Monday, September 9, 2019

புரியும் புரியா, புரியா புரியும் கவிதைகளும் பாமரர்கள் நாமும்

புரியும் புரியா, புரியா புரியும் கவிதைகளும்
பாமரர்கள் நாமும்

லதா ராமகிருஷ்ணன்

ஒரு மனிதரை அடையாளமிலியாகச் செய்துவிட, அவருடைய சொற்கள், செய்கைகள் எல்லாவற்றையும் அனர்த்தமானதாக்கிவிட, எள்ளிநகையாடத்தக்கதாக்கி விட இரண்டு மிக எளிய வழிகள் இருக்கின்றன.

ஒன்று அவரை சித்தங்கலங்கியவராக முத்திரை குத்தி விடல்.

இன்னொன்றுபுரியாக்கவிதை எழுதுபவர்என்று முத்திரை குத்திவிடல்.

ஒரு கவிதைக்கான, கவிஞருக்கான உரிய கவனம் தராதிருக்க ஒருவர் மேற்கொள்ளும் ஒருவகைபொறுப்புத் துறப்புஇது.

தங்கப்பதக்கம் படத்தில் வரும் பாடலில் இடம் பெறும் வரி நினைவுக்கு வருகிறது:

'
தெய்வமே கலங்கி நின்னா….. '

அப்படித்தான், கவிதை உலகில் புழங்கிவருபவர்களே சக கவிஞர்களை, எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், சுற்றி வர இருப்பவர்களின் கேலிச்சிரிப்புக்கு ஆளாகி, கல்ல டியே போல் சொல்லடி பட்டு, உதவாக்கரை என்று பட்டம் பெற்று எல்லாவிதமான இழுக்குகளை, புறக்கணிப்புகளைச் சந்தித்த பிறகும் கவிதை மேல் கொண்ட ஆர்வம் அல்லது பித்து காரணமாக நவீன கவிதை உத்திகளைக் கையாண்டு தன் கவிதையை அடர்செறிவாக உருவாக்கி மனநிறைவு கொள்ளும் சக கவிஞர்களைஎனக்குப் புரியும் விதத்தில் நீ எழுதவில்லையானால் நீ எழுதுவது கவிதை யேயில்லை, கடைக் கோடி மனிதருக்கும் புரியும் வண்ணம் நீ எழுதும் கவிதை இல்லாதவரையில் நீ கவிஞர் என்ற பெயரில் உலவிக்கொண்டிருக்கும் குற்றவாளியே என்று சதா சாட்டையையும் கைவிலங்குகளையும் சுழற்றியபடியே அச்சுறுத்திக்கொண்டிருக்கும், அடையாளமழித்துக் கொண்டிருக்கும் அவலம் இங்கே தமிழ்ச் சூழலில் இன்னும் எத்தனை காலம்தான் தொடருமோ தெரிய வில்லை. மிகவும் வருத்த மாயிருக்கிறது.
எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் அவருடைய வாழ் நாளில் கடைசி சில மாதங்கள் தான் எந்த வேலை யிலும் இருக்கவில்லை. அதாவது மாத ஊதியம் கிடைக்கும் வேலையில். மற்றபடி அவர் எத்தனையோ இடங்களில் பணி யாற்றியிருக்கிறார். அதேபோல் கவிஞர் விக்கிரமாதித்யன் முழுநேரக் கவிஞர் என்று பலபேர் கூறக் கேட்டிருந்தாலும் அவருடைய கட்டுரை நூல் ஒன்றில் அவர் எத்தனை யெத்தனை இடங்களில் ஊதியத்திற்கு வேலைபார்த்திருக் கிறார் என்ற விவரம் படிக்கக் கிடைக்கிறது. இப்படித்தான் கவிதை எழுதுபவர்களும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கு மான தங்கள் கடமைகளைப் பல நெருக்கடிகளுக்கிடையில் செய்தபடியேதான் தங்களுக்கு சரியென்று பட்ட விதத்தில் மொழியைப் பரிட்சார்த்தமாக, பிரக்ஞாபூர்வமாகக் கையாண்டு கவிதையெழுதிக்கொண்டிருக் கிறார்கள்.

ஆனாலும், இலக்கியத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டி ருப்போரைவீணர்களாக’, ‘பாமர மக்களின் எதிரிகளாக, முத்திரை குத்திவிடுவது இங்கே மிக எளிதாகக் கைகூடு கிறது. குறிப்பாக, நவீன தமிழ்க் கவிஞர்களை.

