Wednesday, March 20, 2019

கவிதையும் வாசிப்பும் – 5 கவிஞர் ஜெயதேவனின் கவிதை….. - லதா ராமகிருஷ்ணன்


கவிதையும் வாசிப்பும் – 5
கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..
- லதா ராமகிருஷ்ணன்
 
















கவிஞர் ஜெயதேவனுடைய ஒரு கவிதை இது:

நீங்கள் வீட்டைச் சுமந்து கொண்டே வெளியே போகிறீர்கள்
அதுதான் உங்கள் பஞ்சாரம்
அதுதான் உங்கள் முட்டை
தேக்கு மர நிலைப்படிகளில் இரு கை பதித்துதான் உங்கள் தாய்
உங்களை தினம் பெற்றெடுக்கிறாள்.
ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்புடன் மனைவிகளின் காதல் சிறு
காம்பில் காமப் பெரும் பலா.
உங்கள் வாகன ஒலிக்காய்
படிக்கட்டு பலூன்களாய் பிள்ளைகள்.
வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறது
கடந்த காலமும் எதிர் காலமும்
கிறீல் கதவு தேய்மானத்தில்
பாட்டியும் தாத்தனும்.
டைனிங் மேசையில் வீசும்
புலால் வாசமும் தயிர் சாதமும்
உங்கள் உடம்பாய்
ஒவ்வொரு தட்டிலும் கோப்பையிலும் உங்கள் ரத்தம்
குளியல் சோப்புக் கட்டிகளில் கரைந்து கொண்டே போகின்றன
உங்கள் பிறவி வாசம்.
உடைகளில் இன்னொரு உடம்பைப் பெறுகிறீர்கள்
மறுநாள் உடையில் மறு உடம்பு
வீட்டில் ஒரு மகப்பேறு நிகழ்கிறது
தொட்டிலில் நீங்களும் ஆடுகிறீர்கள்.
கட்டில்களில் தேவனாயும் மிருகனாயும்
உங்கள் வீட்டு முதியவரின் "லொக் லொக் " இருமலில் நீங்கள் எதையும் கேட்பது இல்லை
நீங்கள் தெய்வத்தை தேடி பூக் கூடையுடன் கோவிலில் மெளனித்து
வழிபடும் போது அங்கே ஒலிக்கும்
மணி ஒலி இந்த முதியவரின் இருமல்
என்பதை எப்போது புரிவீர்
எப்போதோ ஒலிக்கும் காலிங் மணி
அப்போது உண்மையில் விடை பெறுவீர்கள்
பிறகு
இந்த வீட்டின் ஜன்னல் திறக்கும்
வேறு ஒருவருக்காக
***
(
விடியாத காலை..4.00 மணி)
v
முழுவதும் புரியாத கவிதை நம் மனதில் இனம்புரிந்தும் புரியாததுமான உணர்வுகளைக் கிளர்த்தி நெகிழச் செய்து சில கணங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்து நம்மையும் காலத்தையும் உறையச்செய்து விடுவதைப் போலவே முக்கால்வாசி அல்லது முழுவதும் புரியும் கவிதையும் நம்மைத் தன் வசப்படுத்திவிடுவதும் உண்டு.

இதையே தலைமாற்றியும் சொல்லலாம்.

கவிதை நம்மில் ஏற்படுத்தும் புரிதல் என்பது ஒரு பரிவதிர்வு. வாசிக்கும் நம் மனதில் குழம்பிக் கலங்கித் தெரியும் சில காட்சிகளைத் தெளியச் செய்யும் பரிவதிர்வு. நம் கண்ணெதிரே உள்ள ஒன்றின் நாம் பார்த்தறியா ஒரு கோணத்தை, ஒரு பக்கத்தை நமக்கு தரிசனமாய்க் காட்டி உணரச் செய்வது. மருத்துவரிடம் போய் குணப்படுத்த வழியில்லாத சில வாழ்வார்த்த அக புற நோய்களுக்கு நிவாரணமளிக்கும் சஞ்சீவிமலை யாய் சிலபல வரிகளை நமக்கு வரமாய் அளிக்கும் நிவாரணியாதல், நனவோடையில் பின்னோக்கிப் பயணப்படவைத்தல், வாழ்வில் நாம் மட்டுமல்ல சுகப்படுவதும் சோகப்படுவதும் என்று தெளிவுண்டாக்குதல் என கவிதை நமக்கு எத்தனையோ தருகிறது.

