Wednesday, April 1, 2020

நனவோடை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நனவோடை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு நூறு பக்கங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்பு.
சில கவிதைகள் இரண்டு பக்கங்களுக்கு நீள்வதால்
மொத்தம் அறுபது கவிதைகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.
அத்தனை கவிதைகளும் ஆகத்தரமானவை
யென்று சொல்லவியலாது.
அரங்கம் பெரிதோ சிறிதோ,
பெரும்பாலும் அதில் நண்பர்களும்
உறவினர்களும்
அன்பே உருவான ஒரு சில
இலக்கிய ஆர்வலர்களுமே
வரிசையாய் அல்லது வட்டமாய்
போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டிருப்பார்கள்.
வந்திருப்போரெல்லாம் அந்தப் புத்தகத்தை
வாங்குவார்கள் என்று
உறுதியாகச் சொல்லவியலாது.
வாங்கினாலும் வாசிக்காமல்
அடுத்தவருக்குப் பரிசளித்துவிடும்
வாய்ப்புகள் அதிகம்.
பருவம் வந்த அனைவருமே
காதல்கொள்வதில்லை
என்று பாடிக்கொண்டிருக்கிறார் சந்திரபாபு.
சிறப்பு விருந்தினர்கள் நால்வரின்
இலக்கியப் பரிச்சயம்
பாரதியின்நாலிலே ஒன்றிரண்டு
நன்னுமோவாக _
ஆவதெல்லாம் என்னவாயினும்
அந்த நூல் வெளியீட்டுவிழா
நடக்கும் நேரமெல்லாம் நெகிழ்ந்திருக்கும்
கவி மனம்…..
நிகழ்வின் இறுதியில் எஞ்சியிருக்கும்
இருபது பேரின் சன்ன கரவொலியில்
அவர் கண்களில் நீர்துளிர்க்கவும் செய்யலாம்….
அன்னோரன்ன சிலர் இன்று
மட்டந்தட்டிக்கொண்டிருக்கிறார்கள்
மக்கள்பணியாளர்களைப் பாராட்டிக்
கைத்தட்டியோர்
தட்டுக்கெட்டவரென்று.



No comments:

Post a Comment