Monday, November 18, 2019

கவிதையெழுதுதல் என்ற சமூகச்செயல்பாடு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கவிதையெழுதுதல் என்ற சமூகச்செயல்பாடு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



இந்த மாதமும் துண்டுவிழுவதில் வியப்பில்லை.
வரவு-செலவு பற்றாக்குறை வாடிக்கை.
(வீதியோரம் வெற்றுப்பார்வையுடன்
உள்ளொடுங்கிய வயிறுடன் படுத்திருப்பவரைப்
பார்க்க
நான் வெட்கங்கெட்ட வில்லி
விசித்திரகோடீஸ்வரி)
வங்கியிலுள்ள பூஜ்யசேமிப்பை
வர்ணமயமாக வெளிச்சமிட்டுக்
காட்டும் ஏடிஎம் மிஷின்
முகமூடிக்கொள்ளைக்காரர்கள்
என்னைச் சுற்றிவளைத்தால் என்னவாகும்?
அதாவது, அவர்களுக்கு
அத்தனை நிறைவளிக்காத ஒரு சிறு நூலை
இன்னும் பத்துநாட்களுக்குள் மொழிபெயர்த்துமுடித்தாகவேண்டும்.
மூவாயிரத்தி ஐந்நூறு ரூபாய் கிடைக்கும்.
முந்நூறு பக்க மொழிபெயர்ப்பை விட
முத்தான பத்து வரிக் கவிதை
அதிக சன்மானம் ஈட்டித்தரு மந்தப்
பொற்காலம்
என் வாழ்நாளுக்குள் வருமா?
(அப்படியே வந்தாலும்
யார் கேட்டாலும் தருவதற்கு
கவிதை யென்ன ஏழை வேசியின்
உடம்பா?)
அத்தனையையும் மீறி ஒரு கவிதை
இடைமறிக்கிறது
என்னை எழுதிவிடேன் என்று
மூச்சடைக்க இறைஞ்சுகிறது.
அது என்ன சுண்டுவிரலா?
கண்ணிமையா? சொப்புவாயா?
இன்னும் உருப்பெறவில்லை வடிவம்...
ஆனால், இளஞ்சூட்டில்
என்னமாய் சுவாசிக்கிறது அந்த உயிர்!
மையமா யொரு வரியிலிருந்து
துவங்கினால்
பின் மூன்று வரிகளோ
முன்னூறு வரிகளோ
அதில் நான் முயலோ முட்டுச்சந்தோ
முப்பரிமாண ஓவியமோ?
எங்கே ஒளிந்துகொண்டிருப்பேன்
என்னைநானே பார்த்தவாறு?
ஆறு மனமே ஆறு.....
ஆவியாகி மறையாம லொரு
கவிதையை அடைகாத்தல்
கைகூடினா லது
ஆகப் பெரும்பேறு.


No comments:

Post a Comment