ஆனால், உண்மையில் அவர்கள்தான் அதிகாரமற்ற பாமரர்களாய், தனியர்களாய் தங்கள் கவிதை வெளியில், தங்கள் வலிநிவாரணத் திற்காக, தங்கள் வாழ்வின் பயனாய் கவிதை எழுதிக்கொண்டிருப்ப வர்கள். அவர்களைக் குத்திக் கிழிப்பதில் என்ன கிடைக்கிறது என்று உண்மை யிலேயே தெரியவில்லை.

ஏதோவொரு வகையில் இந்தப் புரியாக் கவிதை எழுதுபவர்களின் இலக்கியத்தரம் சராசரியான புரியும் எழுத்தைவிட மேலாக இருக்கிறது என்று உள்மனம் ஒப்புக்கொள்ளும்போதுதான் ஒருவரின் தன்முனைப்பு நிறைந்த வெளிமனம் அதை அத்தனை முனைப்பாக அடையாளமழிக்க முனைகிறது என்று தோன்றுகிறது.

கடந்த பத்து வருடங்கள்போல்தான் இலக்கியவாதிகளுக் கென வெகுமக்கள் பத்திரிகைகள் இலக்கிய இதழ்கள் நடத்திவருகின்றன. இடைநிலை இதழ்கள் வந்த தன் விளைவாக ஏற்பட்ட சாதகமான சூழல் இது. (பாதகங் களும் உண்டுதான்). அதற்கு முன் அவரவர் கைக்காசைப் போட்டு சிறுபத்திரிகைகள் நடத்திவந்தார்கள். இந்தச் சிறுபத்திரிகையாளர்கள், குறிப்பாக சிறுபத்திரிகைகளில் எழுதும் கவிஞர்கள் வழிவழியாகக் கேவலப்படுத்தப்பட்டு வந்தார்கள்.

இருந்தும், தங்களுக்குத் திருப்தியளிக்கும் விதமாக அவர்கள் கவிதையாக்கத்தில் புதுப்புது முயற்சிகளைக் கையாண்டார்கள். அப்படி எழுதியதால் அவர்களுக்கு வரவான லாபம் என்ன? அப்படியிருந்தும் அவர்கள் ஏன் தங்கள் கவிதையை தங்களுக்கு சரி என்று படும் விதத்தில் எழுதுகிறார்கள்?

ஒரு கவிஞர் மீது அடிப்படை மதிப்போடு அவருடைய கவிதை புரியவில்லை என்று கூறினால், அது பற்றி எடுத்து ரைக்கவோ, கலந்துரையாடவோ ஒரு தளம் அமைத்துக் கொடுத்தால் சம்பந்தப்பட்ட கவிஞர்கள் அத்தனை அர்ப்ப ணிப்போடு தங்கள் கவிதையாக்கம் குறித்துப் பேசுவார் கள். அப்படிப் பேசி நான் கேட்டதுண்டு.

தன் கவிதையை ஒருவர் பொருட்படுத்திப் படித்து அது குறித்து சில தெளிவுகளை நாடுகிறார் என்றால் அதில் நெகிழ்ந்துபோய்விடுவார் கள் நவீன தமிழ்க் கவிஞர்கள். ஏனெனில் அத்தனையளவு புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் அவர்கள். அன்றும் இன்றும்.

இன்றும் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டியது அவசியம். ஏனெனில் அரசியல் பின்னணியோ, சிலஇஸங்களின் பின்னணியோ, சில பெரிய பதிப்பகப் பின்னணியோ இல்லாமல் எத்தனை தரமான தமிழ்க்கவிஞர்களுக்கு தமிழக எல்லைக்கப்பால் தங்கள் கவிதை யைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரல்விட்டு எண்ணிவிடலாம். சில விரல்கள் எஞ்சவும் செய்யும்.

அப்படியில்லாமல்எனக்குப் புரியவில்லைஎனவே இது புரியாக் கவிதை, பம்மாத்துக் கவிதை என்ற விதமாகப் பேசுவதும், இப்படிச் சொல்லிச் சொல்லியே நவீன தமிழ்க்கவிதை குறித்த ஒரு எதிர்மறையான உணர்வை, எதிர்ப்புணர்வை மற்றவர்களிடம் உருவாக்குவதும், அவ்வழி தமது சராசரி கவிதையையே மனிதநேயம் மிக்க, சமூகப்பிரக்ஞை மிக்க செயல்பாடாக மற்றவர்கள் மனங் களில் பதிய வைக்கப் பார்ப்பதும் எப்படி சரியாகும்?

