Wednesday, February 13, 2019

இலக்கியத் திறனாய்வும் இருக்கவேண்டிய தகுதியும்


Saturday, 09 February 2019 பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)

லதா ராமகிருஷ்ணன்

இலங்கையில் விமர்சன மரபு இல்லை என்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பது தொடர்பாய் பதிவுகள் இணையதள ஆசிரியர் ..கிரிதரன் தனது இதழில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த உரையின் சுட்டியையும் தந்துள்ளார். விமர்சனம் என்ற இந்த ஒன்று தொடர்பாய் சில கருத்துகளை இங்கே பகிரத் தோன்றுகிறது.  

இலக்கியத்திற்கு விமர்சனம் தேவை, விமர்சன மரபு தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லைஅதேசமயம், விமர்சகர் என்பவருக்கும் அதற்கான அடிப்படைத் தகுதிகள் சில உள்ளன என்பதையும் யாரும் மறுக்கவியலாது. அதேபோல், இலக்கிய விமர்சகராகத் தன்னை பாவித்துக்கொள்பவர் பொதுவெளியில் இலக்கிய விமர்சனம் குறித்துப் பேசும்போது ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைத் தன் வார்த்தைகளில் கையாளவேண்டியது அவசியம் என்பதையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இலக்கிய விமர்சனம் தொடர்பான எழுத்தாளர் ஜெயமோகனின் உரையைக் கேட்டேன். :[https://www.youtube.com/watch…] இலக்கியம் சார்ந்த ஒரு கருத்தை முன்வைக்க இத்தனை எகத்தாளமும் தடித்தனமும் அவசியமா? இலங்கைக் கவிஞர்கள் என 300 பெயர்கள் அடங்கிய் ஒரு பட்டியலை திரு பொன்னம்பலம் என்பவர் தந்ததாகக் குறிப்பிட்டு அதற்கு ஒரு பதில் எழுதியதாகவும் அதில்ஒரு நாட்டில் 200 நல்ல கவிஞர்கள் இருந்தால் அதுக்கு பூச்சிமருந்து கண்டுபிடித்து அழிக்கத்தான் வேண்டும். நாட்டுல சட்டம் ஒழுங்கு என்னாவது? மகளிருடைய கற்பு என்னாவது?” என்று பேசுகிறார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அளப்பரிய வருத்தத்தைத் தந்தது.  

அவர் வேடிக்கையாகப் பேசியதாக சிலாகிக்கவும், இலக்கியத்தில் பகடிக்கு இடமிருக்கிறது என்று நியாயம் பேசவும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மீது குறிப்பாக இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் வீசப்படும்போது அவர்கள் இதே பெருந்தன்மையோடு அவற்றை எதிர்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இலக்கியம் என்பது அடிப்படையாக மொழி சார்ந்தது. ஒரு மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் தங்களுக்குள் ஒத்துறவு உணர்வதும், சகோதரத்துவம் பேணுவதும் இயல்புஆனால், எழுத்தாளர் ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களுக்கென்று அங்கே விமர்சன மரபு இல்லை என்றும், இலக்கிய தரப்படுத்தல் இல்லையென்றும் அங்குள்ள எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள கோட்பாடுகளையும் அளவுகோல்களையும் விமர்சனங்களையும்தான் நாடவேண்டியிருக்கிறது எனவும், தமிழ்ப்படைப்பாளிகளை நாடுவாரியாகப் பிரிக்கிறார்இலக்கியத்தில் உலகத்தரம் என்று ஒன்று இருக்கிறது. இதில் உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களை இப்படி நாடுவாரியாகப் பிரித்துப்பேசுவது எப்படி சரியாகும்? பிரமிள் எந்த நாட்டுக்குச் சொந்தம்?

தமிழின் கவிஞர்கள், குறிப்பாக இலங்கைக் கவிஞர்கள் நடப்புச் சமூகச் சூழலில் எத்தனையோ புறக்கணிப்பினூடாகவும் , வாழ்வியல் நெருக்கடி ளினூடாகவும் கவிதை பால் கொண்ட ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக்கொண் டிருக்கிறார்கள். அவர்களைத் தன் வார்த்தைகளால் இத்தனை கேவலப்படுத்தியிருப்பது மகா கொடுமை. இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் அவற்றைப் பிரயோகிப்பவர்களின் calibreஐத் தான் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.


