Thursday, May 2, 2019

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019


மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019
16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து
சில எண்ணப்பதிவுகள்
லதா ராமகிருஷ்ணன்
  
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது _ மேடை யெங்கும் படைப்பாளிகளே பிரதானமாக வீற்றிருந்தது!


நிகழ்வு: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு. இன்று எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்த நாள். இன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் தமிழவன், அம்ஷன் குமார், கோபாலகிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்.சண்முகம், விருது பெறும் படைப்பாளிகளான கவிஞர் யூமா வாசுகி, எழுத்தாளரும்நாடக வியலாளருமான வெளி ரங்கராஜன், என விழா நாயகர்களாக படைப்பாளிகள் மட்டுமே மேடையில் வீற்றிருந்ததும். அமரர் மா.அரங்கநாதன் குறித்துப் பேசியதும், விருதுபெற்றவர்கள் குறித்து உரையாற்றி யதும் இந்த இலக்கியக்கூட்டத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியது என்றால் மிகையாகாது!

விழா நிகழ்வுகளை, சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்த்தியாக அறிமுகம் செய்தார்.

மேலும், இந்தப் படைப்பாளிகள் அனைவருமே தமிழின் நவீன இலக்கிய வெளியோடும், சிறுபத்திரிகை வெளிக்கும் மிகவும் பரிச்சயமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இத்தகைய இலக்கிய மேடைகள் பலவற்றில் தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அறவே அறியாத திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள், சமூகத்தில் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்று வந்து சம்பந்தமேயில்லாமல் எதையாவது பேசுவதும், தங்கள் பேச்சில் தங்களையே முனைப்பாக முன்னிறுத்திக்கொள்வதும், அல்லது தங்கள் தானைத்தலைவர் களிடமிருந்துதான் தமிழே தோன்றியது என்றவிதமாய் எதையாவது சொல்லிவைப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.

இலக்கியமேடையிலும் தங்கள் பதவி, பணத்தால் தங்களை முன்னிறுத்தி, கௌரவிக்கப்படும் படைப்பாளிகளைப் பின்னுக்குத் தள்ளும் போக்கைப் பார்த்து எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டதுண்டு.

முன்பொரு முறை தமிழகமலேசிய கவிஞர்கள் சந்திப்பு ஒன்றை நான் பொறுப்பேற்று நடத்தினேன். சமகால கவிதைவெளியில் இயங்கிவரும் பல தமிழ்க்கவிஞர்கள் இடம்பெற்ற அந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்துகொண்ட ..எஸ் அதிகாரி ஒருவர், ‘புரியாக்கவிதைதான் எழுதுகிறார்கள் என்று சாட ஆரம்பித்து வைரமுத்துபோல் எழுதவேண்டும் என்று முடித்தார். நான் உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருப்பதைக் கண்ட விழா ஏற்பாட்டாளர் நிகழ்வில் என்னைப் பேசவிடாமலே நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நான் அந்தச் சதியை முறியடித்து வெற்றிகரமாய் மேடையேறிகவிதை புரியவில்லைஎன்று சொல்வதிலுள்ள அபத்தத்தைப் புட்டுப்புட்டுவைத்துவிட்டுத் திரும்பிப்பார்த்தால் பிரதம விருந்தினரான அந்த ..ஏஸ்க்காரரைக் காணவில்லை. அவர் தன் பேச்சை முடித்துவிட்டு எப்போதோ வீட்டுக்குப் போயிருந்தார்!

இன்னொரு விழாவில் திரைப்படப் பிரபலம் ஒருவர் தன் உரையில் இரண்டு வரிகளுக்கு ஒருமுறை தன்னைத்தான் ஷொட்டுக்கொடுத்துக்கொண்ட தோடு, சம்பந்தப்பட்ட படைப்பாளியைப் பாராட்டும் உயரிய நோக்கத்துடன்மிகச் சிறந்த படைப்பாளி அவர், ஆனால், நேரமின்மையால் அவருடைய படைப்புகளை நான் வாசித்ததில்லை’, ஆகச்சிறந்த எழுத்தாளர் அவர்இனிவரும் நாட்களில் கண்டிப்பாக அவருடைய ஒரு படைப்பையாவது வாசித்துவிடுவேன் என்று விதவிதமாய் பினாத்திக்கொண்டிருந்ததை தேமேன்னு அமர்ந்துகொண்டு கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

