Wednesday, April 1, 2020

பிரார்த்தனை - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிரார்த்தனை 
'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது
இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய
பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும்.
ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற
பயத்தால் மட்டுமே நான் இதைச் செய்கிறேன்
என்று ஆகிவிடலாகாது.
இந்தக் கைத்தட்டல் நேற்றும் இன்றும் நாளையும்
மக்கள்பணியாற்றும் அனைவருக்குமானதாகட்டும்.
என்னிரு கைகளை யந்திரத்தனமாகச் சேர்த்துக்
கரவொலியெழுப்பாமல்
மனதின் கைகளைக் கொண்டு நான் தட்டுவேனாக.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்களுக்கு
உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல்
நான் வாழுங் காலத்தின் அற்புதத் தமிழ்க்கவிஞர்களுக்கு
அர்ப்பணமாகட்டும் இந்தக் கைத்தட்டல்.
நற்றமிழுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.
நல்ல அரசியல் தலைவர்களுக்குரியதாகட்டும்
இந்தக் கைத்தட்டல்.
புல் பூண்டு காய் கனி பழம் மரம் பூ விலங்கு
பறவை யின்னும் பலப்பபல சக உயிரிகளுக்கென்
அன்பைத் தெரிவிக்கட்டும் இந்தக் கைத்தட்டல்.
வல்லூறின் வளைநகங்களாய் வார்த்தைகளைப்
பிரயோகிக்காமல்
நல்லவிதமாய் மாற்றுக்கருத்துகளைச்
சொல்பவர்களுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.
தன்னால் முடிந்ததைச் செய்து
சகமனிதர்களின் இன்னல் களைய
முன்வருபவர்களுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.
இன்சொற்களையே மொழிபவர்களுக்கு என்றும்
உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல்.
எனக்கும் என் உடலுக்கும்
எனக்கும் நான் வாழும் சமூகத்திற்கும்
எனக்கும் என் அம்மாவுக்கும்
எனக்கும் என் மனதிற்கும்
எனக்கும் என் உள்ளங்கைகளுக்கும்
உடனிருக்கும் விரல்களுக்கும்
உங்களுக்கும் எனக்கும்
எனக்கும் எனக்கும்
இன்னும் கணக்கற்றவைகளின் தொடர்புறவைப்
புரிந்துகொள்ள
வழிகாட்டுவதாகட்டும் இந்தக் கைத்தட்டல்.


No comments:

Post a Comment