இதனாலேயே இத்தனை திறப்புகளையும் அளிப்பதாக பாவனை செய்யும் கவிதைகளை நமக்குப் பிடிக்காமல் போவதும்.

ஒரு கவிதையின் புரியாமை என்பது வேறு; பாவனை என்பது வேறு.

கவிஞர் ஜெயதேவனின் இந்தக் கவிதை ஒரு வாசிப்பாளராய் என் மனதிற்கு நெருக்கமானதற்குக் காரணம் இதில் விரியும் வாழ்வு.

கவிதையில் வரும் நீ, நீங்கள், நாம், அவன், அவள், அவர் எல்லாமே நிறைய நேரங்களில் அதே அர்த்தம் தருவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான். கவிதையெழுதும்போது கவி தன்னிலை, முன்னிலை, படர்க்கை, உயர்திணை, அஃறிணை, முக்காலங்கள், ஆதிமனிதன் முதல் நவீன மனிதனாகிய நீள்தொடர்ச்சி என்று என்னவெல்லாமோ ஆகிறார்.

நீங்கள் உங்கள் வீட்டைச் சுமந்துகொண்டே வெளியே போகிறீர்கள் / அதுதான் உங்கள் பஞ்சாரம் / அதுதான் உங்கள் முட்டை. இவைமுதல் மூன்று வரிகள். குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு என்பது பணம் ஈட்டலோடு நின்றுவிடுவதில்லை. அதுதான் நம்முடைய, நாம் வாழ்வதற்கான அடையாளம் என்றாகிவிட்ட நிலை.

(சுமந்துகொண்டே என்ற சொற்றொடர் ஒருவேளை மூட்டை அச்சுப்பிழைக்குள்ளாகி முட்டையாகிவிட்டதோ என்று ஒருகணம் எண்ணவைத்தது. ஆனால், பஞ்சாரம் என்ற சொல்லாடல் அப்படியில்லை என்று தெளிவுபடுத்தியது. அச்சிடப்படும் கவிதையில் ஒவ்வொரு வார்த்தையும் அக்கவிதை வரையும் காட்சியின் ஒரு முக்கியத் தீற்றல் என்பதால் கவிதையில் நேரும் அச்சுப்பிழை வாசிப்பையே அனர்த்தமாக்கிவிடக் கூடியது. ஆனால், அச்சுப்பிழையில்லாமல் கவிதை வெளியாவது எல்லாநேரங்களிலும் சாத்தியமாவதில்லை என்பதே நடப்புண்மையாக இருக்கிறது.)

சதா சுமந்தபடி போய்வந்துகொண்டிருக்கும் வீட்டையும் அதன் அங்கத்தினர்களையும் கவி விவரிக்கும் பாங்கு எத்தனை கவிநயம் மிக்கது!

/தேக்கு மர நிலைப்படிகளில் இரு கை பதித்துதான் உங்கள் தாய்
உங்களை தினம் பெற்றெடுக்கிறாள்./
/ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்புடன் மனைவிகளின் காதல் சிறு காம்பில் காமப் பெரும் பலா.
உங்கள் வாகன ஒலிக்காய்
படிக்கட்டு பலூன்களாய் பிள்ளைகள்.
வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறது
கடந்த காலமும் எதிர் காலமும்
கிறீல் கதவு தேய்மானத்தில்
பாட்டியும் தாத்தனும்./

வேலை நிமித்தம் வெளியே போயிருக்கும் பிள்ளை வீடுதிரும்பும் வரை தாய் கவலையோடு அவனுக்காகக்காத்திருப்பதை, அவளுக்கு மகன் மேல் உள்ள அக்கறையை மட்டுமாஉங்கள் தாய் உங்களை தினம் பெற்றெடுக்கிறாள்என்ற வரி எடுத்துரைக்கிறது!

