Thursday, May 2, 2019

இது வேறு தனிமை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


இது வேறு தனிமை
 
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


சங்கக்கவிதைகளைப் படித்துச் சுவைத்தது
உன் கவிதைக்கு செழுமை சேர்க்கக்கூடும் என்றார் அன்புத்தோழரொருவர்.
கூடாது என்றேன் அவையடக்கமின்றி.
என் கவிதை
நள்ளிரவுக்கும் புலரிக்கும் இடைபட்ட பொழுதிலான
திடீர்விழிப்பில்
எங்கோ கிறீச்சிட்டுக்கொண்டிருக்கும்
கண்ணுக்குப் புலனாகாச் சுவர்க்கோழியின்
வெண்கலக்குரலை உள்வாங்கும் கணத்தின்
தனிமை.
அதற்கு யாரும் துணையாக முடியாது;
வழிகாட்ட முடியாது;
அதை யாரும் அலங்கரிக்க முடியாது;
நலம் பேண முடியாது.
எல்லையற்ற ஒற்றைவழிப் பாதையில்
நான் கூட என்னைப் பாதுகாக்கவியலா
நிராதரவின் வலிமையே
என் கவிதைக்கான ஆற்றுப்படுத்தல்

No comments:

Post a Comment