இதற்கெல்லாம் மாமருந்தாய் இன்றைய இலக்கிய நிகழ்வு. எழுத்தாளர் மா.அரங்கநாதனுடைய படைப்புகள் குறித்த எழுத்தாளர் தமிழவன் உரை, விருது பெற்ற வெளி ரங்கராஜனைப் பற்றி எழுத்தாளரும்ஆவணப்பட இயக்குநருமான அம்ஷன் குமார் பேசியது, கவிஞர் யூமா வாசுகி குறித்து எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் பேசியது என எல்லா உரைகளுமே அவர்கள் அடியாழ மனங்களிலிருந்து வெளிப்பட்டவை.

சக படைப்பாளிகள் என்பதோடு நண்பர்களாகவும் வருடக்கணக்காகப் பழகியவர்களா தலால் அம்ஷன்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் உரைகளிலிருந்து முறையே வெளி ரங்கராஜன் குறித்தும், யூமா வாசுகி குறித்தும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

வெளி ரங்கராஜன் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று அந்தக் கவிதைகளை வாசித்துக்காட்டிய அம்ஷன்குமார், வெளி ரங்கராஜன் நடத்திய நாடகவெளி என்ற இதழ்கள் நாடகவியலுக்கான அரிய ஆவணங்கள் என்று எடுத்துரைத்தார்.

எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யூமா வாசுகி நடத்திய குதிரைவீரன் பயணம் சிறுபத்திரிகை குறித்துப் பேசினார். யூமா வாசுகி முறையாக ஓவியம் பயின்றவர் என்றும் பெரிய பெரிய கித்தான்களில் வரையவேண்டும், ஓவியக்கண்காட்சி நடத்தவேண்டும் என்ற அவர் ஆசை வாழ்வியல் நெருக்கடிகளால் நிறைவேறாமல் போனபின் எழுத்தில் வாழ்க்கைச் சித்திரங்களை வரையத்தொடங்கினார் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.

நேரமின்மை காரணமாக விருதுபெற்றவர்களின் ஏற்புரையைக் கேட்காமலேயே கிளம்பவேண்டியதாயிற்று. ஆனால், மொத்த நிகழ்வும் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

விழாவின் இந்தத் தரத்திற்கும் விருதுகளுக்கான சரியான தேர்வுக்கும் முக்கியக் காரணம் மா.அரங்கநாதனின் மகன் நீதியரசர் மகாதேவன் என்பது மிகவும் உண்மை. அரசர் என்று பட்டத்தில்தான் உள்ளதே தவிர மிகவும் எளிய மனிதர். அரங்கிலும் அவர் மேடையில் வீற்றிருக்கவில்லை. கீழே பார்வையாளராகவே அமர்ந்திருந்தார். தமிழ், தமிழ் இலக்கிய வெளி இரண்டிலும் தொடர்ந்த பரிச்சயம் கொண்டவர். தன் தந்தையோடு சேர்ந்து முன்றில் என்ற சிற்றிதழை நடத்தியவர். முதன்முதலாக சென்னையில் தமிழ் இலக்கிய மாநாடு நடத்தியவர்.