அரைமணி நேர உரையில் அந்த நான்கு வரிகள் தான் உங்களுக்குக் கேட்டதா என்று கேட்பதில் எந்தப் பொருளுமில்லை; எந்தப் பயனுமில்லை. அவர் உரை ஒரு குடம் பாலோ, வேறு எதுவோ - அந்த நான்கைந்து வரிகள் வெகு அநாகரீக மானவை. எழுத்தாளர்கள் எத்தனை நுட்பமாக மொழியைக் கையாள்பவர்கள். ஒரு பொதுவெளியில் ஒரு கருத்தை நயமாக, நாகரீகமாக முன்வைக்க முடியாதா என்ன? தெரியாதா என்ன? எல்லாம் முடியும். எல்லாம் தெரியும் - ஆனாலும் இப்படித்தான் பேசுவது என்றால்.....?

சிங்கப்பூர் இலக்கிய வரலாறை சீர்ப்படுத்த தன்னுடைய அரிய நேரத்தை அப்போது தான் மேற்கொண்டிருந்த அளப்பரிய வேலை சார் நெருக்கடிகளுக் கிடையே எழுத முற்பட்டதாகத் தெரிவிக்கிறார். காணொ ளியில்என்னுடைய பணிகளுக்கு மேலதிகமாகவெண்முரசு போன்ற ஒரு நாவல் எழுதிக்கொண்டிருந்தேன். கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தேன், சினிமா வுக்குஇன்று வெளிவந்திருக்கிற பிரம்மாண்டமான இரண்டு சினிமாக் களுக்கு எழுதிக் கொண்டிருந்தேன்என்பதாகவெல்லாம்விரித்துரைத்துஒரு தியாகசீல விமர்சகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார். பிரம்மாண்ட திரைப்படத்துக்கும் உலகத்தரமான திரைப்படம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் நமக்குத் தெரியாததல்ல. தன் விமர்சனத்தை எதிர்ப்பவர்கள் இலக்கியத் தரவரிசைப்பட்டியலில் தம்மால் என்றுமே இடம்பெற இயலாது என்பதைப் புரிந்துவைத்திருப்பவர்கள் என்றுவேறு முதலிலேயே சொல்லிவிடுகிறார். இவருடைய படைப்புகள் குறித்தும், விமர்சனங்கள் குறித்தும் இவர் என்றாவது பொருட்படுத்தி யிருப்பாரா? ஆனால், மற்றவர்கள் இவருடைய விமர் சனத்தை மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தரமற்ற கவிஞர்கள்; படைப்பாளிகள் என்பது அவருடைய பார்வை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வேண்டும்போது சுந்தர ராமசாமி, .நா.சு எல்லாம் நினைவுக்கு வருவதும், வேறு சமயங்களில் அவர்கள் வசைபாடப் படுவதும் கூட இவரொத்த self-appointed விமர்சகர்களுடைய மரபாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.  

இலங்கையில் விமர்சன மரபு இல்லை என்று பேசுபவர் ஒரு விமர்சகராக தான் எப்படி இயங்குகிறார் என்பதை எண்ணிப்பார்த்தால் நல்லது. எல்லாவற்றைப் பற்றியும் subjective ஆகக் கருத்துரைப்பது ஒருவரை விமர்சகராக்கிவிடாது.

விமர்சன மரபு என்பதற்கு நடப்பில் இன்னுமொரு அர்த்தமும் உண்டு. விமர்சனத்தின் அரசியல். இது இலங்கையில் எப்படியோ, தெரியாது. தமிழகத்தில் அதிகமாகவே, வெளிப்படையாகத் தெரியும் அளவு. இதில் இரண்டு போக்குகள் உள்ளன. ஒன்று, ஒற்றை வரியில்இதெல்லாம் எழுத்தேயில்லைஎன்பதாய் sweeping statements தருவது. அல்லது மிக அகல்விரிவாகப் பேசும் பாவனையில் அதே ஸ்வீப்பிங் ஸ்டேட்ஸ்மெண்ட் வரிவரியாய், பக்கம்பக்கமாய் தருவது. இதில் மூன்றாவது, மிக மிக எளிய விமர்சனப் போக்கும் உண்டு. ஒரு படைப்பைப் பற்றி, படைப்பாளியைப் பற்றி பாராமுகமாய் இருந்துவிடுவது