இத்தோடு நில்லாமல் தன் பாட்டில் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரைஅவர் கவிதைகளில் ஆர்வமுள்ளோர் அவருடைய எழுத்து களைத் தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்நீ எழுதுவது சரியில்லை, நீ பாமர மக்களுக்காக எழுதவில்லை, நீ எழுது வது புரியவில்லைபுரியும்படி எழுதினால் தான் உன்னை நான் மதிப்பேன் (இல்லையேல் உன்னை நான் மிதிப்பேன் என்பது உட்குறிப்பு) என்று மதிப்பழித்துக்கொண்டே யிருப்பது எவ்வகையில் நியாயம்?

புரியாக் கவிதையால் பாமர மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் எழுத்தறிவே இல்லாத எத்தனையோ மக்களுக்கு புரியும் கவிதையால் மட்டும் என்ன பயன் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். இதற்கு மறுபக்கமாக, கேள்விஞானம் என்ற ஒன்று இருக்கும் வரையில் எழுத்தறிவில்லாதவர்கள்கூட விருப்பமிருந்தால் கவிதை யைக் கேட்டு ரசிக்க முடியும். மனமில்லையானால் மெத்தப் படித்த வர்களாலும் கவிதையை உள்வாங்கவியலாதுஅது எத்தனை எளிதாக எழுதப்பட்டிருந்தாலும்.

எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருப்பதா லேயே ஒரு கவிதை தரமான கவிதையாகி விடுமா? ஒருவருக்குப் பிடித்துப்போய்விடுமா? எல்லோருக்கும் பிடித்தமானதாகி விடுமா? இந்தஒருவர்’, எல்லோ ரும்என்பவர்கள் எல்லோருக்கும் ஒருவ ரேயா? வெவ்வேறா?

நகரத்திலேயே பிறந்து வாழ்ந்துவரும் எனக்குகரிசல் மண்குறித்த  ஒரு உவமை தெளிவாகாமல் இருக்கும் வாய்ப்பே அதிகம். அதற்குக் கவிஞரா காரணம்?

ஒரு கவிதையைப் படிக்கும்போதே அது நமக்குள் ஒரு பரிவதிர்வை உருவாக்கத்தொடங்குகிறது. முழு வரியும் புரியாதுபோனாலும்கூட அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு சொல் அந்தக் கவிதைக்குள் நம்மை ஈர்த்துக்கொள்கிறது. பின்னோடு போகிறோம். புரிந்தும் புரியாமலுமா யிருக்கும் சிலவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

முழுவதும் புரிந்தாலும் ஒரு பாசாங்கான கவிதை தேர்ந்த வாசகரைத் தன்னிடமிருந்து துரத்திவிடும்.

கவிதையின் புரியாமை குறித்து கடந்த இருபது முப்ப தாண்டுகளில் எத்தனையோ பேசப்பட்டுவிட் டது. எழுதப் பட்டுவிட்டது. இது குறித்துவாழ்க்கை மட்டும் முழுக்கப் புரிந்துவிட்டதா?’ என்ற ரீதியில் ஒரு பேட்டியில் கவிஞர் கலாப்ரியா எதிர்க் கேள்வி கேட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.


ஆனாலும், திரும்பத்திரும்ப இதே விஷயத்தை சிலர் கையிலெடுப்பதற்குக் காரணம் நவீன கவிஞர்களுக் குரிய இடமும் அந்தஸ்தும் இலக்கியவெளியில், சமூகவெளியில் கிடைத்துவிட்டால் அது அன்றும் இன்றும் சொற்ப அதிகாரங்களைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டிருக்கும் சிலருக்குப் பாதகமாகி விடுமே என்ற விதமான அடிப்படையான survival instinct தானோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கேடுகெட்ட அளவு சுயநலம் யாருக்கும் இருக்கலாம். ஆனால் நவீன தமிழ்க்கவிஞர்கள் மட்டும் சுயம், தன் மானம் எதுவுமில்லாமல் எல்லோரிடமும் கைகட்டி வாய் பொத்திஎன் கவிதை தங்களுக்குப் புரிகிறதா அய்யா?’ ’என் கவிதை தங்களுக்குப் பிடித்திருக்கிறதா அம்மா?’ ’ஆம் என்று சொன்னால் பெரும்பேறு பெற்றவராவேன். உங்களுக்குப் புரியவில்லையென்றால் சொல்லுங்கள்இக் கணமே என்னை மாற்றிக்கொள்கிறேன்’. எப்படி கவிதை எழுதவேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொள்ளச் சித்த மாயிருக்கிறேன்என்று மண்டியிட்டுத் தெண்டனிட்டு கவிதை தெரிந்தவர், தெரியாதவர் எல்லோரிடமும் தன்னை, தன் கவித்துவத்தை ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

என்னவொரு வன்முறையார்ந்த எதிர்பார்ப்பு இது?

