயகன் அந்தப் பெண்ணோடு உரையாடுகிறான்)
“உனது கிராமம் எது?”
”ட்ராங்பாங் கிராமம். அது தென்வியட்நாமில் உள்ளது.”
இவனுக்கு தனது தேர்க்கணக்கு எங்கேயோ சறுக்கு வதாகப் பட்டது.

“உனது அம்மா ஒரு கேடு கெட்டவள். இரண்டு பசுமாடுகளுக்காகவா உன்னை விற்றாள்?”
“சேர், அம்மாவை ஏசாதீர்கள். அவள் பாவம். எங்கள் கிராமத்தில் எல்லா அம்மாக்களும் என் அம்மா போலவே ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எதுவும் எதிர்த்துப் பேச முடியாது. தவிர, அவளுக்கு முழங்கைகளுக்குக் கீழே இரண்டு கைகளும் கிடையாது.”
“நான் மிகவும் வருந்துகிறேன். அது எப்படி நடந்தது?”
“யுத்த காலத்தில் ட்ராங்பாங் கிராம எல்லையில் ஒரு அமெரிக்க இரணுவ வண்டித்தொடர் எங்கள் கொரில்லாக்களால் தாக்கி அழிக்கப் பட்டதாம். முதலில் வந்த வண்டிக்குள் இரண்டு வெடிகுண்டுகளோடு அம்மாதான் பாய்ந்தாளாம்.”
வாழ்வின் நிகழ்வுகள் வரையறைக்குள் அடங்காதவை என்பதே கதைகளின் அடிக்குறிப்பாய் புலப்படுகிறது. ஆனால், கதைகள் தீர்ப்பளிக்க முற்படுவதே யில்லை. சமகால வாழ்க்கையை பல கோணங்களில் விரித்துப்போடுவதோடு சரி. அதனாலேயே இந்தக் கதைகள் ஒரு வலிகூடிய நிறைவான வாசிப்பனு பவத்தைத் தருகின்றன.
V9674D2687430743V D584 83675 E என்ற தலைப்பிட்ட கதை, பகுத்தறிவு பெற்ற நாள், தேசத்துரோகி, எலிவேட்டை, கடவுளும் காஞ்சனாவும் என பெரும்பா லான கதைகள் உலகத்தரமானவை. இவை ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றனவா, தெரிய வில்லை. மொழிபெயர்க்கப்பட வேண்டியவை. ஆனால், இந்தக் கதைகளில் வெகு இயல்பாக விரவியிருக்கும் இலங்கைத் தமிழுக்கே உரிய அழகும் நுட்பமும் வாய்ந்த சொற்களை, சொல்லாடல்களை எப்படி மொழிபெயர்க்க முடியும்
 —

No comments:

Post a Comment