Thursday, May 2, 2019

நானென்பதும் நீயென்பதும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நானென்பதும் நீயென்பதும்….
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அதெப்படியோ தெரியவில்லை
அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு
உடன்பட்டிருந்தபோதெல்லாம்
அறிவாளியாக அறியப்பட்ட நான்
ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும்
குறுகிய மனதுக்காரியாக,
கூமுட்டையாக
பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக
பிச்சியாக,
நச்சுமன நாசகாரியாக
ஏவல் பில்லி சூனியக்காரியாக
சீவலுக்கும் பாக்குக்கும்
காவலுக்கும் கடுங்காவலுக்கும்
வித்தியாசம் தெரியாத
புத்திகெட்ட கேனச் சிறுக்கியாக
மச்சு பிச்சு மலையுச்சியிலிருந்து
தள்ளிவிடப்படவேண்டியவளாக
கள்ளங்கபடப் பொய்ப்பித்தலாட்டப்
போலியாக
வேலி தாண்டிய வெள்ளாடாக
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
நாசகாரியாக
பள்ளந்தோண்டிப் புதைக்கப்படவேண்டியவளாக
வெள்ளத்தில் வீசியெறியப்படத்தக்கவளாக
சுள்ளென்று தோலுரித்துக் குருதிபெருக்கும்
கசையடிக்குகந்தவளாக
அக்கிரமக்காரியாக
அவிசாரியாக
துக்கிரியாக
தூத்தெறியாக
உங்கள் தீராத ஆத்திரத்திற்குப்
பாத்திரமாகிவிடுகிறேன்.
ஆனாலுமென்ன?
நீங்கள் என்னை நோக்கி
எனக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்லும்போது
அது உங்களுக்குமானதாகிவிடுகிறது!




No comments:

Post a Comment