கணவன் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக் கும் மனைவி உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்: எதற்கு?

/ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்புடன் மனைவிகளின் காதல் சிறு காம்பில் காமப் பெரும் பலா./

மனைவிகளின் காதல் சிறுகாம்பில் காமப்பெரும் பலா என்ற வரி மனைவியின் தேவையை அழகிய உவமைவழியே எடுத்துரைக்கிறது. உரைநடையை வரிகளாக வெட்டிவெட்டித் தந்தால் அது நவீன கவிதையாகிவிடும் என்று சிலர் இளக்காரமாய்க் கூறக் கேட்டதுண்டு. மேற்கண்ட வரிகள் எதுகை-மோனை இலக்கணத்தில் அடங்காதவை. அதனால், அவை வெட்டிப்போட்ட உரைநடைவரிகள் என்று சொல்லிவிட முடியுமா? இந்த நான்குவரிகளில் குறைந்தபட்சம் நான்கு முழுப்பக்க உரைநடையாவது compress செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது!

/உங்கள் வாகன ஒலிக்காய்
படிக்கட்டு பலூன்களாய் பிள்ளைகள்./

பிள்ளைகளைப் படிக்கட்டு பலூன்கள் என்று வர்ணித்திருப்பது எத்தனை அழகாக இருக்கிறது!

சில விஷயங்களைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேர் எழுதியிருப்பார்கள். மழை, தனிமை, மரணம், குழந்தைகள், வீடு, நட்பு, காதல்இப்படி. இவைகளில் ஒன்றையே ஒரு கவிதை பேசும்போது அது இதற்கு முன்பு இந்தக் கருப்பொருளில் படித்திருக்கும் கவிதைகளை நம்மையுமறியாமல் நம் நினைவுக்குக் கொண்டுவந்து ஒப்புநோக்கச் செய்யும். ஒரேமாதிரியான விவரிப்புகள் இருந்தால் நமக்கு வாசிக்க சலிப்பாயிருக் கும். அதிகம் கையாளப்படும் கருப்பொருள்களையே கையாளும்போது கவிஞர் கூடுதல் பிரக்ஞையோடு இயங்கவேண்டியது அவசியம்.

நாம் கோபமாக இருக்கிறோம் என்று எண்ணும்போதே நாம் அந்தக் கோபத்திலிருந்து விலகிநிற்பவர்க ளாகிறோம் என்று சொல்வதுண்டு. இசைநிகழ்ச்சி களில் மனமுருகிப் பாடும் இசைக்கலைஞர்களிடமும் ஒருவித விழிப்புநிலையும் இருந்துகொண்டே யிருக்கும்தான். அதுபோலவே தான் கவிதை யெழுதும்போது கவியின் மனநிலை யிலும் ஒருவித விழிப்பும் பொருந்தியிருக்கும். அதன் உதவியோடு தான் கவி ஒவ்வொரு வார்த்தையாகத் தேடித்தேடி யெடுத்துக் கோர்க்கிறார்.

நான் படித்தவரை குழந்தைகளை படிக்கட்டு பலூன்களாக அழகுற வர்ணிப்பது இதுவே முதல் கவிதை என்று தோன்றுகிறது. பலூன்கள் பற்றிய நம் அறிதலோடு படிக்கட்டு குறித்த நம் அறிதலும் சேர்ந்து என்னவெல்லாம் அர்த்தசாத்தியங்களுக்கு வழியேற்படுகிறது! படிக்கட்டு பலூன்கள் என்ற சொற்றொடர் வளர்ந்தபின் குழந்தைகள் பறந்துவிடுவார்கள் என்று குறிப்புணர்த்துவதாகவும் கொள்ளலாம்.

வீட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறது
கடந்த காலமும் எதிர் காலமும்
கிறீல் கதவு தேய்மானத்தில்
பாட்டியும் தாத்தனும்.

