Saturday, February 16, 2019

மலையும் மலைமுழுங்கிகளும் - 1 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும் 1
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

{சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு}



யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் 
ஆகாயமளாவ
அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்
படர்ந்திருந்தன பலவகை முட்கள்.


கைக்காசை செலவழித்து, மெய்வருத்தம்
பாராதொழித்து
உயிரைப் பணயம் வைத்து
கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம்
காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு
உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக்
குருதி பெருக
உடலின் அயர்வில் உயிர் மயங்க
மலையை வாகாய் சீரமைத்ததோடு
படிக்கட்டுகளையும் செதுக்கி முடித்தான்.


ஆர்வமாய் ஏறியவர்கள்
சிகரம் தொட்ட பின் சுற்றிலும் பார்த்தால்
காணக்கிடைத்ததெல்லாம் சொர்க்கம்!


நறுமணப்பூக்களும்
மூலிகை மரங்களும்
அதியமான் நெல்லிக்கனிகளாய்க் கிடந்தன!


அரிய புள்ளினங்கள்!
பரவும் தரிசனப் பேரொளி!


மாற்றான் சிந்திய வியர்வையில்
முன்னேறுவது எப்படி என்று
முப்பதே நாட்களில் கற்றுக்கொள்வதில்
கைதேர்ந்த சிலர்
விறுவிறுவென ஏறத்தொடங்கினார்கள்.


எல்லாவற்றையும் செல்ஃபியில்
சிக்கவைத்ததோடு
அருமருந்து மூலிகைகளையும்
அள்ளித்திணித்துக்கொண்ட பின்
கடைவிரிக்கத் தோதான இடத்தைக்
கச்சிதமாய்க் கணக்குப் பண்ணியவாறே
கீழிறங்குகையில்
காலந்தாக்கி சற்றே உடைந்திருந்த
ஒரு படிக்கட்டு முனையை
கவனமாய்ப் படம்பிடித்துக்கொண்டார்கள்.


கடைசிப்படியில் காலைவைத்ததுமே
கூவத்தொடங்கினார்கள் –
கேவலம் ஒரு படிக்கட்டைக் கூட
சரியாகக் கட்டத் தெரியவில்லை யென்று.


இன்னொருவன் மாங்குமாங்கென்று
உழைத்து
முதுகுடையத் தாங்கிப்பிடித்து
நிமிர்த்தி நிற்கவைத்த மலையைத்
தமக்கு வெள்ளிக்காசு தரும் சுற்றுலாத்தலமாக
மாற்றிக்கொண்டதோடு நில்லாமல்
மலையபிமானத்தோடு நடந்துகொண்டவனை
வசைபாடும் வித்தகம்
சில மெத்தப்படித்த மேல்தாவிகளுக்கே உரிய
’ஹை_ஃபை’ வர்த்தகம்.


அதுபற்றியும் பேசுமோ என்றேனும்
அவர்களின் ஏதாவதொரு 'பென்னம்பெரிய' புத்தகம்….?

No comments:

Post a Comment