Wednesday, January 30, 2019

வழியில் -‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


வழியில்
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)
 


மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின்
கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்....
தெரிவது இடிந்த சுவரில் காணும்
நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நிழலின்
நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின்
முனை மழுங்கிய பாதி கிழிந்த மஞ்சளோடிய புழுதியப்பிய
அழுக்குப் பிரதியின்
பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின்
மறதியாய் ஒன்று...
ஒரு கணம் உறைந்துநின்றதொரு
தருநிழலின்கீழ் சிறு இளைப்பாறலா.....?
அணுமேலமர்ந்தொரு பின்னோக்கிய ஒளிப்பயணமா?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசம் இருள்தானா?
இக்கணமென்பதொன்றா எண்ணிறந்ததா….?
இகம் பரம் எல்லாம் வெறும் கண்கணக்குதானா?
நகமும் சதையும் உணர்த்துவதைச் சொல்ல
நாலாயிரம் வரிகள் போதுமா?
ஆலுமா டோலுமா ஐஸாலங்கடி மாலுமா
அர்த்தமனர்த்தமெல்லாம் இருவேறுபோலுமா?
இன்னமுள காதங்கள்.....
முன்னேகவேண்டும்….
திரும்பவும் நடக்கத் தொடங்கியபோது
இருகால்களில் பெருகும் வலி
இருப்பின் அருமையாய்....


No comments:

Post a Comment