Sunday, October 6, 2019

BIGG BOSSம் BRAINWASHம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


BIGG BOSSம் 
BRAINWASHம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*6.10.2019 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)




பெரியோர்களே தாய்மார்களே!
பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே!
சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே!
சுற்றியுள்ள சடப்பொருள்களே!
சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே!
ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே!
ஆற்றுமீன்களே!
வேற்றுகிரகவாசிகளே!
இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள்
விலங்கினங்கள் புள்ளினங்கள்
மரம் செடி கொடிகளெல்லாம் _

BIGG BOSS பாருங்கள் –
BIGG BOSSஐயே பாருங்கள்!
காணக்கிடைக்காத தரிசனம் இது;
காணவேண்டியது;
கண்ணாடியாய் நம்மைப் பிரதிபலிப்பது;

(*பொறுப்புத்துறப்பு: எத்தனை சொல்லியும் உங்களை யதில் காணமுடியவில்லையென்றால் காவல்நிலையத்தில் புகார் தந்துவிடவும்)

வீட்டிலும் வெளியிலும் முடிந்தால் கடலுக்கடியிலும்
முட்டாள்பெட்டியிலும் மடிக்கணினியிலும் மௌபைலிலும்
பாருங்கள் பாருங்கள்
BIGG BOSS பாருங்கள்!

BIGG BOSS பார்த்தால் நமக்கு ஞானக்கண் திறக்கும்
பின், அதையும் பயன்படுத்திவீர் BIGG BOSS பார்ப்பதற்கே!

தமிழ்க் கலாச்சாரம் பற்றி அறியவேண்டுமா?
தொலைவிலுள்ள கீழடிக்கெல்லாம் ஏன் போகவேண்டும்?
BIGG BOSS பாருங்கள்
தொடையைக் காட்டிக்கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் பெண்கள்
திடீரென்று தழையத் தழைய பாவாடையோடு
தாவணிக்கு மாறிவிடுவார்கள்
(மார்பை போர்த்துவதற்கு தாவணி என்பது பழமைவாதம் என்றால்
மறுக்க முடியுமா உங்களால்?)

பாருங்கள் பாருங்கள் BIGG BOSS பாருங்கள்
BIGG BOSS போட்டியாளர்கள் குடிக்கும் குளிர்பானம்
உங்கள் குரல்வளைக்குள் சில்லென்று இறங்குவதாக உணரமுடியவில்லையென்றால் நாமெல்லாம் என்ன தமிழர்கள்?

பாடுங்கள் பாடுங்கள் BIGG BOSSஸைப் போற்றிப் பாடுங்கள்
அசந்தால் உங்களையுமறியாமல் பேட்டியெடுக்கப்பட்டுவிடுவீர்கள்
BIGG BOSSஸை ஒட்டிப் பேசினாலும் வெட்டிப் பேசினாலும்
அது BIGG BOSSக்குப் பெருமைதானே!

’போற்றி’ பாடலும் ’அறம்’ பாடலும்
பழந்தமிழர் மரபு என்று தெரியாதவர்கள்
காற்றடைத்த பையாய் மண்ணோடு மண்ணாகிப் போக.

ஆக, அப்பா தன் மனைவியைத் தனியறையில் கட்டித்தழுவி
முத்தமிட்டு அன்பைக் காட்டினால் மட்டும் போதாது –
அனைவரும் காண அதைச் செய்யவேண்டும்;
அத்தோடு, மகளைக் கட்டியணைக்கவேண்டும்
மருமகளைக் கட்டியணைக்கவேண்டும்
மாமியாரைக் கட்டியணைக்கவேண்டும்
மாட்டேன் என்று சொல்லலாகாது
மடிசஞ்சியா நீங்கள்?

மொழியறிவு updated ஆக இருக்கவேண்டியது அவசியம்
ஆம், தமிழ் பேசுவதாக தங்கிலீஷ் பேசவேண்டும்
அத்தையை ஆண்ட்டி என்றழைக்கலாம்
ஆண்ட்டியை அத்தை என்று அழைத்தால்
அது பிழையாகிவிடலாம் – அதிகவனம் தேவை
அங்கங்கே மானே தேனே சேர்த்துக்கொள்ளலாம்
அத்தோடு நிறுத்திக்கொண்டால் நல்லது.
தமிழ் வளர்ப்போம் என்று முழங்கினாலும்
மழலை உச்சரிப்பைப் பழகவேண்டியது அவசியம்.

அது சரி TASK TASK என்கிறார்களே- அது என்ன?
அட வெண்ண – இதுகூடவா தெரியாது?
நன்கு துவைக்கப்பட்டிருக்கும், அல்லது புத்தம்புதிய
துணியின் ஓரங்களில்
சிறிதே மண்ணொட்டித் தந்தால்
இல்லாத நெற்றிவியர்வையைத் துடைத்தபடி யதை
அடிஅடியென்று அலுங்காமல் நலுங்காமல் அடித்துத்
துவைக்கவேண்டும்

வேண்டும் வேண்டும் BIGG BOSS வேண்டும்
மீண்டும் மீண்டும் BIGG BOSS பார்க்கவேண்டும்.
அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் எவரெவரோ சொல்கிறார்கள் எல்லோருமே சொல்கிறார்கள்.
எனவே, ஊரோடு ஒத்துவாழ்வதே மேல்

கேள், நாளொன்றுக்கு நாற்பதாயிரம்போல் ஊதியத்தில்
BIGG BOSS போட்டியாளர்கள் இடுப்புவளையாமல் பெருக்குவார்களே –
அதற்கு இணையாகிடுமா
நாள்தவறாத துப்புரவுத்தொழிலாளர்களின்
அற்பக்கூலி பெறும் உழைப்பு?

கம்பின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிச் சிறுமிக்காய்
கண்கலங்கத் தெரிய வேண்டும் – கலையாத ஒப்பனையோடு.

பருவமழை பொய்த்தாலும் நாள்தவறாமல் காண்பீர் BIGG BOSS
விற்பனைக்குக் கடைவிரிக்கப்படும் மனித உணர்வுகள்
மலிவு விலையில்; தள்ளுபடி யுண்டு.

சமூகத்தின் நான்காவது தூணான இதழியலாளர்களிடமே பத்து கேள்விகள்
முன்கூட்டியே எழுதி வாங்கி அதில் மூன்றை மட்டுமே கேட்கச் சொல்லி
அதில் ஒன்றைமட்டுமே ஒளிபரப்பி
‘Paid News’ பற்றி நினைக்கச் செய்த BIGG BOSS புகழ்
பாரெங்கும் ஓங்கட்டும்!
ஓங்கட்டும் ஓங்கட்டும் BIGG BOSS புகழ் ஓங்கட்டும்

முடிக்கு முன் ஒரு கேள்வி:
(*சரியான பதில் சொல்லும் பார்வையாளருக்கு
தொலைவிலிருந்து BIGG BOSS இல்லத்தை தரிசிக்கும் பேறு கிட்டும்)
நகைச்சுவையென்ற பெயரில் கிச்சுகிச்சுமூட்டியும்கூட நம்மால் சிரிக்கவியலாதுபோக
ஒலிப்பதிவுக்கருவிமூலம் சிரிப்பையும் கைத்தட்டலையும்
ஒரே சீரான இடைவெளியில் அரங்கம் அதிர
எதிரொலிக்கச் செய்யும்
BIGG BOSS நிகழ்ச்சியே
பெரும் பொய் புரட்டு அரசியலாயிருக்கையில்
தனியாக அதில் அரசியல் பேசத்
தேவையிருக்கிறதா என்ன?

  


No comments:

Post a Comment