Saturday, October 26, 2019

ஒலியும் ஒளியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஒலியும் ஒளியும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(* ‘தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)


காதில் பஞ்சடைத்து
இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப்
போய்க்கொண்டிருக்கிறேன்
பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி....
பட்டாசுச் சப்தம் பயமுறுத்த
தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம்
நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு
அதுவாகவே யிருக்கும்.
சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு
நகைப்புக்காளாகி செவிபொத்தி,
புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம்
குளியறையில்.
கிண்டல் குட்டு கிள்ளு - எல்லாமே
என் மேல் அக்கறை கொண்டோரின் எதிர்வினைகளாக....
ஒருபோது பாவம் பார்ப்பார்கள்;
ஒருபோது பிடித்திழுத்துவந்து
வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் நிறுத்துவார்கள்.
பின்னேகிக்கொண்டே போனதில்
ஒருமுறை புது கவுன் விளக்கில் பற்றிக்கொண்டுவிட-
சில வெடிகள் தரையைப் பிளந்து
என்னைக் குற்றுயிராக்கிவிடும்.
அவற்றிலிருந்து கிளம்பும் நெருப்பு என்னைத்
தீக்கிரையாக்கிக்கொண்டேயிருக்கும்.
பூக்குத்தியும் ஒருநாள் டமாரென வெடித்து
உருமாறிவிட்டது நான் வெறுக்கும் பட்டாசாய்.
அப்போதெல்லாம் தீபாவளிக்கு முன்னும் பின்னும்
பதினைந்து இருபது நாட்கள்போல்
பாழும் நரகத்துள் வறுபட்டுக்கொண்டிருப்பேன்
கொதிக்கும் எண்ணெயில்.
(இப்போது அப்படியில்லை என்றாலும் -
எல்லா விழாக்களிலுமே வெடிகள் தவிர்க்கமுடியாத
அங்கமாகிவிட்டன......
வெடிகுண்டுகளும் கூட)
வலிதாங்கு சக்திபோல் ஒலிதாங்கு சக்தியும்
எல்லா மனிதர்களுக்கும் ஒருபோல் இருப்பதில்லை…..
இப்போதும் அந்த ஒளி, ஒலி கதிகலங்கச் செய்கிறது.
எனில், இயல்பாய் காதில் பஞ்சடைத்துக்கொள்ள
என்னால் முடிகிறது.
அதில் அவமானமடையத் தேவையில்லை என்ற உண்மை
ஆழப் படிந்துவிட்டது மனதில்.
அன்பிற்குரியோரே, ஆன்றோரே - சான்றோரே
உங்கள் இல்லங்களில் அருகிலுள்ள வீடுகளில்
வெடிச்சப்தம் கேட்டு விதிர்த்து அழும் சிறுமி / சிறுவன் இருந்தால்
கடிந்து கொள்ளாதீர்கள்;
அடிக்காதீர்கள்.
அடடா பயந்தாங்கொள்ளி என்று எள்ளிநகையாடி
அவமானத்தில் அவர்களைக் குன்றிப்போகச் செய்யாதீர்கள்;
குறைமனிதராய் அவர்களை உணரச் செய்யாதீர்கள்.
அவர்களுடைய குட்டிக்காதுகளில் சின்னப் பஞ்சுருண்டையை
செருகிக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்;
அருகிருக்கும் முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும்கூட
மிக இதமாயிருக்கும்.
இதோ, இந்தக் கவிதைப்பையிலிருந்து வேண்டுமட்டும்
பஞ்சைப் பிய்த்தெடுத்துக்கொள்ளுங்கள்.

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)

குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?
நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….
கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்.
மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….
நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..
அதுவும் _
அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _
அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?

உயிர்வலி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உயிர்வலி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(* சமர்ப்பணம்: ஆழ்குழாய்கிணறில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை சுஜித் வில்சனுக்கு.




அபயம் கேட்பதாய் தலைக்குமேலே உயர்ந்திருக்கின்றன
அந்தக் குட்டிக்கைகள்;

பூமிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே
வாழ்வின் அடியாழ அந்தகார இருளைப்
பார்க்க நேர்ந்துவிட்ட
அந்தப் பிஞ்சுமனதை என்ன சொல்லித் தேற்றுவது?
எப்படி மன்னிப்புக் கேட்பது?
அந்தப் பூவடம்பில் இன்னமும் தொக்கிநிற்கும்(?)
வாழ்வுச்சூட்டை எப்படிக் காப்பாற்றுவது?
ஒரு குழந்தையில் தெரியும் பல குழந்தைகளின்
ஒடுங்கிய உடலங்களை
தினந்தினம் எதிர்கொண்டு பதறும்
மனம்
நொறுங்கிச் சிதறும்.

