Friday, February 21, 2020

குடித்தனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குடித்தனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


புதுவீடு செல்கிறேன்.
வாடகைக்குத்தான் என்றாலும்
விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது
வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்!
வாடகையை மட்டும் மாதாமாதம்
ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்!

ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும்
வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில் மாறுகிறார்கள் போலும்.
அட்டைப்பெட்டிகளுக்குள் பொதியப்பட்ட இகவாழ்வை
ஒரு வீட்டிலிருந்து வழியனுப்பி
இன்னொரு வீட்டிற்குள் அதை மீண்டும்
வெளியே எடுத்து விரிக்கும்போது
காணாமல் போய்விடும் சில
சீப்புகளும் புத்தகங்களும்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியவில்லை.

இடம்பெயரும் முன் சில நாட்களும்
இடம்பெயர்ந்த பின் சில நாட்களும்
ஒருவித அந்தரத்தில் அலைக்கழியும்
வாழ்க்கை.
பிறகும் பூமியில் கால்பதிக்கும் என்ற உறுதியில்லை
யென்பதும் உண்மைதான்.

நானின் தூல மூட்டுகளிலும்
சூக்கும மூட்டுகளிலும்
தீரா வலியெடுக்கும்.
தூங்கினால் சரியாகக்கூடும்….

புதுவீட்டின் அக்கம்பக்கத்து மனிதர்களிடம்
நம்மை நிரூபித்துக்கொள்ளவேண்டும்…
என்னவென்று என்பதுதான்
தொடரும் புதிராய்.

No comments:

Post a Comment