தன்னுடைய தந்தை எழுத்தாளர் என்பதில் மனநிறைவும் பெருமிதமும் கொண்டவர் எழுத்தாளர் மா.அரங்கநாதனின் மகன். தந்தை என்ன எழுதுகிறார், எத்தகைய இலட்சியங்களைக் கொண்டிருந்தார், அவர் இருந்தபோது அவருடைய எழுத்துகளைப் படித்து அங்கீகரித்தவர்கள் யார், அவருடைய இலக்கிய மேதமையை மதிப்பழிக்க முற்பட்டவர்கள் யார் என்ற விவரங்கள் அவருக்கு நன்றாகவே தெரியும். இஃதொன்றும் தெரியாமல் படைப்பாளியா யிருக்கும் பெற்றோன் இறந்தவுடன் அவருடைய படைப்புகளுக்கு சட்டரீதியான வாரிசாகிவிடும் பிள்ளைகள் பெற்றோன் இருந்தவரை அவருக்கு நட்பினராக இருந்தவர்களை புறக்கணித்து, மதிப்பழித்து, பெற்றோனின் படைப்புகளைக் காசாக்குவதே குறியாக, வாழ்ந்த காலத்தில் அவரைப் புறக்கணித்த, மதிப்பழித்தவர்களிடமே அந்தப் படைப்புகளைப் பிரசுரிக்கக் கொடுப்பது இங்கே வழக்கமாக நிகழும் ஒன்றாக இருக்கிறது. வாரிசுகளின் இந்தச் செயல்களையெல்லாம் பார்த்து மற்றவர்கள் மௌனமாக வருத்தப்படத்தான் இயலும். மா.அரங்கநாதன் விஷயத்தில் அப்படியில்லை என்பது மிகப்பெரிய ஆறுதல்.

நல்ல எழுத்தாளர்களுக்கு பொற்கிழி வழங்கவேண்டும் என்று எழுத்தாளர் மா.அரங்கநாதன் அடிக்கடி சொல்வதுண்டு என்றும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற திரு. மகாதேவன் கடந்த வருடத்திலிருந்து எழுத்தாளர் மா.அரங்கநாதன் பெயரால் விருது வழங்குவதாகவும், யாரிடமும் நிதியுதவி பெறாமல் இதைச் செய்வதாகவும் கவிஞர் ரவி சுப்பிரமணியன் தன் உரையில் தெரிவித்தார்.

விழாவில் மா.அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை என்ற நூல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மா.ர்கநாதனுடைய எழுத்து குறித்து அசோகமித்திரன், பிரபஞ்சன், சா.தேவதாஸ், கவிஞர் ஸ்ரீநேசன், அமரந்த்தா, ஜமாலன், முபீன் சாதிகா, கோபிகிருஷ்ணன், ராணி திலக் என தமிழின் முக்கியப் படைப்பாளிகளால் எழுதப்பட்ட 37 கட்டுரைகள் கொண்ட இந்த நூல் நற்றிணைப் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் .நா.சுவுக்கு மகாதேவன் ஒரு பிள்ளை போல என்றால், எழுத்தாளர் மா.அரங்கநாதனுக்கு கவிஞர்கள் ரவி சுப்பிரமணியனும், எஸ்.சண்முகமும் பிள்ளைகள் போல! எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான அமரந்த்தாவிடம் மிகுந்த பாசம் கொண்டவர் மா.அரங்கநாதன்.

அவருக்கு வயதாகிவிட்டதே என்று நான் பொறுப்பேற்று நடத்திய தமிழ்நாடு-மலேசிய கவிஞர்கள் சந்திப்புக்கு அவரை அழைக்காதிருந்தபோதும் நிகழ்ச்சிக்கு கவிஞர் எஸ்.சண்முகத்தோடு வந்து ஆர்வமாகக் கவிதை வாசிப்பை ரசித்தார். சமகால எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்துவந்தவர் அவர்.

பல வருடங்களுக்கு முன் முன்றில் அலுவலத்திற்குப் போய்வருவதும், சக எழுத்தாளர்கள் பலரை அங்கு பார்ப்பதும் வழக்கம். இன்றும் அரங்கில் எழுத்தாளர்கள் அமரந்த்தா, பரிசல் செந்தில்நாதன், புதுப்புனல் சாந்திரவி, கவிஞர் நிதா எழிலரசி, அவர் கணவர் – Fleeting Infinity தொகுப்பின் அட்டை மற்றும் பக்கங்களை டிசைன் செய்தவர், பொன் தனசேகரன், நிழல் திருநாவுக்கரசு, சந்தியா பதிப்பகம் நடராஜன், மற்றும் மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், வெளி ரங்கராஜன், எஸ்.சண்முகம், யூமா வாசுகி இன்னும் பலரைப் பார்க்கக் கிடைத்ததில் மீண்டும் முன்றில் அலுவலக இலக்கிய வெளியில் கால்பதித்ததுபோல் ஒருவித நெகிழ்வு மனதை ஆட்கொண்டது.


Ø   

No comments:

Post a Comment