வீட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறது கடந்த காலமும் எதிர்காலமும்என்ற வரிகள் தாத்தாவோடு சிறுமியாய் நான் திருவல்லிக்கேணி வீட்டுக் கூடத்தில் காலால் தரையில் தாத்தா தேய்த்துத் தேய்த்து ஊஞ்சலை முன்னும் பின்னும் வீசிவீசி ஆட்ட, அதை ஒரு பஸ்ஸாக பாவித்து நான் கையிலுள்ள சின்ன விசிலை ஊதியது, பின், அதே ஊஞ்சலில் என் சித்தப்பாவின் குழந்தையை அமரவைத்து நான் காலால் தரையில் அழுத்தி ஊஞ்சலை வீசி ஆட்டியது, இன்று தாத்தா இல்லாதது, அந்த வீட்டிலிருந்த ஒரு பகுதி இடிந்துவிழுந்தது, ஆலங்காத்தாப் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த, பந்துவிளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் வீசிய பந்து எங்கள் வீட்டு ஜன்னலில் பட்டுவிட, என் அப்பா கோபத்தில் ஏதோ கெட்ட வார்த்தையில் அவனைத் திட்ட, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் அவர் அப்படித் திட்டியது தவறு என்று என் அப்பாவிடம் கூற, அவர் அந்தப் பையனை அழைத்து மன்னிப்பு கேட்டது, தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது, சினிமா, சீரியல் தந்தை தாத்தாக்களாய் அன்பை வெளிப்படுத்தத் தெரியாத தாத்தாவின் கன்னத்தில் ஒற்றைக்கோடாய் கண்ணீர் ஒழுகஅவனுக்கு பதில் நான் போயிருக்கலாம்என்று ஒற்றைவரியில் தன் புத்திர சோகத்தை வெளிப்படுத்தி முடித்தது, 103 வயது வரை வாழ்ந்த தாத்தாவின் அஸ்தியை அவருக்குப் பிடித்தமான மெரீனா கடற்கரைக்குச் சென்று அங்கிருந்த கடலில் கரைத்தபோது (நவம்பர்2, 2004) 100 வயதிற்கு மேலானவர்களின் அஸ்தியைக் கரைத்தால் கடல் பொங்கும் என்ற ஸ்பானியர்களின் தொன்ம நம்பிக்கை குறித்து One Hundred Years of Solitudeஇல் (என்று நினைக்கிறேன்) படித்தது நினைவுக்கு வந்தது, அதேபோல் 2004 டிசம்பரில் சுனாமி வந்தது என என்னவெல்லாமோ நினைவுக்கு வருகிறது. பொதுவாக நான் கடந்ததைத் திரும்பிப் பார்ப்பதில்லைஅதை எட்டிப்பிடிக்கவே முடியாது என்பதால். ஆனாலும், இந்தக் கவிதை வரிகள் அத்தனை அன்பாய் என்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றனவேஎன்ன செய்ய?

/டைனிங் மேசையில் வீசும்
புலால் வாசமும் தயிர் சாதமும்
உங்கள் உடம்பாய்
ஒவ்வொரு தட்டிலும் கோப்பையிலும் உங்கள் ரத்தம்/

இந்தக் கவிதை குடும்பவாழ்வு என்பதை என்னவாகப் பார்க்கிறது என்பதை கவிதையின் ஆரம்பத்தில் வரும்நீங்கள் வீட்டைச் சுமந்துகொண்டே வெளியே செல்கிறீர்கள்என்ற வரியிலுள்ளசுமந்துகொண்டேஎன்ற சொல்லாடல் குறிப்புணர்த்துகிறது.

மனித நாகரீகத்தின் வளர்ச்சிப்போக்கில் வந்துநிற்கும் இடம்தான் குடும்பம். என்றாலும், இதிலுள்ள சுமைகளினால் அயர்வுறும்போது, இதன் செக்குச்சுழற்சியில் மீளமுடியாமல் மாட்டிக்கொண்டு அலைவுறும்போது புவியிலான வாழ்க்கை வேறு விதமாக இருந்திருந்தால்? அந்த வேறுவிதமாய் எவ்வாறு இருந்திருக்கும் என்றெல் லாம் மனிதமனம் நினைத்துப்பார்ப்பது தவிர்க்கமுடியாத தாகிறது. இப்படித்தான் வாழ்ந்தாகவேண்டும் என்று யார் விதித்தது? ஏன் விதிக்கப்பட்டது? என்பதான கேள்விகள் நம் மனங்களில் எழவேசெய்யும். பணத்தை ஈட்டினால்தான் இங்கே வாழமுடியும் என்ற நிலை நிறைய நேரங்களில் நம் மூச்சுத்திணறவைப்பதை அனுபவரீதியாகவே நாம் உணர்ந்திருப்போம். இந்த மூச்சுத்திணறலைக் கவிஞர் எப்படி விவரிக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியம்.