Wednesday, October 16, 2019

BIGG BOSSம் BRAINWASHம் மின் நூல் - அமேசான் - கிண்டில்

BIGG BOSSம் BRAINWASHம்
மின் நூல்
- அமேசான் - கிண்டில்


Friday, October 11, 2019

BECAUSE I AM A GIRL - Latha Ramakrishnan



WE ARE THE GIRLS!
(Latha Ramakrishnan)


WE ARE THE GIRLS!
PRECIOUS PEARLS!!
WE HOLD ALOFT _
FLAG OF FREEDOM UNFURLED!

WE WILL STUDY
AND GET READY
TO FACE THE WORLD
AND CHANGE IT INTO A BETTER MOULD!

WE DON’T REGRET
WEARING HALF-SKIRT;
HAVING BOBCUT – YES,
BEING GIRL IS NOT A STRESS!

WE ARE NOT TO APE BOYS;
WE ARE DIFFERENT!
WE ARE UNIQUE!
WHICH MAKES US JOYOUS!

WE KNOW OUR WORTH
WE ARE PROUD OF WHAT WE ARE!
WE ARE NOT WEAK
WE ARE NOT AFRAID TO SPEAK!

WE HAVE SELF ESTEEM
WE HAVE OUR OWN DREAMS.
WE ARE NICE TO EVERYONE -
EXCEPT BOYS, ARROGANT AND INDECENT.













Thursday, October 10, 2019

பாட்டுக்குப் பாட்டு (அல்லது) LET US BE HUMAN! Latha Ramakrishnan

பாட்டுக்குப் பாட்டு
(அல்லது)

 LET’S BE HUMAN
லதா ராமகிருஷ்ணன்

WE ARE THE BOYS’ என்று பிக்-பாஸ் பங்கேற் பாளர்கள் சாண்டி, முகேன், தர்ஷன், கவின், லாஸ்லியா (ஒரு பெண்ணாக இருந்தும் லாஸ்லியா சக பெண் மதுமிதாவை மதிப் பழித்து அலைக்கழிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தது உண்மையிலேயே வருத்தத்   திற்குரியது.) எல்லோரும் பாடும் பாடல் ஒன்று பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.  

ஆண்களின் நிலையை எடுத்துரைக் கும்  பாவனையில் பாடப்பட்டிருந்தாலும் அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே ஆணாதிக்கம் தொனிக்கிறது 
- ‘WE ARE THE BOYS’.

இந்தப் பாடல்தான் இப்போது கல்லூரிகளில்
நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலெல்லாம்
தவறாமல் இடம்பெறுகிறது என்கிறார்கள்
இது கவலைக்குரியது.



இணையம் முழுக்க பல காணொளிகளில்
ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடலுக்கு
என் எதிர்வினையாக கீழேயுள்ள பாட்டை 
எழுதிப் பதிவேற்றுவது அவசியம் 
என்று தோன்றியது.

ஆணென்ன பெண்ணென்ன 
என்று சொல்லிக்கொண்டே
WE ARE THE BOYS என்று கூவுவது நியாயமா?

நின்னா குத்தமில்லை நடந்தா குத்தமில்லே
பெண்ணைத் தனியாவோ எட்டுபேராகவோ
Gang ragging செஞ்சா
அதுவென்ன மனிதநேயமா?
அதற்கு சட்டப்படி தண்டனை
என்னான்னு தெரியுமா?

நின்னா குத்தமா நடந்தா குத்தமா
இது உங்களுக்கு மட்டுமா?
ஒரு பெண் தன் கருத்தைச்
சொன்னா மட்டும் குத்தமா?

சூழ்ந்துகொண்டு கேவலப்
படுத்தலாமா மொத்தமா?
உங்களுக்குவந்தா மட்டும் 
ரத்தமா?
நீங்கள் செய்தது உத்தமமா?
கேட்பாரு பிள்ளையா
அலைஞ்சாக்கா பத்துமா?

உன் தாயும் பொண்ணுதான்
அக்கா, தங்கையும் பொண்ணுதான்
ஊரான் பெண்ணைப் பழிக்கும்போது
இருக்காதே யதை நினைக்காது.

ஊருக்குள்ளே நாலுபேர் உங்களைப்
பார்த்துகிட்டு இருப்பாங்க
நல்லவங்களா வாழ
நாலு சொல்லித் தருவாங்க...

கேட்டா கேட்டுக்கோ
கேட்காகாட்டி கெட்டுப்போ
செஞ்ச தப்பை சரி செய்ய
வாழ்நாள் போதாது
யப்போ யப்போ!

வின்பண்ண இருந்தவளை
வீட்டுக்கு அனுப்பிவைத்த
பெண் பாவம் உங்களை
சும்மாதான் விட்டுடுமா?