புரியாக் கவிதை எழுதி யாருக்கு என்ன பயன்? என்று கேட்பவர்கள் கவிதை எழுதாத அல்லது புரியும் கவிதை எழுதும் தங்கள் வாழ்க்கையால் யாருக்கு என்ன பயன் என்று சற்று எண்ணிப்பார்க்க முன்வர வேண்டும்.

பாரதியார் இறந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத் தில் வந்தவர்கள் பத்திருபது பேர் மட்டுமே என்று அங்க லாய்ப்பவர்களில் இருவகையினர் உண்டு. உண்மையாகவே அதை எண்ணி வருந்திய வர்கள். அல்லது, நாற்பது வயதுக்குள் பாரதி எட்டிய உயரத்தை குறைக்க முயல்வதாய் அவரே துச்சமாக எண்ணிய விஷயங்களைக் கொண்டு அவருடைய வாழ்க்கையை மதிப்பிடுபவர்கள். ‘பிழைக்கத் தெரியாத பாரதிஎன்று மனதிற்குள் பரிகசிப்ப வர்கள்.

முன்பெல்லாம் கைக்காசு செலவழித்து ஒரு பத்திருபது பேர் இலக்கியக் கூட்டம், கவிதை வாசிப்புக் கூட்டம் நடத்தும்போது சம்பந்த மில்லாமல் யாராவது ஓரிருவர் தவறாமல் அக்கூட்டங்களுக்கு வருகை தந்துபுரியாக் கவிதைகுறித்துப் புலம்புவதும், பொங்கி யெழுவதும் வாடிக்கை. அத்தகையோருக்கு சில கவிஞர்கள் மிக உண்மையாக நவீன கவிதை குறித்தும் கவிதையின் புரியாமை குறித்தும் தன்னிலைவிளக்கங்களைத் தர முயற்சிப்பார்கள்.

அதையெல்லாம் கேட்கும் மனநிலை அத்தகைய கேள்வி களை எழுப்புவர்களுக்குப் பெரும்பாலும் இருக்காது. கீறல் விழுந்த ரிகார் டாய்புரியாக் கவிதை எழுதுகிறீர்களேபோக்கத்தவர்களேஎன்ற ரீதியிலேயே குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

தாங்கமுடியாமல் சில கவிஞர்கள்சரிதான் போய்யா கவிதை எப்படி எழுதணும்னு உங்கிட்ட நான் பாடம் கேட்க வரலைஎன்றவிதமாகக் கோபமாய் எதையோ சொல்லகவிஞர்களுக்குப் பண்பாடில்லைபண்பாடில் லாமல் கவிதை எழுதி என்ன பயன்?’ என்று கூவ ஆரம் பிப்பார்கள். அந்தச் சிறிய அரங்கம் மூன்று மணிநேரம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கும். அதில் 2 மணிநேரத் திற்குக் குறையாமல் இந்தகவிதைக்காவலர்களால்அரங்கம்ஹைஜாக்செய்யப்பட்டிருக்கும்.

இப்போது ஒரு மாற்றாய் ஃபேஸ் புக் வெளி கிடைத் திருக்கிறது. நல்லவேளையாக இந்த அரங்கிற்கு இத்தனை மணிநேரத்திற்கு வாடகை என்று கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை. புரியாக் கவிதை எழுதுபவர்களை புரியும் கவிதை வேண்டுபவர்களும், புரியும் கவிதை வேண்டு பவர்களை புரியாக் கவிதை எழுதுபவர்களும்ப்ளாக்செய்து தம் வழி போகலாம். இல்லை, தம் பக்க நியாயங்களை விலாவரியாகவோ அல்லது ரத்தினச்சுருக்கமா கவோ முன்வைக்க லாம். அவரவர் பாடு.










No comments:

Post a Comment