/குளியல் சோப்புக் கட்டிகளில் கரைந்து கொண்டே போகின்றன
உங்கள் பிறவி வாசம்.
உடைகளில் இன்னொரு உடம்பைப் பெறுகிறீர்கள்
மறுநாள் உடையில் மறு உடம்பு
வீட்டில் ஒரு மகப்பேறு நிகழ்கிறது
தொட்டிலில் நீங்களும் ஆடுகிறீர்கள்.
கட்டில்களில் தேவனாயும் மிருகனாயும்./

பின்வரும் வரிகளில் கவிதை வேறு ஒரு தளத்தை எட்டுகிறது. வீட்டை சுமந்து கொண்டிருக்கும் மூச்சுத்திணறல் ஒருபுறம். ஏற்கெனவே வீட்டைச் சுமந்து முடித்தவரின் லொக் லொக் இருமல் ஒருபுறம். இங்கே கவிதையில் வரும்நீங்களும்’ ’இருமும் முதியவரும்ஒருவரா? இருவரா?

வீட்டைச் சுமந்துகொண்டே யிருப்பதில் உளைச்சலுறும் ஒருவரால் வீட்டில் இருமிகொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி உதவமுடியும் என்ற கேள்வியும் கவிஞரின் வரிகளில் தொக்கிநிற்பதாகச் சொல்லமுடியுமா? அப்படி எண்ணலாகாது என்று அவருடைய அடுத்தவரிகள்:

/உங்கள் வீட்டு முதியவரின் "லொக் லொக் " இருமலில் நீங்கள் எதையும் கேட்பது இல்லை
நீங்கள் தெய்வத்தை தேடி பூக் கூடையுடன் கோவிலில் மெளனித்து
வழிபடும் போது அங்கே ஒலிக்கும்
மணி ஒலி இந்த முதியவரின் இருமல்
என்பதை எப்போது புரிவீர்/

மேற்கண்ட வரிகள் முதியவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பைப் பேசுவதாகவே தோன்றுகிறது. கோயில் மணி ஓசையை முதியவரின் இருமல் ஒலியாகப் பேசும் இந்த உவமானமும் நான் இதுவரை படிக்காதது! குழந்தையும் தெய்வமும் என்கிறோம்; Old is Gold என்கிறோம். அப்படித்தான் அவர்களை நடத்துகிறோமா? அந்த வயதுகளில் நாம் அப்படித்தான் நடத்தப்பட்டோமா? இப்போது நாம் நடந்துகொள்வது அப்படித்தான் இருக்கிறதா?

இறுதிப் பத்தியிலுள்ள வரிகள் மரணத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? அல்லது, ஒருவித துறவற மனநிலையை, Detached Attachment state of mindஐப் பேசுவதாகக் கொள்ளலாமா?

/எப்போதோ ஒலிக்கும் காலிங் மணி
அப்போது உண்மையில் விடை பெறுவீர்கள்
பிறகு
இந்த வீட்டின் ஜன்னல் திறக்கும்
வேறு ஒருவருக்காக
***
(
விடியாத காலை..4.00 மணி)/

மேற்கண்ட இறுதிவரிகள் வாழ்வின்புனரபி ஜனனம் புனரபி மரணம்நிலையைப் பேசுவதாகக் கொள்ளலாமா? ஆனால், ஏன் வீட்டின் வாசல் திறக்கும் என்று சொல்லவில்லை கவி? ஏன் வீட்டின் ஜன்னல் திறக்கும் என்று சொல்கிறார். வாசல் திறப்பதற்கும் ஜன்னல் திறப்பதற்கும் இடையில்தான் எத்தனை வித்தியாசம்! அந்த வேறு ஒருவர் பொதுவானவரா? குறிப்பானவரா?