புண்ணாக்கியதற்கு  வருந்தி
மன்னிப்பு கேட்டால்
மருவாதை தான் குறைஞ்சிடுமா?
மண்ணோடு மறைஞ்சிடுமா?

ஆறறிவு நமக்குண்டு
அதனினும் பெரிய மனசாட்சியுண்டு
அவற்றின்படி நடக்காதவர்
அகிலப்புகழ் பெற்றாலுமே
அஃறிணைக்கும் கீழாமே!
அறிவோமே நாமே!



Sunday, October 6, 2019

BIGG BOSSம் BRAINWASHம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


BIGG BOSSம் 
BRAINWASHம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*6.10.2019 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)




பெரியோர்களே தாய்மார்களே!
பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே!
சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே!
சுற்றியுள்ள சடப்பொருள்களே!
சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே!
ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே!
ஆற்றுமீன்களே!
வேற்றுகிரகவாசிகளே!
இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள்
விலங்கினங்கள் புள்ளினங்கள்
மரம் செடி கொடிகளெல்லாம் _

BIGG BOSS பாருங்கள் –
BIGG BOSSஐயே பாருங்கள்!
காணக்கிடைக்காத தரிசனம் இது;
காணவேண்டியது;
கண்ணாடியாய் நம்மைப் பிரதிபலிப்பது;

(*பொறுப்புத்துறப்பு: எத்தனை சொல்லியும் உங்களை யதில் காணமுடியவில்லையென்றால் காவல்நிலையத்தில் புகார் தந்துவிடவும்)

வீட்டிலும் வெளியிலும் முடிந்தால் கடலுக்கடியிலும்
முட்டாள்பெட்டியிலும் மடிக்கணினியிலும் மௌபைலிலும்
பாருங்கள் பாருங்கள்
BIGG BOSS பாருங்கள்!

BIGG BOSS பார்த்தால் நமக்கு ஞானக்கண் திறக்கும்
பின், அதையும் பயன்படுத்திவீர் BIGG BOSS பார்ப்பதற்கே!

தமிழ்க் கலாச்சாரம் பற்றி அறியவேண்டுமா?
தொலைவிலுள்ள கீழடிக்கெல்லாம் ஏன் போகவேண்டும்?
BIGG BOSS பாருங்கள்
தொடையைக் காட்டிக்கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் பெண்கள்
திடீரென்று தழையத் தழைய பாவாடையோடு
தாவணிக்கு மாறிவிடுவார்கள்
(மார்பை போர்த்துவதற்கு தாவணி என்பது பழமைவாதம் என்றால்
மறுக்க முடியுமா உங்களால்?)

பாருங்கள் பாருங்கள் BIGG BOSS பாருங்கள்
BIGG BOSS போட்டியாளர்கள் குடிக்கும் குளிர்பானம்
உங்கள் குரல்வளைக்குள் சில்லென்று இறங்குவதாக உணரமுடியவில்லையென்றால் நாமெல்லாம் என்ன தமிழர்கள்?

பாடுங்கள் பாடுங்கள் BIGG BOSSஸைப் போற்றிப் பாடுங்கள்
அசந்தால் உங்களையுமறியாமல் பேட்டியெடுக்கப்பட்டுவிடுவீர்கள்
BIGG BOSSஸை ஒட்டிப் பேசினாலும் வெட்டிப் பேசினாலும்
அது BIGG BOSSக்குப் பெருமைதானே!

’போற்றி’ பாடலும் ’அறம்’ பாடலும்
பழந்தமிழர் மரபு என்று தெரியாதவர்கள்
காற்றடைத்த பையாய் மண்ணோடு மண்ணாகிப் போக.

ஆக, அப்பா தன் மனைவியைத் தனியறையில் கட்டித்தழுவி
முத்தமிட்டு அன்பைக் காட்டினால் மட்டும் போதாது –
அனைவரும் காண அதைச் செய்யவேண்டும்;
அத்தோடு, மகளைக் கட்டியணைக்கவேண்டும்
மருமகளைக் கட்டியணைக்கவேண்டும்
மாமியாரைக் கட்டியணைக்கவேண்டும்
மாட்டேன் என்று சொல்லலாகாது
மடிசஞ்சியா நீங்கள்?

மொழியறிவு updated ஆக இருக்கவேண்டியது அவசியம்
ஆம், தமிழ் பேசுவதாக தங்கிலீஷ் பேசவேண்டும்
அத்தையை ஆண்ட்டி என்றழைக்கலாம்
ஆண்ட்டியை அத்தை என்று அழைத்தால்
அது பிழையாகிவிடலாம் – அதிகவனம் தேவை
அங்கங்கே மானே தேனே சேர்த்துக்கொள்ளலாம்
அத்தோடு நிறுத்திக்கொண்டால் நல்லது.
தமிழ் வளர்ப்போம் என்று முழங்கினாலும்
மழலை உச்சரிப்பைப் பழகவேண்டியது அவசியம்.