மாதிரிக்கு ஒன்று, வட சென்னையை சேர்ந்த கவிஞர்எந்தப் பொதுப்பட்டியலில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. தமிழ் மணவாளன், சொர்ணபாரதி, அமிர்தம் சூர்யா, ஆசு சுப்பிரமணியன் போன்றோர் தொடர்ந்து காத்திரமான, நவீன தமிழ்க்கவிதையை எழுதிவருபவர்கள். ஆனால், அவர்கள் பெயரை நான் எந்தவொரு தமிழ்க்கவிஞர் தரவரிசைப் பட்டியலிலும் கண்டதில்லை.
கவிஞர் ஆசு 
மேலும், சமகாலத் தமிழக விமர்சன மரபில் சுய அபிமானம், குழு அபிமானம், ஊர் அபிிமானம், சாதி அபிமானம், கருத்தியல் அபிமானம், கோட்பாட்டு அபிமானம், அரசியல் கட்சி அபிமானம், அரசியல் சார்பு அபிமானம், அடிப்பொடியார் ரக அபிமானம், அடுக்குகளாலான அபிமானம், ஆதிக்கநிலை (ஆணாதிக்க, பெண்ணாதிக்க) அபிமானம், அவசரகால (உடனடித் தேவையைக் கருத்தில் கொண்ட) அபிமானம், இந்தியா -எதிர்ப்பு  அபிமா னம்இந்துமத - எதிர்ப்பு அபிமானம், மோடி-எதிர்ப்பு அபிமானம், பார்ப்பன-எதிர்ப்பு அபிமானம் ஆகிய பலவகை அபிமானங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன

நாம் சிறந்ததாகக் கொள்ளும் எழுத்தைப் பற்றிக்கூட, எழுத்தாளர் உயிரோடிருந்த காலத்தில் எழுதாமல் அவர் மறைவுக்குப் பின், உயிரோடிருந்த காலத்தில் அவரைப் பொருட்படுத்தாதிருந்த பெரும் பதிப்பகம் மீள் பிரசுரம் செய்யும்போதுதான் பேசுவது என்பதானகால-தேச-வர்த்தமான அபிமானமும் புழக்கத்தில் இருக்கிறது

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எழுத்தின் மேல் கொண்ட ஆர்வமொன்றே காரணமாக கவிஞர்களும் கதாசிரியர்களும் இங்கேயும் எங்கேயும் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள்; உருவாகிக்கொண்டேயிருக் கிறார்கள். இனியும் இருப்பார்கள்

தமிழின் கவிஞர்கள், நடப்புச் சமூகச் சூழலில் எத்தனையோ புறக்கணிப்பினூடாகவும் , வாழ்வியல் நெருக்கடிளினூடாகவும் கவிதை பால் கொண்ட ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக் கொண் டிருக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது.

இதோ, இங்கே நிலவும்விமர்சன அரசியல் குறித்து எழுதும்போது நான் மதிக்கும் கவிஞர் பூமா ஈஸ்வர மூர்த்திக்கு விமர்சனாதிபதிகளிடமிருந்து உரிய கவனம் கிடைக்கவில்லையே என்ற என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அதற்கு அவரிடமிருந்து வந்த பதில் .

 கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி

என் கேள்வி
"பார்க்கப்போனால் உங்கள் பெயரைக் கூட கவிஞர்கள் குறித்த எந்த தரவரிசைப் பொதுப்பட்டியலிலும் கண்டதாக நினைவில்லை. ஆனால், நீங்கள் உங்கள் மண் சார்ந்த, எப்பொழுதும் முன்னிலைப்படுத்தப்படும் கவிஞர்களைவிட ஒரு மாற்றும் குறைந்தவரல்ல. இதற்கு உங்கள் கவிதைகளே சாட்சி.

கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்:
உண்மைதான் என்னுடைய பெயர் எந்த பட்டியலிலும் இல்லை ஆனால் இதற்கு அரசியல் அல்லது அரசியல் அல்லாத ஏதோ ஒரு காரணங்கள் என்று நான் முடிவுக்கு வரவில்லை அறியாமை தான் காரணம் என்று நான் நினைக்கிறேன் உதாரணமாக ரிஷியின் எழுத்துக்கள் எனக்கு பிடித்திருக் கிறது நம்பிக்கை அளிக்கிறது என்று ஒருவர் என்னிடம சொன்னால் நான் முதலில் தெரிந்துகொள்ள விரும்புவது இவர் ரிஷ்னுடைய எழுத்துக்களை எவ்வளவு தூரம் வாசித்திருப்பார் என்றுதான் எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கை தருகிறது என்று ஒருவர் சொன்னால் அவர் எவ்வளவு தூரம் ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை வாசித்திருப்பார் என்று நான் யோசிக்கிறேன்."

_
இந்த பதிலின் ஆழமும், தெளிவும்தான் கவிஞர்கள், நடப்புச் சமூகச் சூழலில் எத்தனையோ புறக்கணிப்பினூடாகவும், வாழ்வியல் நெருக்கடிளினூடாக வும் கவிதைபால் கொண்ட ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதை சாத்தியமாக்குகிறது.

*

No comments:

Post a Comment