இந்த இறுதிவரிகளோடு சேர்த்து அவற்றின் தொடர்ச்சியாய் அவற்றின் கீழே அடைப்புக்குறிக்குள் உள்ளவிடியாத காலை’ 4.00 மணிஎன்பதையும் சேர்த்து வாசித்தால் கிடைக்கும் அர்த்தம் இன்னும் அடர்செறிவானது.

ஒரு கவிஞர் நமக்குப் பரிச்சயமானவராயிருந்தால், நம் நட்பினராயிருந்தால் அந்த உறவுநிலை அவருடைய கவிதை வரிகளை அவர் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கச் செய்யும். இது எல்லாநேரமும் அவர் எழுதிய கவிதை குறித்த சரியான அர்த்தத்தை நமக்குத் தரும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. கவிதை எழுதுபவர் சக மனிதராகப் பரிச்சயமாகியிருக்கும் நிலையில் கவிதையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் வெறும் மேம்போக்கானவை, போலியானவை என்ற முடிவுக்கு வர இயலும். ஆனால், அப்படியான முடிவுக்கு வருவது எவ்வளவு தூரம் சரி என்றும் தெரியவில்லை. சபரிமலைக்கு வருடாவருடம் சென்றுவரும், குடிப்பழக்கமுடைய நண்பரொருவர் அந்த 40 நாட்களாவது குடிக்காமல் இருக்கவேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாகவே அப்படிச் செல்வதாக என்னிடம் சொன்னதுண்டு. நிஜ வாழ்வில் தான் எப்படியிருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அப்படியிருக்க முடியாமல் போகிறதோ அந்த விருப்பின் தொடர்ச்சியாகவே கவி தன் கவிதையில் வெளிப்படுகிறார் என்ற அர்த்தத்தைத் தரும்படியாக கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு கூட்டத்தில் கூறியபோது நானும் வேறு சிலரும் அதை ஏற்றுக்கொள்ள வில்லையென்றாலும், இப்போது யோசித்துப் பார்க்கும்போது அந்தக் கருத்தைப் புறக்கணித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதையை இருநூறு அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும்போது கவிஞரைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் வாசிக்கிறோம். அவர் எழுதிய வரிகள் அவரை மீறி அவரை வெளிப்படுத்தலாம், வெளிப்படுத்தாமல் போகலாம். அவர் எழுதிய கவிதை நம்மில் பரிவதிர்வு ஏற்படுத்தும்போது அது நாம் எழுதிய கவிதையாகிவிடுகிறது. அதில் நாம் தேடும் அர்த்தங்களை, நமக்குக் கிடைக்கும் அர்த்தங்களை அள்ளியெடுத்துக்கொள்கிறோம்; அந்த அர்த்தங்களை சாத்தியமாக்கும் வரிகளை எழுதிய கவியைக் கொண்டாடுகிறோம்.

கவிஞர் ஜெயதேவனை நான் முகநூலுக்கு வந்தபிறகே அறிவேன். அவருடைய கவிதைகளின் வழியே தான் அவர் எனக்குப் பரிச்சயம். அவருடைய டைம்-லைனில் அவர் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கும் விதமும், எந்தவொரு மாற்றுக் கருத்தையும் நிதானமாக, மற்றவர்களின் கருத்துகளையும் பொருட்படுத்தி, வெளியிடும், எதிர்வினையாற்றும் தன்மையும் மதிக்கத்தக்கது.

அதேபோல் அவருடைய கவிதைகளும் _ இங்கே நான் பேச எடுத்துக்கொண்டுள்ள கவிதையும், எனக்கு அவருடைய ஃபேஸ் புக் பக்கத்தில் வாசிக்கக் கிடைத்த வேறு பல கவிதைகளும் _ அலங்காரப்பூச்சற்றவை; ஆழமானவை. அடர்செறிவான சொற்களாலானவை. நிறைய சிந்திக்கவைப்பவை. நிறைவான வாசிப்பனு பவத்தைத் தருபவை.


No comments:

Post a Comment