அது சரி TASK TASK என்கிறார்களே- அது என்ன?
அட வெண்ண – இதுகூடவா தெரியாது?
நன்கு துவைக்கப்பட்டிருக்கும், அல்லது புத்தம்புதிய
துணியின் ஓரங்களில்
சிறிதே மண்ணொட்டித் தந்தால்
இல்லாத நெற்றிவியர்வையைத் துடைத்தபடி யதை
அடிஅடியென்று அலுங்காமல் நலுங்காமல் அடித்துத்
துவைக்கவேண்டும்

வேண்டும் வேண்டும் BIGG BOSS வேண்டும்
மீண்டும் மீண்டும் BIGG BOSS பார்க்கவேண்டும்.
அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் எவரெவரோ சொல்கிறார்கள் எல்லோருமே சொல்கிறார்கள்.
எனவே, ஊரோடு ஒத்துவாழ்வதே மேல்

கேள், நாளொன்றுக்கு நாற்பதாயிரம்போல் ஊதியத்தில்
BIGG BOSS போட்டியாளர்கள் இடுப்புவளையாமல் பெருக்குவார்களே –
அதற்கு இணையாகிடுமா
நாள்தவறாத துப்புரவுத்தொழிலாளர்களின்
அற்பக்கூலி பெறும் உழைப்பு?

கம்பின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிச் சிறுமிக்காய்
கண்கலங்கத் தெரிய வேண்டும் – கலையாத ஒப்பனையோடு.

பருவமழை பொய்த்தாலும் நாள்தவறாமல் காண்பீர் BIGG BOSS
விற்பனைக்குக் கடைவிரிக்கப்படும் மனித உணர்வுகள்
மலிவு விலையில்; தள்ளுபடி யுண்டு.

சமூகத்தின் நான்காவது தூணான இதழியலாளர்களிடமே பத்து கேள்விகள்
முன்கூட்டியே எழுதி வாங்கி அதில் மூன்றை மட்டுமே கேட்கச் சொல்லி
அதில் ஒன்றைமட்டுமே ஒளிபரப்பி
‘Paid News’ பற்றி நினைக்கச் செய்த BIGG BOSS புகழ்
பாரெங்கும் ஓங்கட்டும்!
ஓங்கட்டும் ஓங்கட்டும் BIGG BOSS புகழ் ஓங்கட்டும்

முடிக்கு முன் ஒரு கேள்வி:
(*சரியான பதில் சொல்லும் பார்வையாளருக்கு
தொலைவிலிருந்து BIGG BOSS இல்லத்தை தரிசிக்கும் பேறு கிட்டும்)
நகைச்சுவையென்ற பெயரில் கிச்சுகிச்சுமூட்டியும்கூட நம்மால் சிரிக்கவியலாதுபோக
ஒலிப்பதிவுக்கருவிமூலம் சிரிப்பையும் கைத்தட்டலையும்
ஒரே சீரான இடைவெளியில் அரங்கம் அதிர
எதிரொலிக்கச் செய்யும்
BIGG BOSS நிகழ்ச்சியே
பெரும் பொய் புரட்டு அரசியலாயிருக்கையில்
தனியாக அதில் அரசியல் பேசத்
தேவையிருக்கிறதா என்ன?

  


கனவின் மெய்ப்பாடு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கனவின் மெய்ப்பாடு
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஒளிக்கீற்றுகள் சில -
அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை.....
சில நீர்க்குமிழிகள்
அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள்
அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்....
தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும்
நெருக்கமானவை போலும்
அதேசமயம் நான் அறியாதனவாகவும்.....
அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ அல்லது நீந்திக்கொண்டோ
உருவந்தாங்கியோ அருவமாகவோ
நான் அந்தச் சட்டகத்திற்குள் கண்டிப்பாக எங்காவது இருப்பேன்;
கண்டுபிடிக்க முடியவில்லை.
இடைவழி காற்றாலான பாறாங்கல்லால் அடைபட்டிருக்கிறது.
இந்த கணத்தை இப்படியே உறையச்செய்ய வழியில்லை.
கீற்றுகளை zoom செய்ய கருவிகளேதும் கைவசம் இல்லை.
சிறு அசைவில் குலைந்துவிடலாகும் கனவிற்குள்
நான் முழுப்பிரக்ஞையோடுதான் இருக்கிறேன்.
ஆனால் இங்கே உறங்கிக்கொண்டிருக்கும் என்னால் அந்த நானை
அடையாளங்காண இயலவில்லை.
கையறுநிலையில் கண்ணோரம் நீர்கசிய -
கலைந்துவிடும் கனவு
நினைவாகவோ நனவாகவோ
வழியில்லாத நிலையாமையே
வாழ்வுப்பயனாய்.